Friday, November 12, 2010

மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??

மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு.

சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க செய்யும் ஏரி. அந்த ஏரியின் இன்றைய தோற்றம். (ஆகஸ்ட் மாதம்... இந்தியா வந்த போது எடுத்தப் படங்கள்...)



ஏரி ஒரு பகுதி.... எதிர் கரையில் சுகமாக மேயும் எருமை மாடுகள்.



ஐயப்பா நகர் சன்னதி தெருவின் சாக்கடை ஏரியை நோக்கி



ஐயப்பா நகர் சன்னதி தெரு சாக்கடை ஏரியை வந்தடைந்துவிட்டது. !!



சாக்கடை ஏரியில் சங்கமிக்கும் இடம்.. புண்ணிய பூமி!!



ஏரிக் கரையில் கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள். ரொம்ப சுத்தமானவங்க வீட்டில் இருக்கும் குப்பைகள் ஏரிக் கரையில் !!


மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை. இங்கு வளரும் மீன்களை சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நிச்சயம் வரும் - 100% கியாரண்டி என்று போடவில்லை.!!


ரொம்ப புத்திசாலி இவர்... வீட்டு சாக்கடையை தெருவில் விட்டுள்ளார் (12 வது தெரு வாசி)



அவரேதான்... வீட்டு சுவர் ஓரமாக அணை கட்டியது மாதிரி பள்ளம் வெட்டி அதில் சாக்கடை தண்ணீர்.


தெருவெங்கும் அந்த சாக்கடை தண்ணீர். அந்த வழியாகத்தான் நிறைய பள்ளிக் குழைந்தகள் செல்வார்கள். தினமும் இரண்டு குழைந்தகளாவது சைக்கிளில் இருந்து விழுந்து விடுகின்றனர்.


புதிதாக எந்த நீர் நிலைகளையும் யாரும் ஏற்படுத்த வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை கூட நம்மால் காப்பாற்ற இயலைவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் தண்ணீருக்கு கஷ்டப்படப் போவது உறுதி.


Wednesday, July 21, 2010

நினைவலைகள்



பல வருடங்கள் கழித்து, கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு பின், நாம் படித்தப் பள்ளியைப் பார்க்கும் போது, அதன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில படங்கள் உங்கள் பார்வைக்காக...



பள்ளியின் நுழை வாயில்


சற்றே தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


எங்கள் குறும்புகளைப் தாயன்போடு பொறுத்துக் கொண்ட எங்க அன்பு தலைமை ஆசிரியர், எல்லோராலும் அன்போடு கே.ஜி.கே என்றழைக்கபடும், உயர் திரு. கே.ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்கள். அன்னாருக்கு அகவை 84. இன்றும் அவரின் கம்பீரமான குரலும், ஞாபக சக்தியும் மிகவும் ஆச்சர்யமூட்டுவதாக அமைகின்றது. அவருக்கு, நான் அவருடைய மாணவன் என்பதை விட, அவர் என் தந்தையின் மாணவர் என்பதில் பெருமை அதிகம்.



தற்போதைய தலைமை ஆசிரியை... கடந்த வருடம் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 97 சதவிகிதம் என அவர் வாயால் சொல்ல கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.




+2 வில் கூடப் படித்த நண்பர் திரு. ராம நாதன் அவர்கள். 30 வருடம் கழித்து சந்தித்த போது, பல மணி நேரங்கள் பேசியும், பேசுவதற்கு இன்னும் பல விஷயங்கள் இருப்பது மாதிரியே தோன்றுகின்றது. சிகப்பு சட்டையில் அமர்ந்திருப்பவர் என் அண்ணன் முரளி அவர்கள்.



லேப் வகுப்புக்ள் நடைபெறும் கட்டடம்.


கணினி பயற்சி வகுப்பு.. அருமையாக இருக்கின்றது.


கலையரங்கம் - புதியதாக கட்டப் பட்டுள்ளது


தூரப் பார்வையில்... வலதுகை பக்கம் முதல் வகுப்புதான் நான் படித்த போது வகுப்பறையாக செயல் பட்டது. அப்போதெல்லாம் இவை கூரை வேயப் பட்டு இருந்தது... இப்போது அழகாக..


இந்த சிறுவர்களைப் பார்க்கும் போது... இங்குதான் குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ், எலந்த பழம், எலந்த வடை... வாங்கி சாப்பிட ஞாபகங்கள்...


பள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந்தித்தபின், வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்...

Sunday, June 20, 2010

RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்





ஐய்வர்யா - ரிட்டர்யர் ஆகலாம்... தாங்க முடியலடாசாமி

ப்ரியாமணி - சிறிது நேரமே வந்தாலும், நல்லா பண்ணியிருக்கார்.

அபிஷேக் பச்சன் - என்ன பண்ணுகின்றார், எதுக்கு பண்ணுகின்றார் என புரிஞ்சுக்கவே முடியலை... அப்ப அப்ப பக்..பக்...பக் என கத்துகின்றார்... மழையில் நனைஞ்சுகிட்டே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போய்கிட்டு இருக்கார்.

விக்ரம் - நல்லா செஞ்சு இருக்கார் ... இருந்தாலும் சாமி படம் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க இயலவில்லை.

கோவிந்தா - கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நல்லாவே பண்ணியிருக்கார். இதுக்கு மேல் வேற யாராலும் செய்ய முடியாது.

மணி ரத்தினம் - இந்த மாதிரி படத்திற்கு, இவர் இயக்கம் என்பது தேவையில்லாத ஒன்று.

இசை - ஏ.ஆர். ரஹ்மான் - டைட்டல் கார்டு பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு.

கேமிரா - பிடிச்சு இருக்கு.

லொக்கேஷன் - நல்லா இருக்கு... டிஸ்கவரி சேனலில் இதை விட இன்னும் நல்லா காண்பிச்சு இருப்பாங்க.

திரைக்கதை - தேடுங்க...தேடுங்க.. தேடிகிட்டே இருங்க..

வசனம் - யார் என்ன பேசறாங்கன்னு புரிவதற்குள் அடுத்த சீன் ஓடுது.


மொத்தத்தில் - 5 பேர் குடும்பத்துடுன் சென்றோம் -
டிக்கெட்டுக்காக 8,000 நைரா = 2,500 ரூபா செலவு பண்ணது -
காசுக்கு பிடிச்ச கேடு.

கூடுதல் போனஸ் - இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தலைவலியால் அவதிப்பட்டது.


Tuesday, May 25, 2010

அப்பாவி முரு - திருமண வாழ்த்து






சிங்கைப் பதிவர்...

அன்புத்தம்பி...

அப்பாவி முரு ... என்கிற முருகேசன்

அவர்களுக்கு..

26.05.2010

அன்று

செல்வி ரேவதி அவர்களுடன் திருமணம்.

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துவோம்












Monday, March 29, 2010

எனக்குப் பிடித்த பத்து பெண்கள் ....



அன்புத் தோழி தேனம்மை லஷ்மணன் அவர்களின் அழைப்பிக்கிணங்க இந்த சங்கிலி தொடர் இடுகை...

பொறுப்பி : நமக்கு இடுகை போடுவதற்கான புத்திசாலித்தனம் இல்லை... இதுதாண்டா சரியான நேரம்... சீனாரானா ... (எத்தனை நாள்தான் சூனாபானான்னு மத்தவங்க பேரைச் சொல்லிகிட்டு இருப்பது... நம்ம பேரை நாமளே சொல்லவில்லை என்றால் எப்படி...) அப்படின்னு சொல்லிகிட்டு, இந்த தொடர் சங்கிலி இடுகையைத் தொடருகின்றேன்...


நிபந்தனைகள் :
  1. உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.. (இருந்தா மட்டும் தெரியவா போகுது...)
  2. வரிசை முக்கியம் இல்லை... (என்னிக்கு வரிசையில நின்னுயிருக்கோம் இங்க கொடுப்பதற்கு..)
  3. இந்த தொடர் இடுகையில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது நலம். (இதுவும் ஒருவிதத்தில் நல்லதாப் போச்சு... இல்லாட்டி ஒரே துறையில் பத்து பேர் சொல்லுன்னா நாம... மூளையை... அதுகூட இல்ல... எத கசக்கறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கணும்...)

1. மதர் தெரசா (1910 - 1997)

ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என தொண்டு புரிந்தவர். தன்னலமில்லாமல் ஜாதி, மதம் கடந்து உதவ வேண்டும் என கொள்கையை மறக்க முடியுமா.



2. எம். எஸ். சுப்புலக்ஷ்மி (1916 - 2004)

தேனினும் இனிய காந்தக் குரல், முகத்தில் ஒரு சாந்தம். கர்னாட சங்கீதத்தை எங்கும் பரவச் செய்ததில் இவரின் பங்கு மறக்க முடியாது.



3. எஸ். ஜானகி (1938)

இவரின் திரைப் படப் பாட்டுகளுக்கு நான் அடிமை. சிங்கார வேலனே தேவா ஆகட்டும், உயிரே படப்பாட்டு ஆகட்டும் இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவரின் எளிமை ரொம்ப பிடிக்கும். தமிழில் அதிகமான கதாநாயகிகளுக்கு முதல் பாட்டு பாடியவர் இவர்தான். (ராதா, ரோஜா, மீனா, சங்கவி, விந்தியா, ரஞ்சிதா, ரேகா, பானுப்ரியா, ராதிகா, ரேவதி, சுஜாதா, ப்ரீதி ஜிந்தா)



4. அன்னி பெசண்ட் அம்மையார். (1847 - 1933)

இந்திய விடுதலைக்காக போராடிய பெண் புலி. இங்கிலாந்தை தாயகமாகக் கொண்டு இருந்தாலும், பெண்கள் விடுதலைக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளுக்காகவும் பாடுபட்டவர்.



5. இந்திரா காந்தி. (1917 - 1984)

இந்தியாவின் இரும்புப் பெண்மணி. இன்று இருக்கும் பல பெண் அரசியல்வாதிகளுக்கு மானசீக குரு அன்னை இந்திரா காந்தி என்றால் அது மிகை ஆகாது.




6. மார்க்ரெட் தாட்சர் (1925)

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் (1979 - 1990). இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று இவரைச் சொல்லலாம்.



7. மேதா பாட்கர். (1954)

லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அறிந்த சோஷியலிஸ்ட், மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு மிக நல்ல பெண்மணி.



8. பத்மினி. (1932 - 2006)

என்னை மிகவும் கவர்ந்த ஒரு நடிகை. (நடிக்க தெரிந்தவர்.) இன்னமும் என்னிடம் யார் சிவாஜிக்கு சரியான ஜோடி என்றுக் கேட்டால் உடனே தயங்காமல் பதில் சொல்லுவேன் பத்மினி என்று.. (வியட்னாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் இரண்டு போதுமே உதாரணத்துக்கு..)



9. P.T. உஷா. (1964)

தங்கத் தாரகை - உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பெயரை நிலை நாட்டியவர்களில் முக்கியமானவர்.



10.சகுந்தலா தேவி (1939)

பிறவி கணித மேதை. இவரின் கணித திறமைக்காக “மனித கணினி” என்று அழைக்கப்பட்டவர். இவரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. 1977 -ல் 201 டிஜிட் நம்பருக்கு ஸ்கொயர் ரூட் மனக் கணக்காக போட்டுக் காண்பித்தவர்.



இந்த சங்கிலித் தொடர் இடுகையை தொடர நான் அழைப்பது..



மூன்று பேர் போதும் என்ற நல்ல எண்ணம் தான் காரணம்.

Monday, March 22, 2010

உலக தண்ணீர் தினம் - யாருக்கு அக்கறை???

உலக தண்ணீர் தினம் பற்றி நண்பர் ஸ்டார்ஜன் வலைப்பூவில் “உலக தண்ணீர் தினம் - கேள்விக்கு உங்க பதில் - 4” பின்னூட்டம் போடும் போது... ஒரு கொசுவத்தி சுத்திச்சு...

இதை ஏன் ஒரு இடுகையாப் போடக்கூடாது என என் மனசுல ஏற்பட்ட தாக்கம் இந்த இடுகை..

மடிப்பாக்கம் ஐயப்பா நகர் - 15 தெருக்களையும், 200 வீடுகளையும் கொண்ட அழகான நகர், ஒரு அழகான ஏரியையும் கொண்ட நகர். ஏரியின் மறுபக்கம் கார்த்திகேயபுரம் எனப்படும். ஏரியின் இன்னொரு பக்கம் பல்லாவரம் நகராட்சியின் ஏரிக் கரைத் தெரு. பக்கத்தில் ஏரி இருப்பதைப் பார்த்துதான் அங்கு நான் வீடு வாங்கினேன்.

அந்த ஏரிக்கு நீர் வரத்து பக்கத்தில் இருக்கும் மூவரசம்பட்டு குளம் நிறைந்தது, பின் இங்கு வரும்.

கடந்த சில வருடங்களுக்கு முன் அந்த ஏரியை சிலர் பட்டா போட்டு விற்க முயற்சித்த போது, சில நல்ல உள்ளங்கள் காரணமாக காப்பாற்றப்பட்டது. பின்னர் அந்த ஏரியில் இருந்த மண் எடுத்து ஏரி நன்கு ஆழப் படுத்தப்பட்டது. இப்போது ஏரியின் நடுவில் கிட்டதட்ட 30 அடி ஆழம் இருக்கும்.

இந்த ஏரிக்கு நீருக்கு என்ன என்ன கெடுதல் நடக்கின்றது என்று பாருங்க..

1. ஐய்யப்பா நகர், கார்த்திகேயபுரம் ( கார்த்திகேயபுரத்தில் ஏரிக்கு அருகில் இருப்பவர்கள் மட்டும்), பல்லாவரம் ஏரிக்கரை வாசிகள் அனைவருக்கும் குப்பை கொட்டும் இடம் இதுதான்.

2. ஐய்யப்பா நகர் சன்னதி தெரு, ஐயப்பா நகர் முதல் தெரு - இரண்டு தெருக்களின் சாக்கடைகள் சங்கமம் ஆவது ஏரியில்தான்.

3. மூவரசம்பட்டு சாக்கடைகள் சங்கமம் ஆவதும் இந்த ஏரியில்தான். நீர் வரத்துக்காக ஏற்பட்ட வழியாக இந்த சாக்கடைகள் கலந்துவிடும்.

4. பலருக்கும் காலைக் கடன் கழிக்குமிடம் ஏரிக் கரை தான்.

5. ஐந்தாவது தெரு என நினைக்கின்றேன், ஒரு பலமாடி அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்களுது செப்டிக் டேங்க், இரவில் பம்ப் மூலம் ஏரியில் விடப்படும்.

6. மூவரசம்பட்டு குப்பைகள் ஏரிக்கு நீர் வரும் வழியில் கொட்டி அடைக்கப்படும்.

சென்னையை விட்டு 2008 - ல் நைஜிரியா வரும் போது நான் பார்த்த போது, ஏரியில் கோரைப் புற்கள் வளர ஆரம்பித்து இருந்தது. 2009 -ல் போன போது... அந்த கோரைப் புற்கள் நன்கு வளர்ந்தது இருந்தது. இந்த மாதிரியான கோரைப் புற்கள் கெட்டுப் போன தண்ணீரில் தான் நன்கு வளரும்.

இதில் கொடுமையானது என்னவென்றால், ஐயப்பா நகருக்கு 3 கவுன்சிலர்கள். அவர்களுக்குள் .. அவர் செய்வார் என்று இவர் விட்டு விடுவார்... இவர் செய்வார் என அவர் விட்டு விடுவார்... கொடுமையடா சாமி...

முன்பு ஏரி நிரம்பியவுடன் அதிக பட்ட நீர் வெளியாக வழி இருந்தது. இப்போ அந்த வழி முழுவதும் அடைக்கப் பட்டு, தண்ணீர் நிரம்பி, தெருவெங்கும் ஒரே தண்ணீர். அந்த தண்ணீர் வடிய குறைந்தது 1 மாதம் ஆகின்றது... ரொம்ப பாவம் செய்தவர்கள் 11 தெரு முதல் 14 வது தெரு வரை இருப்பவர்கள்.

ஐயப்பா நகரில் வசிப்பவர்கள் பெரும் பகுதியினர் மேல் தட்டு வர்க்கத்தினராகத்தான் இருக்கின்றனர். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள், இருந்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கின்றனர். கார் இல்லாத வீடுகள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

உலக தண்ணீர் தினம் கொண்டாடும் போது, ஐயப்பா நகர் மக்கள் வேண்டுமானால் “உலக கண்ணீர் தினம்” கொண்டாடலாம்.

இங்க கொஞ்சம் சுய தம்பட்டம்...

என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்துள்ளேன்.. இதில் நான் நெஞ்சு நிமிர்த்தி பெருமையாகத்தான் சொல்லுகின்றேன்.

உலகத் தண்ணீர் தினத்தன்று மட்டும் தண்ணீரைப் பற்றி நினைக்காமல், சிக்கனமாக இருந்தால், வருங்கால சந்ததியருக்கு நன்று.

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்..

Saturday, March 20, 2010

கேரக்டர் - மிஸ்டர் எக்ஸ்...

அண்ணன் வானம்பாடிகள் கேரக்டர் பற்றி எழுதும் போது, எனக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் பற்றி சொல்ல வேண்டியிருக்கு.. பொய்யும், துரோகமும் சேர்ந்து மனிதனை அழித்த விதம்...

அவர் பெயர் எக்ஸ்... (அவரும் இதைப் படிச்சுகிட்டு இருப்பார் ... அதனால் தான்...)

ரொம்ப நல்லவர், அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் அப்படின்னு ரொம்ப ஆசைப் படுவார், வேலை தெரியாவிட்டாலும் கத்துகிட்டு செய்யணும் ஆசைப் படுவார்... ஒரே ஒரு கஷ்டம்... ரொம்ப பொய் சொல்லுவார். பொய் சொல்வதில் எனக்குத் தெரிந்த வரையில் அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது.

எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்... கிட்ட தட்ட ரூ. 30,000/- வாங்கினாலும், சம்பளம் வாங்கிய மறுநாள் மதிய சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. எந்த விதமான கெட்ட பழக்கங்களும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. பல நண்பர்களிடம் விசாரித்த வரையில் எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மனைவியையும் பிரிந்து வாழ்கின்றார். எங்கய்யா வாங்கின சம்பளம் என்றால் எல்லாம் செலவழிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லுவார். ரொம்ப தோண்டி, துருவி கேட்ட பின், கடன் அட்டை, ஏசி கடனில் வாங்கியது என்று ஏகப்பட்ட கடன் வச்சு இருப்பார். ஏசி வாங்கி இருக்கார் ஆனால் வீட்டில் ஏசி கிடையாது.

ஆபிசுக்குள் உட்கார்காந்துகிட்டே, பாங்கில் இருந்து வரும் ஆட்களுக்கு அவர் ஆபிசில் இல்லை என்று பியூனை விட்டு சொல்லச் சொல்லுவார்..

பாங்க் ஆட்களும் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் ஆபிசில் ரிசப்ஷனில் உட்கார்ந்து முயற்சித்த நாட்கள் உண்டு. பாத்ரூம் கூட போகாமல் தன் இடத்திலேயே உட்கார்ந்துப்பார்.

பணத்திற்காக சொல்லும் பொய்கள்...

குழந்தைகள் படிப்பிற்காக பணம் கட்ட வேண்டும்
மாமியாருக்கு உடம்பு சரியில்லை
மனைவிக்கு உடம்பு சரியில்லை
அவருக்கே உடம்பு சரியில்லை

எல்லாவற்றையும் விட கொடுமையானது... குழந்தைக்கு ஆக்சிடெண்ட் என்றும், கை முறிந்துவிட்டது என்றும் சொல்லி பணம் கடன் வாங்கியதுதான். உண்மையில் குழந்தைக்கு ஒன்றுமே ஆகவில்லை.

அவர் மனைவியும் பொருத்துப் பொருத்து பார்த்து, விவாகரத்து வாங்கிட்டுப் போயிட்டார்.

அவர் வேலை செய்த கம்பெனி பங்குதாரர்களுக்குள் தகராறு வந்து மூடிவிட்டார்கள். அவருக்கு மேலதிகாரியாக வேலைப் பார்த்தவருக்கு, இவருடைய தில்லுமுல்லுகள், பொய் அனைத்தும் தெரியும். தெரிந்து இருந்தும், இவருக்கு ஒரு இடத்தில் மாசம் ரூ. 25,000/- கிடைக்கும் படி வேலை வாங்கிக் கொடுத்தார்.

இந்த இடத்தில் அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க முடியாமல், அவர்களுக்கு எதிராக வேலை செய்து, அவர்களும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

பொய் சொல்லி, சொல்லி வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்.

இப்போது இவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்றாலும், இவ்வளவு பொய் சொல்கிறவருக்கு எப்படி உதவுவது. வாழ்க்கையில் குறைந்த பட்சம் ஒருவரிடமாவது உண்மை பேச வேண்டும். வாயைத் திறந்தாலே பொய் என்றால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த நண்பர்(?) தான்.

இந்த இடுகை, சமீபத்தில் அந்த நண்பர்(?) அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு எதிராக செயல் பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டார் எனக் கேள்விப் பட்டதினால் வந்த இடுகை. கோர்வையாக எழுத வரவில்லை. அவர் வேலை செய்த நிறுவனம் பற்றியும், அங்கு இவரை எப்படி மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்பதும் எனக்கு நன்குத் தெரியும். அவர்களே இவரை வேலையை விட்டு தூக்குகின்றார்கள் என்றால், இவரின் பொய் & துரோகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, முதலாளி ரொம்ப நல்லவர், கம்பெனியில் திருடியவனைக் கூட மன்னிச்சு விட்டுவிடுவார்... ஆனால் துரோகத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை என்றார்.

பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.

Thursday, March 11, 2010

மாபெரும் நைஜிரியா வலைச் சந்திப்பு..

11.02.2010 அன்று நடைப் பெற்ற பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் அறிய...

விருத்தாசலம் போய் பாருங்க... (வலைப்பூ பெயர் விருத்தாசலம்..)

இரண்டு படங்கள் தான் அண்ணன் இளமுருகன் போட்டு இருக்கார்...

மீதி படங்கள் விரைவில் எதிர் பாருங்கள்...

உங்களுக்குகாக... ஒரே ஒரு படம் மட்டும் நான் இங்க போட ஆசைப் படுகின்றேன்...





பார்க்க நல்ல இருக்கில்ல.. படம் எடுத்தவர்... நண்பர் யோக்பால்...