உலகின் மிகப் பெரிய நைஜிரியா வலைப் பதிவர் சங்க மாநாடு (Regn. No. 00001/002/xabc/2007), அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாள் : 30-05-2009
நேரம் : மாலை 4.00 மணி முதல் 8.00 வரை
இடம் : அபுஜா
கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்க்காக மாநாடு கூட்டப் படுகின்றது.
1. சங்க உறுப்பினர் சந்தாத் தொகையை உயர்த்தலாமா (அ) தற்போதுள்ள நிலையிலேயே தொடரலாமா... (தற்போது வருடத்திற்கு US$ 100 ஆக உள்ள சந்தாத் தொகையை US$ 100 ஆக உயர்த்தலாம் என முடிவு செய்யக்கூடாது்)
2. சங்க உறுப்பினர்த் தொகையைச் செலுத்தாத உறுப்பினர்களை உடனே சந்தாத் தொகையை செலுத்த வேண்டுகோள் விடுத்தல்.
3. சங்க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்று செயல் வீரர்களைத் தேர்ந்தெடுத்தல். (இப்போதுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சங்கத்தின் விதி் எண் 15(அ(i)) அனுமதிக்கின்றது. மேலும் ஒருவரே இரண்டு பதவிகளில் இருப்பதும் சங்கத்தின் விதி 99(ஓ(iii)) அனுமதிக்கின்றது)
4. சங்கத்திற்க்காக தனிக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவது சம்பந்தமாக.
5. வருடாந்திர கணக்கு, வழக்குகளை சமர்பித்தல். (இதுவரை எந்த சந்தாவும் வசூலாகவில்லை என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டு இருக்கின்றோம்)
6. தலைவர், பொதுச் செயலார், பொருளாளர்களுக்கு சந்தாத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கும் தீர்மானம். இது முக்கிய தீர்மானம் என்பதில் எந்த உறுப்பினறுக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
7. நைஜிரியா பதிவர் சங்கம் என்று இருக்கும் பெயரை அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது.
உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அழைப்பையே தங்களின் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
இப்படிக்கு தங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கும்
தலைவர்
+234 54321 54321
இராகவன்
பொதுச் செயலாளர்
+234 12345 12345
அணிமா & இராகவன்
பொருளாளர்கள்
(இரண்டு பொருளார்கள் - சங்கம் நேர்மையானது என்பதற்கான சாட்சி இது)
டிஸ்கி :
(முதலில் பி.கு. என்றுதான் போடலாம் என்று நினைத்தோம் - வலையுலக தர்மம் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் டிஸ்கி எனப் போடப்பட்டுள்ளது)
அ) இதுவரை இரண்டு பேர்தான் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். (அணிமா & இராகவன்) சேராத அனைவரும் உடனடியாக உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
ஆ) மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் அழைத்து நாங்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. தலைவரும், பொதுச் செயளாளரும் பொறுப்பல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். (அலுவலகப் பணிச் சுமைக்காரணமாக தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்).
இ) தேவையான சிற்றுண்டி, காபி, தேனீர் வசதிகளுக்கு, ஸ்பான்சர்கள் வரவேற்க்கப் படுகின்றார்கள்.
ஈ) முதலில் சேரும் உறுப்பினர்களுக்கு சங்கத்தில் பொறுப்புகள் அளிக்கப்படும் என்பதை தெரிவிக்க கடைமைப் பட்டுள்ளோம். இந்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக சங்கத்தில் உறுப்பினர்களாக சேருமாறு வலைப்பதிவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். சேரும் உறுப்பினர்கள் முதலில் சந்தாத் தொகையைச் செலுத்திய பின்னர் தான் பொறுப்புகள் அளிக்கப்படும் என்பதை மிக மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
உ) நைஜிரியா வலைப் பதிவர் சங்கத்தில் சேருவதற்கு, நீங்கள் நைஜிரியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் என்று பெயர் மாற்றப் பட இருப்பதால், உலகத்தில் நீங்க எங்கு இருந்தாலும் இங்கு தாங்கள் உறுப்பினர் ஆக முடியும்.
முன்னாள், இன்னாள் மற்றும் வருங்கால பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.