Saturday, November 21, 2009

ஜஸ்ட் இக்னோர் இட்...



அது ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. அங்கு அவன்... (எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..) ஒரு பர்ச்சேஸ் மேனேஜர். அவனுக்கு 15 வருடம் பல கம்பெனிகளில் வேலைப் பார்த்த அனுபவம் இருந்தாலும், பர்ச்சேஸ் என்பது அவனுக்குப் புதியது.

அந்த கம்பெனியில், அவனுக்கு உதவியாக, 6 பேர் இருந்தனர். அதில் 4 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள்.

அந்த கம்பெனியின் முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் சேர்ந்து காசுப் போட்டு, பரிசு வாங்க தீர்மானித்தனர்.

என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு.

சரி எக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து ஒருத்தர், வேறு சில டிபார்ட்மெண்டில் இருந்து சிலர் என நான்கு பேர் பரிசுப் பொருள் வாங்கச் செல்லலாம் என முடிவு செய்தனர்.

அவன் (அதாவது எக்ஸ்), வேலை கூடுதலாக இருந்ததால், தன்னுடைய உதவியாளர் ஒருவரை அவர்கள் கூட அனுப்பினான்.

அந்த உதவியாளர், கொஞ்சம் அல்டாப் பேர்வழி. இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் அவரை பரிசுப் பொருள் வாங்க அனுப்பினான். அவர்களும் ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து பரிசு பொருளை வாங்கி வந்தனர். வரும் போது, பரிசு கொடுப்பதற்கு ஏதுவாக பேக் செய்து, பொருள் என்னவென்று தெரியாத மாதிரி கொண்டு வந்தனர்.

கூட வேலைச் செய்த மற்றவர்களுக்கு என்ன பரிசுப் பொருள் என அறிய ஆவல். அதனால் அவர்கள் பரிசுப் பொருள் வாங்கப் போனவரை என்ன பரிசுப் பொருள் என்று கேட்கத் தொடங்கினர். அவரும், பிரமாதமான பரிசுப் பொருள், சூப்பரா இருக்கு, ரூ x,xxx/- ஆச்சு, என்றெல்லாம் சொல்லுகின்றாரேத் தவிர, என்ன பரிசுப் பொருள் என்றுச் சொல்லவேயில்லை. ஒருவர் வாய் திறந்தே கேட்டு விட்டார். அதற்கு அவர், பரிசுக் கொடுக்கும் போது முதளாலி திறந்து காண்பிப்பார் அப்ப பார்த்துக்கோங்க, அது சஸ்பென்ஸ் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

எக்ஸ் அப்போது கூட, அவரிடம் என்ன பரிசுப் பொருள் என்றுக் கேட்கவில்லை. அந்த உதவியாளரும் எக்ஸ் எதாவது கேட்பேரா என்று எதிர்ப் பார்த்தார். நேரம் கடந்தது. அதைப் பற்றி எக்ஸ் கவலைப் படவேயில்லை. அவர் தன் வேலையில் கண்ணும், கருத்துமாகவே இருந்தார்.

அந்த உதவியாளர், கொஞ்ச நேரம் கழித்து எக்ஸிடம் வந்தார்...

அவர் : சார் என்ன பரிசுப் பொருள் என்று நீங்கள் கேட்கவேயில்லையே ?

எக்ஸ் : என்ன அவசரம், நாளைக்கு கொடுக்கும் போது தெரிந்துவிடப் போகின்றது.

அவர் : எல்லோரும் கேட்டாங்க, ஆனால் நீங்க கேட்கவில்லையே?

எக்ஸ் : அதுதான் நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றதே? தெரியவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடப் போகின்றாதா என்ன?

அவர் : இல்ல சார் டிபார்ட்மெண்ட் சீஃப் நீங்க ஒன்னுமே கேட்கவேயில்லையே?

எக்ஸ் : ஆமாம் டிபார்ட்மெண்ட் சீஃப் நான் தான். இல்லை என்றுச் சொல்லவேயில்லையே? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.

அவர் : என்ன சார் நீங்க என்ன பரிசுப் பொருள் என்று கேட்கவே மாட்டேன் என்கின்றீர்களே?

எக்ஸ் : அதான் சொன்னேனே, நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றது. இப்ப என்ன அவசரம்.

அவர் : அது வந்து சார், சந்தன மரத்தில் செதுக்கிய அழகான சிற்பம் சார்.

எக்ஸ் : அப்படியா .. ரொம்ப சந்தோஷம்..

உதவியாளருக்கு முகம் தொங்கிப் போயிட்டது. என்னாடா இந்த மனுஷன் இப்படி இருக்கின்றாரே என்று. அந்த உதவியாளர் வேறு விஷயமாக வெளியே போன போது, மற்றொரு உதவியாளர் எக்ஸிடம் வந்து, சார், நாங்க எல்லாரும் கேட்ட போது, பதில் சொல்லாமல் எதோ எதோ சொன்னார்கள். நீங்க எப்படி சார் அவங்களையே சொல்ல வச்சீங்க அப்படின்னாங்க..

எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...

எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...

எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..

பொறுப்பி :
1. பாதி உண்மை, மீதி புனைவு

2. வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.

நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,

இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.

3. பொறுப்பி 2 கவிதை என்பதை இங்கு கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

4. கவிதை எழுத எனக்கு ரோல் மாடல் - அன்பு அண்ணன் தண்டோரா.

Tuesday, November 17, 2009

பத்துக்குப் பத்து.. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்



பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒரு சங்கிலித் தொடர் இடுகை, வலைப் பதிவுகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.தொடங்கியவர் திரு. மாதவராஜ் அவர்கள். இந்த சங்கிலித் தொடர் இடுகையைத் தொடர என்னை அழைத்து இருப்பவர் அன்புத் தம்பி “ஷஃபி” உங்களில் ஒருவன்.

இந்த பிடித்தது, பிடிக்காததுப் பற்றி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இன்று எது பிடிக்கின்றதோ அது நாளை பிடிக்காததாக மாறி விடுகின்றது. பிடிக்காதது பிடித்ததாக மாறி விடுகின்றது. மாறுதல் என்ற வார்த்தை ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் மாற்றத்துகுரியது.

இன்று நான் பிடித்தது, பிடிக்காதது, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று போடப்படுவது அனைத்தும் இன்றைய மன நிலையில் போடப்படுகின்றது.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்.


இந்த இடுகையைப் போடும் போது பின் வரும் விதி முறைகளையும் ஏற்படுத்தி வைத்து இருக்கின்றனர். அவை

  1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்..
  2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
  3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்

குறிப்புகள் :

  1. பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்
  2. கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம்


இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல் தலைவர்கள்

பிடித்த‌வ‌ர்க‌ள் : யாருமே இல்லை

பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இரண்டிற்கும் காரணம் ஒன்னுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.

2. எழுத்தாளர்கள் :

பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)

பிடிக்காதவர்கள் : யாருமே இல்லீங்க.. (சில சமயம் எழுதப்பட்ட கதைகளோ அல்லது அதன் கருவோ பிடிக்காமல் போகலாம் - அதனால் அது அவர்களைப் பிடிக்காது என்று சொல்லமுடியாது)


3. திரைப்பட பாடலாசிரியர்கள் :

பிடித்தவர்கள் : வைரமுத்து (இவரின் கற்பனை வளம் எனக்கு பிடித்தது), கவிஞர் வாலி... (என்னைக் கட்டிப் போடும் வரிகள்)

பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும் (வாலி, வைரமுத்து குத்து பாட்டு எழுதும் போதும் எரிச்சலாகத்தான் வ்ரும்...)

4. நகைச்சுவை நடிகர் :

பிடித்தவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசாமல், குட் காமெடியுடன் (குட் காமெடி, பேட் காமெடிக்கு ஐயா லதானந்த அவர்களின் இந்த இடுகையைப் பார்க்கவும்) நடிக்கும் போது அனைவரும்

பிடிக்காதவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசி நடிக்கும் அனைவரும். இந்த மாதிரி காட்சிகளைப் பார்க்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரிகின்றது.

5. நடிகர் :

பிடித்தவர்கள் : சரியாக நடிக்கும் போது - யாராக இருந்தாலும்..

பிடிக்காதவர்கள் : நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...

6. நடிகை :

பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.

பிடிக்காதவர்கள் : இன்று திரைத் துறையில் இருப்பவர் அனைவரும்

7.தொழில் அதிபர்க‌ள் :

பிடித்தவர்கள் : வேணு சீனிவாசன்... சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர். அங்கு வேலை பார்த்ததால் அவரைப் பற்றி நன்கு தெரியும்.

பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்


8. இயக்குனர் :

பிடித்தவர்கள் : இதில் குறிப்பிட்டு இவர்தான் என்று சொல்லத் தெரியவில்லை. படம் பிடிக்கும் போது, அவரைப் பிடிக்கின்றது.. உதாரணம் - பாரதிராஜா - முதல் மரியாதை படத்துக்காக அவரை ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதவர்கள் : ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.


9. பதிவுலகம் :

பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.


10. திரைப்படங்கள் :

பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி

பிடிக்காதது : எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்.


இந்த தொடர் இடுகையை தொடர யாரையும் நான் அழைக்கவில்லை.

காரணம் - கிட்ட தட்ட எல்லாரும் எழுதியாச்சு...

அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்.

Monday, November 16, 2009

என்ன தலைப்பு வைக்க..






வேளாச்சேரியில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் உள் சாலை.. ஆரம்பமே... குப்பை கூளத்துட்டம் ஆரம்பிகின்றது.



மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரிக்கரை ஓரமாக கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள் - இது ஒரு சாம்பிள் தான்.. ஏரிக்கரை ஓரமாக சென்றீர்கள் என்றால் இது மாதிரித்தான் இருக்கும். அழகான ஏரி... இதன் அருமை தெரியாமல் இப்படி வீணடிக்கின்றார்களே என்ற வருத்தம்தான்.




சென்னையில் அண்ணா சாலையில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த படம் எதற்காக என்றுதானே கேட்கின்றீர்கள்.

செக்யூரிட்டி அறை அந்த கட்டடத்தை விட்டு வெளியே, மக்கள் நடக்கும் நடை பாதையின் மேல் அமைந்துள்ளது.

இந்த கட்டடம் நந்தனம் சிக்னலுக்கும், எஸ்.ஐ.இ.டி. சிக்கனலுக்கும் இடையில் கருமுத்து மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது.

கட்டடம் கட்டும் போதே இதை அரசு அதிகாரிகள் கவனிக்க மாட்டார்களா.. இத்தனைக்கும் இது மிக முக்கியமான, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் செல்லும் வழியில் இருக்கின்றது.

இதே போல், எத்தனைப் பேர் கவனித்து இருப்பீர்கள் எனத் தெரியாது... சென்னை VGP யின் வாயில், நடை பாதையின் மேல்தான் அமைந்து இருக்கு. எத்தனையோ ஆட்சிகள் வந்துப் போயிருக்கு, நானும் பல வருடங்களாக கவனித்து இருக்கின்றேன், இது வரை யாருமே, எந்த ஆட்சியாளருமே இதை பற்றி கேள்வி கேட்டதில்லை..

ஆண்டவருக்கே வெளிச்சம்.

Saturday, November 14, 2009

அகர வரிசை சங்கிலித் தொடர் இடுகை...


உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. சரி நமக்கும் இடுகை எழுத விஷயம் ஒன்னும் கிடையாதா, இதுதாண்டா சாக்கு அப்படின்னு, இந்த சங்கிலித் தொடர் இடுகையை கெட்டியா பிடிச்சுகிற வேண்டியதா இருக்குங்க.

சும்மா (நம்புங்க வலைப்பூ பெயர்ங்க..) அப்படின்னு சொல்லிகிட்டு, பொளந்து கட்டிகிட்டு இருக்கும் கவிதாயினி, தேனம்மை லஷ்மணன் அவர்கள், சுமார் 15 நாட்களுக்கு முன் இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்து இருந்தார்கள். இன்னிக்கு எழுதலாம், நாளைக்கு எழுதலாம் என்று நாட்களை கடத்தியாச்சுங்க. சோம்பேறித்தனம் என்று இல்லை... வேலை பளு கூடுதல்தாங்க காரணம். ஒரு வழியா இன்னிக்கு முடிவு பண்ணி இந்த தொடர் இடுகையை தொடர்கின்றேன்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்க ஆசைப் படுகின்றேன்... இந்த தொடர் இடுகைக்கு நான் யாரையும் அழைக்கப் போவதில்லை... காரணம் என்ன என்கின்றீர்களா.. எனக்குத் தெரிந்த எல்லோரும் எழுதிட்டாங்க... சிலர் கூப்பிட்டாலும் எழுத மாட்டாங்க. அதனால், மீ த லாஸ்ட்...

1. A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க...

2. B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்‌ஷே இல்ல

3. C- Cake or pie - பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..

4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி

5.E - Essential items you use everyday - மூளை அப்படின்னு சொல்லுணும் ஆசை.. ஆனால் இருப்பவங்கதான் அதைச் சொல்ல முடியும் அப்படிங்கிறதால, எதையெல்லாம் தினமும் உபயோகப் படுத்துகின்றேனோ, அது எல்லாம்.

6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...

7. G - Gummy bears or worms - இது சத்தியமா என்ன என்று புரியலை.. அதனால் Pass..

8. H - Hometown - எந்த ஊரைச் சொல்ல... படிச்சது கும்பகோணம்.

9. I - Indulgence - இது வேறாயா... அப்படி ஒன்னும் கிடையாது

10. J - January/Feruary - இரண்டுமே... தங்கமணி பிறந்த நாள் ஜனவரி.. என்னோடது பிப்ரவரி அதனாலத்தான்

11. K - Kids and their names - இளவரசு ஒருவர் மட்டும் தாங்க - அரவிந்த்

12. L - Life is incomplete with out - அன்பு

13. M - Marriage date - நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)

14. N - Numberof siblings - 2 அன்பான அக்காக்களும் 2 அன்பான அண்ணன்களும்

15. O - Oranges or Apples - எது கொடுத்தாலும் எனக்கு ஓகே

16. P - Phobias/ Fears - பயம் அப்படிங்கிறத பார்த்து பயம்

17. Q - Quotes for today - இரண்டு சொல்ல ஆசைப் படுகின்றேன்

ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.

BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS (இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது - ரொம்ப பிடித்தது)

18. R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்

19. S - Season - Four season

20. T- TAG 4 PEOPLE - யாருமில்லை (உண்மை என்ன என்றால் யாரும் கிடைக்கவில்லை...)

21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்

22. V - vegetables you dont like - சைவச் சாப்பாடுன்னு ஒன்னு கிடைச்சா போதும் அப்படின்னு இருக்கோம் .. இதுல பிடிச்சது, பிடிக்காது என்று எல்லாம் சொல்லமுடியுமா என்ன..

23. W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..

24. X - Xrays you had - அது நிறைய இருக்குங்க... வருஷா வருஷம் எடுப்பது என்றில்லாமல், அவ்வப்போது முதுகு, மார்பு, கழுத்து என்று நிறைய இருக்கு..

25. Y - Your Favourite Food - சைவ உணவு வகைகள்

26. Z - Zodiac Sign - மகரம் / Acquarian


அன்பிற்கு உரியவர்கள் - நான் அன்பு செலுத்துபவர்கள், என் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும்

ஆசைக்குரியவர் - அன்பு மனைவியும், ஆசை மகனும்

இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்

ஈதலில் சிறந்தது - பசித்தவருக்கு உணவும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

உலகத்தில் பயப்படுவது - கூட இருந்தே குழி பறிக்கும் ஆசாமிகள்

ஊமை கண்ட கனவு - அது அவரைத்தாங்க கேட்கணும்

எப்போதும் உடன் இருப்பது - உயிர் (இப்போதைக்கு...) பின்னர் - நாம் செய்த நல்ல காரியங்கள், தான தர்மங்கள்

ஏன் இந்தப் பதிவு - கூப்பிட்டு இருக்காங்க - ஏமாத்தக்கூடாது என்ற நல்ல எண்ணம் தாங்க

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - நல்ல விஷயங்கள்.. பெரியோர்களின் வாழ்த்துகள்

ஒரு ரகசியம் - ரகசியம் .. பரம ரகசியம்.. இரண்டாவது ஆளுக்கு தெரிஞ்சா அது ரகசியமே இல்லை

ஓசையில் பிடித்தது - குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..

ஒளவை மொழி ஒன்று - ஆறுவது சினம்..


பொறுப்பி :-

இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் ஐம்பது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் 50 வரை போட்டாச்சு...

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...




நண்பர் இளைய பல்லவன்(ர்), பட்டய கணக்கர், காஞ்சித்தலைவன் அவர்கள் ஒரு தொடர் இடுகைக்கு அழைத்துள்ளார், நம்மளையும் நம்பி இந்த உலகம் தொடர் இடுகைக்கு அழைப்பதால், அதை மறுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த தொடர் இடுகை..

எல்லா கேள்விகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகின்றேன். இந்த பதிவை தங்கமணி அவர்களும் படிப்பதால், உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னைப் பற்றி முக்கியமாக சொல்ல ஒன்றுமே இல்லீங்க. 44 வயசு. 1992 ல் திருமணம். அரவிந்த் என்று ஒரே ஒரு மகன். இந்தியாவில், ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, லக்னோ, சென்னை என்று பல ஊர்களில் வேலை. வெளி நாட்டில் சைனா, கத்தார், தற்போது நைஜிரியாவில் கணக்குப் பிரிவு, மேலாளர் மற்றும் அட்மின் பிரிவின் உதவி மேலாளராகவும் இருக்கின்றேன். (சிறு குறிப்பு என்று கேட்டதால் இவ்வளவுதாங்க..)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. அக்காவின் தலை தீபாவளிக்கு அவர்கள் வாங்கி வந்த வெடிகள் மறக்க முடியாத தீபாவளிதாங்க. அப்போது கிருஷ்ணர் வெடி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து, அப்போது அது வெடித்துவிட்டது. நல்ல வேலையாக கையில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் அப்பா அடிச்ச அடியில் முதுகு பழுத்துவிட்டது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

நைஜிரியாவின் தலைநகர் அபுஜாவில்தாங்க.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இங்கு இந்தியர்கள் தங்களுக்குள் வீட்டிலேயே கொண்டாடும் தீபாவளிதாங்க. வெடி வெடிக்க இயலாது. கெய்சர் சுடு தண்ணி குளியல், சாமி கும்பிடுதல், புதுத் துணி போட்டுகிட்டு அலுவலகத்திற்கு போயாச்சு.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

ஜூலை மாசம் இந்தியா போயிருந்த போது, குளோபசில் புதுத்துணிகள் வாங்கி வந்ததுதாங்க. என்ன ஒரு கஷ்டம், சைஸ் 34 என்று கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தால் ரொம்ப லூஸ் ஆகியிருக்கு. நான் இளைச்சு போயிட்டேனா, இல்ல சைஸ் 34 போட்டு பெரிய சைஸ் கொடுத்துட்டாங்களான்னு பார்க்கணும்.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

மிக்சரும், செவன் கேக், குளோப்ஜாமூன் எல்லாம் வீட்டில் செய்தார்கள்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

பலருக்கும் தொலைப் பேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அலுவலகம் போயாச்சுங்க. மாலை நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு பல நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்கள் கூட உணவு உண்டு சந்தோஷமாக பொழுது கழிந்தது. தொலைக் காட்சி என்றால் இங்கு ஜெயா டிவி, TBO, ஏசியா நெட், கைரளி என நான்கு டிவித்தான் தெரியும். சில ஹிந்தி சேனல்கள் உண்டு. அவ்வளவாக புரியாததால் பார்ப்பதில்லை. அலுவலகம் இருந்ததால் எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

விசேஷங்கள் அன்று உதவி என்று எதுவும் செய்வதில்லீங்க. எப்போது எல்லாம் முடிகின்றதோ, அப்போது உதவி செய்வேன். பல தனிப்பட்ட காரணங்களினால் எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருக்கின்றேன்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அண்ணன் வானம்பாடி அவர்கள் - இவரின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. அஷ்டாவதானி என்று இவரைச் சொல்லலாம். நான் அடிக்கும் கும்மிகளை சந்தோஷமாக ஏற்றுக் கொள்பவர் என்பது ஒரு காரணம்.

தம்பி நேசமித்ரன் - கவிதையின் புது பரிமாணத்தை எனக்கு உணர்த்தியவர். ஒரு சீரியசான இடுகையில் கும்மி அடிச்ச போதும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர். மேலும் பழக இனிமையானவர்.

சும்மா - பேருதான் சும்மா. வலைப்பூவில், தேனம்மை லஷ்மணன் அவர்களின் கவிதைகள் தேனில் தோய்த்து, சக்கரை பாகில் வடித்திருப்பார். காதலையும், பூக்களையும் இணைத்து கவிதையாக வடித்திருப்பார். அருமையான கவிதைகள்.

ராகவன் - வலைப்பதிவில் சமீபகாலமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். அழகான கவிதைகள். நெஞ்சைத் தொடுக் கவிதைகள். இவரின் இன்றைய பிள்ளைக்கலி கவிதை நெஞ்சைத் தொடுகின்றது. இவரையும் இந்த தொடர் இடுகை எழுத அழைக்கின்றேன். எங்க இருவருக்கும் பெயர் பொருத்தம் மட்டும் தாங்க. அண்ணன் கவிஞர். கவி மழைப் பொழிகின்றார். இவரின் மற்றொரு கவிதை குரல் குடித்தனம். படித்துப் பாருங்க அவரின் பெருமை புரிய வைக்கின்ற மற்றொரு கவிதை.

இன்னும் சிலரை அழைக்க ஆசையாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் நாமே எல்லோரையும் அழைத்து விட்டால், மற்றவர்களுக்கும் ஆள் கிடைக்க வேண்டுமே என்ற காரணத்தினால், இதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.

Tuesday, October 27, 2009

படங்கள்


நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சில படங்கள்..



இந்தப் பாலத்தை படம் பிடித்த காரணம்... REBUILT 1937 - 72 வருட பழமையான பாலம்...



தண்ணீரும், அருவிகளும் என்றுமே அழகு. இந்த சிறு அருவியைப் பார்க்கும் போது ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவுக்கு வந்தார். அருவி என அழகான சொல் இருக்க நீர்வீழ்ச்சி என பலரும் சொல்லுகின்றனர் என்பார். Waterfalls என்பதை தமிழ் படுத்திவிட்டனர் என்றும் சொல்லுவார்.



குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் வழி. நன்றாக பராமரித்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றிய இடம்.



குன்னூரில் ஒரு தேயிலைத் தோட்டம்... (தோட்டம் என்பது சரியா?)


என்ன கோபமோ தெரியவில்லை... முகத்தை காட்ட மறுக்கின்றார்.


பொதிகை மலைத் தென்றலில் தவழ்ந்து வரும்... என்ற பாட்டு ஞாபகத்து வரவில்லை?



தாயன்புக்கு ஈடு இணை உண்டோ?



குன்னூர் செல்லும் வழியில் சும்மா கிளிக்கியது. இயற்கை என்றுமே அதிசயம்தான்.



கோவை - பொள்ளாச்சி சாலை. சாலையின் அகலம் குறைவாக இருந்தாலும் நன்றாக பராமரிக்கப் பட்டு இருக்கின்றது.




தென்னந்தோப்பு... அழகு .. கோவை - பொள்ளாச்சி சாலையில் எடுக்கப்பட்டது.


மேலும் படங்கள் ... உண்டு என நினைக்கின்றேன்....

Sunday, October 25, 2009

பாசப் பறவைகள் பாகம் - 7 (Final)

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு ஜூலை 6, 2009.

ஜூலை 6, 2009, குன்னூரில் இருந்து காலை 9 மணியளவில் கிளம்பி, திருச்சிக்கு ஈரோடு வழியாகத்தான் செல்வதாக இருந்தேன். எப்போதும் போல் வடகரை வேலன் அண்ணாச்சியை தொடர்பு கொண்டு வழியைக் கேட்டுக் கொண்டு பின் போகலாம் என்று, அவரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் திருப்பூர் வழியாக போங்க. ரோடு நல்லா இருக்கும். அப்படியே திருப்பூர் பதிவர்களையும் சந்திக்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். வடகரை வேலன் அண்ணாச்சிக்கு நன்றி. சொன்னதோடு மட்டுமல்லாமல், பரிசல் காரன், வெயிலான் இருவரது தொலைப்பேசி எண்களையும் கொடுத்து அவர்களுக்கும் என் வருகையைப் பற்றி தகவலும் தெரிவித்தார்.

ஓவர் டு தெ டெலிகான் வித் பரிசல் அண்ட் வெயிலான்.

அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களிடம் தொலைப்பேசி எண் கிடைத்ததும், முதலில் அழைத்தது நண்பர் பரிசல் காரன் அவர்களைத்தான். அவர் அவசியம் வாங்க, பார்க்கலாம் என்றுச் சொன்னார்.

அடுத்து நண்பர் வெயிலான் அவர்களை அழைத்தேன். அண்ணே, திருப்பூர் அருகில் வந்தவுடன் அழையுங்கள். வழிச் சொல்லுகின்றேன் என்றுச் சொன்னார்.

சென்னையில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பர்ச்சேஸ் மேனேஜராக வேலை செய்த போது, பல தடவை திருப்பூர் சென்று இருக்கின்றேன். அப்போதெல்லாம், கோவையில் தங்குவேன். அங்கிருந்து கம்பெனி பி.ஆர்.ஓ நான் போக வேண்டிய இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று திரும்பி கொண்டுவந்து விடுவார். அதனால் வழிப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை.

திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. டையிங், வாஷிங், பிரிண்டிங், எம்பிராடய்ரி எல்லாம் சென்னையை விட மலிவாக கிடைக்கும். சென்னையில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரை நாடுவதற்கு காரணம் இதுதான் என நினைக்கின்றேன். மேலும் தெரிந்தவர்கள் விவரமாக தெரிவிக்கவும்.

மதியம் 12 மணியளவில் திருப்பூரை நெருங்கியபின், நண்பர் வெயிலானை அழைத்தேன். அண்ணே எங்க இருக்கீங்க என்று கேட்டார். எப்போதும் போல் நான் வரும் வழியை சொல்லி அவரைக் குழப்பினேன். பின்னர் ரயில் நிலையம் செல்லும் வழி என்றுப் போட்டு இருக்கு அப்படின்னு சொன்னேன். அண்ணே நேரா வாங்க, உங்க வண்டி நம்பர் என்ன வென்றுச் சொல்லுங்க என்றுச் சொன்னார். நம்ப வண்டி நம்பரையும், கலரையும் சொன்னேன். ரயில் நிலையம் அருகில் வரும்போது, நண்பர் வெயிலான் தொலை பேசியில் அழைத்து அண்ணே உங்க வண்டியைப் பார்த்துட்டேன், அப்படியே ஓரம் கட்டுங்க என்றுச் சொன்னார்.

அவரும் அவருடைய நண்பர் தேவராஜனும் எங்களை அழைக்க வந்திருந்தனர்.

பின்னர் மதியச் சாப்பாட்டுக்கு எங்கு போவது என்று பலரை கூப்பிட்டு கேட்டு, அரோமா ஹோட்டலுக்கும் கூப்பிட்டுக் கொண்டு சென்றார்.

அங்கு சென்ற பின் நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், இராமன் குட்டி மூவரும் வந்தனர்.

பரிசல் அவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருப்பதால், எங்களை உணவருந்த ஆரம்பிக்குமாறும், பின்னர் அவர் வந்து சேர்ந்துக் கொள்வதாகவும் சொன்னார்.

நாங்க சாப்பிட்டு முடிச்ச பின்பும் பரிசல் அவர்கள் வர தாமதமானது. அன்று ஒரு ஷிப்பிங் இருப்பதால், குவாலிட்டி செக்கிங் போய் கொண்டு இருப்பதாகவும், அதனால் தான் தாமதம் என்றும் சொன்னார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.

அங்கிருந்து கிளம்பும் போது பரிசல் அவர்களும் நிறைய நேரம் அளவாவ முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தொலைப்பேசியில் உரையாடும் போதும் அவருக்கும் அந்த வருத்தம் இருந்ததை உணர முடிந்தது.


வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.

பின்னர் அங்கு அரோமா ஹோட்டல் வாசலில் கிட்டதட்ட 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, திருப்பூரில் சில டி-சர்ட் வாங்க வேண்டும் என்றுச் சொன்னேன்.

பரிசல் அவர்கள் வருவதற்கு முன் நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம். பின்னர் ஒரு வழியாக பரிசல் அவர்கள் கம்பெனியில் எதோ சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக வந்துச் சேர்ந்தார்.
நண்பர் வெயிலானும், தேவராஜன் அவர்களும் கூடவே வந்து இருந்து, எல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அரவிந்திற்கு ஒரு சட்டை வாங்கி பிரசண்ட் செய்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு, மிகச் சிறிய நேரம் என்றாலும், மிக அழகாக அமைந்தது.

மிக்க நன்றி திருப்பூர் நண்பர்களே.

சில படங்கள் தங்கள் பார்வைக்காக.


நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், பரிசல்காரன், வெயிலான், நான், இராமன் குட்டி (இவர் இன்னும் ப்ளாக் ஆரம்பிக்க வில்லை).



மேலுல்ல வரிசையில் பரிசல்காரன் அருகில் அமர்ந்திருப்பவர், வெயிலான் அவர்களின் நண்பர் தேவராஜன்.

பின் திருப்பூரில் இருந்து சுமார் 4.30 மணியளவில் கிளம்பி, கரூர் வழியாக திருச்சியை அடைந்த போது, இரவு மணி 8.30. கரூர் திருச்சி சாலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ் நாட்டில் நான் பயணப்பட்ட இடங்களிலே, இதுதான் மிக மட்டமான சாலையாக இருந்தது.

பல பதிவர்களையும் சந்திக்க ஆசைத்தான். முக்கியமாக அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுடன் தொலைப் பேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அடுத்த முறை இந்தியா செல்லும் போது சந்திக்க வேண்டும். அதிஷா, லக்கிலுக் இவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். அதுவும் என்னுடைய பல தனிப்பட்ட வேலைகளால் தடைப்பட்டுவிட்டது.

இந்திய பயணத்தில் வலைப்பதிவர்கள் பலரையும் பல இடங்களில் சந்தித்து, அவர்களுடன் அளவாவியது, அவர்கள் காண்பித்த கள்ளமில்லா அன்பு என்னை மிகவும் நெகிழவைத்தது என்னவோ நிஜம்.

இந்தியவில் இருந்து திரும்பிய பின், நைஜிரியாவின் பிரபல, பேமஸ், சூப்பர் பதிவர், என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா தம்பியுடன் சந்திப்பு மிக கோலாகலமாக நடந்தது. இந்தியப் பிரயாணம் பற்றி தம்பி விஜாரித்தார். எல்லாம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்ததுப் பற்றி சந்தோஷப்பட்டார். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது.

அன்பு காண்பித்த பதிவர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும் பல.

இதுவரை இந்த தொடர் இடுகையைப் படித்து, பின்னூட்டமிட்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்

இராகவன், நைஜிரியா.