Saturday, January 31, 2009

ஒரு நட்சத்திரத்திற்கு அஞ்சலி
ஒரு உன்னத நட்சத்திரம் மறைந்து விட்டது.

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உன்னதமான சிரிப்பு நடிகர் மறைந்துவிட்டார் என கேட்கும் போது, மனது விம்முகின்றது.

அவரின் அனைத்து நடிப்புகளையும் ரசித்து, அவருக்காகவே பார்த்த படங்கள் எத்துனையோ..

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Tuesday, January 27, 2009

அஞ்சலிமறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர்

மேதகு திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களுக்கு

கண்ணீர் அஞ்சலி


தோற்றம் : 04.12.1910 - மறைவு : 27.01.2009

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Monday, January 26, 2009

நோய்க்கு இடம் கொடு
ஔவைப் பாட்டி சொன்னது

”நோய்க்கு இடம் கொடேல்”

ஆனா நான் சொல்றது ”நோய்க்கு இடம் கொடு”.

ஏன் என்று புரியவில்லையா... அப்படின்னா இதை படிச்சு பாருங்க... புரியும்.

ஒரு வாரம் மலேரியாவும், டைபாய்டும் வந்து படுத்தப்ப, எவ்வளவு விசாரணைகள், எவ்வளவு உபசரிப்புகள், வாவ் சூப்பர் இதுதான்.

தங்ஸ் எவ்வளவு பொறுப்பா, சுடு தண்ணி வச்சு குடுக்கறது, மாத்திர சாப்பிடுங்க அப்படின்னு சொல்றது, அலுவலகத்திலும் நீங்க இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கங்க அப்படின்னு (அப்புறம் அந்த இரண்டு நாள் வேலைய முடிக்க ஒரு வாரம் தினமும் 2 அதிகப்படியா உழைக்க வேண்டியது வேறு விசயம்), நம்மள ஒரு வேலையும் செய்ய விடாம இருக்கின்றது.. ஆஹா பிரமாதம் போங்க..

என்ன ஒரு கஷ்டம்... பத்திய சாப்பாடு அப்படின்னு சொல்லி, உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் குறைச்சலா போட்டு ஒரு சாப்பாடு.. என்ன பண்றது எல்லாத்தையும் சகிச்சிகிட்டு சாப்பிட்டாச்சு..

இப்போ உடம்பு நல்லா குணமான பின்னாடி, தங்ஸ் நம்மல வேல வாங்க ஆரம்பிச்சுட்டாங்க..

பதிவுலகத்தில என் உடல் நிலையை அவ்வப்போது விசாரித்து, நான் நலம் பெற வேண்டும் என வேண்டிய தம்பிகள் அறிவிழி, ஜமால், அப்பாவி முரு, Coolzkarthik, தங்கச்சிகள் ரம்யா, பூரணி, நண்பர்கள் நெல்லைத்தமிழ், தேவா, எம்.எம். அப்துல்லா அனைவருக்கும் நன்றிகள் பல.

எச்சரிக்கை :

சக பதிவாளர்களுக்கு தெரிவிப்பது என்ன என்றால்

பின்னூட்டம் போட அடுத்த வாரத்தில் இருந்து வந்துவிடுவேன்.

டிஸ்கி :

சக பதிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவரும் கும்மி அடிப்பதற்காக கமெண்ட் மாடரேஷன் இந்த பதிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க சந்தோஷத்துடன் / பணிவுடன் / வருத்தத்துடன் / எல்லாமுமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

Wednesday, January 14, 2009

ஆபாச பின்னூட்டங்கள் இடுபவர்களே!தானாக திருந்துங்கள்!இல்லை கைக்கு காப்பு தயார்!


பெண் பதிவர்களையும் புதிதாகப் பதிவுகள் எழுதத் துவங்கும் ஆரம்ப காலப் பதிவர்களையும் குறிவைத்து ஆபாசமான அநாகரீகமான பின்னூட்டங்களைக் கொண்டு கேவலமான தாக்குதல் தொடுத்து அவர்களின் மன உறுதியைக் குலைத்து பதிவுலகை விட்டுத் துரத்தும் நோக்கத்க்துடன் சில மன நோயாளிகள் இங்கே உலவிக் கொண்டு உள்ளனர்.

வலைப்பூ என்பது ஒருவர் தனது வாழ்வின் சுவையான அனுபவங்களையும், மகிழ்வுகளையும், சோகங்களையும், சமூக நிகழ்வுகளைப் பற்றிய நமது கண்ணோட்டத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதற்காக பயன்படக் கூடிய ஒன்று.

ஒருவர் தனது வலைப்பூவில் எழுதும் பதிவுகள் மூலமாகப் பலருடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் அதைப் படிப்பவர்களுக்கு,

விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,

மன மகிழ்ச்சியைத் தரலாம்,

நல்ல நகைச் சுவையாக அமைந்து பொழுதுபோக்காக அமையலாம்,

சில புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவலாம்,

படிப்பவரின் பழைய காலங்களை நினைவு படுத்துவதாக இருக்கலாம் என்பன போன்ற பல வகையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சில நேரங்களில் பதிவுகளைப் படிக்கும் ஒருவருக்கு பதிவானது பிடிக்காமல் போய் விடவோ அல்லது பதிவின் கருத்துக்களில் உடன்பாடு இல்லாமலோ இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் எல்லோருடைய கருத்துகளும் ஒத்துப் போகாது இல்லையா?

அதேபோல சில நேரங்களில் பதிவு எழுதப்பட்ட எழுத்து நடையிலோ அல்லது கருத்துகள் சொல்லப் பட்ட முறைகளிலோ படிப்பவர் பெருத்த ஏமாற்றம் அடையவும், பதிவினைப் படித்ததால் தனது நேரம் வீணாகிப் போனதாகக் கூட எண்ணி விடும் வாய்ப்புகள் உள்ளன.

பதிவுகளைப் படிப்பவர் அந்தப் பதிவுகளைப் பற்றியும், பதிவின் கருத்துகள் பற்றியும், பதிவரின் எழுதும் முறை பற்றியும் தனக்குத் தோன்றும் நிறை குறைகளைப் பதிவருக்குத் தெரிவிக்கவும் பதிவின் கருத்துகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதைப் பதிவருக்கும் பதிவினைப் படிக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்கவே பின்னூட்டங்கள் பயன்படுகின்றன.

பதிவின் கருத்துகளில் நமக்கு உடன்பாடு இல்லா விட்டாலோ பதிவு நமக்குப் பிடிக்கா விட்டாலோ அது குறித்து நாகரீகமான முறையில் நமது விமர்சனங்களை பின்னூட்டங்களில் பதிவு செய்வதே படித்தவர்களுக்கு அழகு.

ஆனால், அந்த பின்னூட்டத்தில் மிக மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவது என்பது தவறான செயல் இல்லையா?. கடினமான வார்த்தைகள் என்றிலாமல் ஆபாச அநாகரீக வார்த்தைகளைப் பயன்படுத்துவது பண்புள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல.

இராகவன், நைஜிரியா என்பவர் ஆண் என்பது பதிவுகளைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். வலைப்பூவிற்கு பதிவராக வந்து 20 நாள்தான் ஆகின்றது, நான் ஆணா / பெண்ணா என்று கூட தெரியாமல், அசிங்கமான பின்னூட்டம் எனக்கு வருகின்றது.. (இரண்டு பின்னூட்டம் தான் அசிங்கமாக வந்தது, முதலிலேயே தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு).

வலைப்பூ என்பதே ஒரு தனிமனிதன் எழுதுவது. அது பிடிக்கவில்லை என்றால், படிக்க வேண்டாம். யாரும் யாரையும் படிக்க சொல்லி யாரும் வற்புறுத்தப் போவதில்லை.

எல்லாத் துறைகளிலும் பெண்களை முன்னேற விடாமல் தடுக்க வேண்டும் என்பது இது போன்ற இழிபிறவிகளின் நோக்கமாக சில நேரங்களில் இருக்கிறது. இது போன்ற அநாகரீக செயல்கள் மூலமாக பெண் பதிவர்களின் மன உறுதியை சீர்குலைத்து அவர்களைத் தொடர்ந்து எழுத விடாமல் செய்வதும் இவற்ர்களின் கேவலமான குறிக்கோளாக உள்ளது.

தமது மகிழ்ச்சிக்காகவும் கருத்துப் பகிர்தலுக்காகவும் எழுதப்படும் பதிவுகளுக்கு பெயரில்லாமல் அசிங்கமான, கேவலமான பின்னூட்டங்களை போடுபவரைப்பற்றி என்ன சொல்வது?.

அதிலும் வலைப்பதிவர்களை கேவலப்படுத்தி / அசிங்கமான பின்னூட்டம் போடுபவர்கள் மிக கேவலமான இழி பிறவிகள் என்பதுதான் என் எண்ணம்.

தன்னுடன் கருத்து மாறுபடுபவர்களின் அல்லது தனக்குப் பிடிக்காதவர்களின் எதிரே நின்று தங்கள் கருத்தைக் கூற தைரியம் இல்லாமல் அவர்கள் இல்லாத இடங்களிலும் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத இடங்களிலும் சென்று புறம் பேசுபவர்களைப் போன்ற கோழைகள்தான் இது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

பதிவரிடத்திலும் பதிவின் கருத்துகளிலும் தனக்கு உள்ள மாற்றுக் கருத்துகளை நேருக்கு நேராக எடுத்து சொல்லும் தைரியம் உள்ளவர்கள் நிச்சயம் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இந்த வகையான பின்னூட்டம் போடுவது என்பது, மன பிறழ்வின் அறிகுறி. பொது இடங்களில் உள்ள சுவர்களிலும், கழிவறையின் சுவர்களிலும் தனக்குப் பிடிக்காதவர்கள் பற்றி ஆபாசமாக எழுதி அதன் மூலம் தங்கள் கேவலமான அரிப்பை தீர்த்துக் கொள்பவர்கள்தான் இவர்களும்.

இது போன்ற மன நோயால் பாதிக்கப்பட்ட தைரியமற்ற கோழைகள் இக்தகைய ஈனச் செயல்கள் மூலம் பெண் பதிவர்களைக் கூட பல நேரங்களில் வேதனைப் படுத்தி அதைக் கண்டு இன்பமடைய முனைகின்றனர்.

இது போன்ற பைத்தியக்காரர்களின் செயல்களுக்கு எந்த வித மரியாதையையும் தராமல் அவற்றைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டு தமது பணியை முன்னை விடப் பன்மடங்கு வேகத்தில் செய்வதே பதிவர்கள் குறிப்பாகப் பெண்பதிவர்கள் இவர்களைப் போன்ற ஈனர்களுக்குச் தரக் கூடிய சரியான தண்டனையாக இருக்கும்.

அதை விடுத்து பதிவர்கள் இது போன்ற முறையற்றவர்களின் செயல்களால் மனம் புண்பட்டு அவர்கள் கூறியதைப் பற்றி சிந்தித்து தமது நேரத்தை வீணாக்குவது என்பது - தேவையற்றது - அவசியமற்றது - கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியது..

நம் முன்னே முகம் காட்டக் கூட தைரியம் இல்லாத கோழைகள் செய்யும் இக்தகைய ஈனச் செயல்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை முன்னை விட பன்மடங்கு வேகத்துடன் செயல்படுவதே.

ஆபாசப் பின்னூட்டமிடும் இது போன்ற மன நோயாளிகள் ஒரு நல்ல மனோதத்துவ / மன நல மருத்துவரை அவர்கள் அணுகுவது நலம். ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகினால் அவர்கள் மன நோய் நீங்கி மற்றவர்களைப் போன்ற நல்ல மனிதர்களாக மாற வாய்ப்புகள் உள்ளன.

அப்படி நல்ல மன நல மருத்துவர் வேண்டும் என்றால், பின்னூட்டத்தில் பெயருடன் தெரிவியுங்கள், நாங்கள் சிபாரிசு செய்கின்றோம். இல்லையென்றால் நேரடியாக வலைப்பதிவு மனநல டாக்டர் ருத்ரன் அவர்களைப் போய் பாருங்கள், நல்லது நடக்கும்.

கடைசியாக சில வார்த்தைகள்,

திருடானாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது... என்று எண்ணிக் கொண்டு துள்ளித் திரியாதீர்கள்,

உங்களைப் போன்ற காமூகர்களைப் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் இப்பொழுதெல்லாம் நல்ல தொழில்நுட்ப நுண்ணறிவுடன் தயாராகவே உள்ளனர்.

நீங்கள் பெயரில்லாமல் பின்னூட்டம் போட்டு விட்டதாகவும் நம்மை யாரும் கண்டு பிடிக்க முடியாது என்றும் பகல் கனவு கண்டு கொண்டு திரியாதீர்கள்.

இரண்டே வினாடிகளில் உங்களைக் கண்டு பிடித்து பின்னர் கைகளில் காப்பு மட்டும் அளவு தொழில்நுட்பம் இப்போது சைபர் கிரைம் போலிசார் வசம் இருக்கிறது என்பதை உணர்ந்து திருந்துங்கள் இல்லை என்றால் மறைமுகமாக ஈ மெயில் மிரட்டல் வீட்டுப் பின்னர் சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கிக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தாவது திருந்தி விடுங்கள். 

இல்லை களி தின்றால்தான் உங்களுக்குப் புத்தி வரும் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

Thursday, January 8, 2009

அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி..

தமிழ் ஆசிரியர் : தவறு செய்த மாணவரின் காதை திருகிக்கொண்டே கேட்டார் - இனிமே இந்த பாடம் மறக்குமா .. மறக்குமா

மாணவன் :  சார்,  மரக்காது, மரக்காது..

தமிழ் ஆசிரியர் :  மரக்காது தானே, அப்படின்னா காது வலிக்காது நல்லா திருகலாம்.....
___________________________________________________________________

ஆசிரியர் Progress Report -  ல் இப்படி எழுதியிருந்தார் - Your SUN  is very WEEK in English and needs  tution..

மாணவரின் தந்தை :  You are also very WEAK  in English
___________________________________________________________________

வகுப்பறையில் சத்தம் போட்டுக்கொண்டு இருந்த மாணவர்களைப் பார்த்து ஒரு ஆசிரியர் இவ்வாறு சொன்னார்

ஏ.. நாய்ஸ்... Don't make Noise
___________________________________________________________________
இது ஒரு உண்மைச்சம்பவம்..

மாணவன் தேர்வு நடக்கும் இடத்தில் சுமார் 1 மணி 30 நிமிடங்கள் (தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்) சும்மாவே உட்கார்ந்து இருந்தான்.  பொறுத்து பார்த்த ஆசிரியர், அந்த தேர்வுக்கு உரிய பாடப்புத்தகத்தை எடுத்து கொடுத்து தேர்வு எழுதச்சொன்னார்.. 

15 நிமிடம் கடந்தும் அந்த மாணவன் சும்மாவே இருக்கவே, ஆசிரியர், ஏன் சும்மா இருக்க, புத்தகத்தை பார்த்து பதில் எழுத வேண்டியதுதானே எனக்கேட்டார்..

அதற்கு அந்த மாணவர் கூறிய பதிலை கேட்டவுடன்.. ஆசிரியருக்கு மயக்கம் வராத குறைதான்.. 

சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)
____________________________________________________________________
படிக்கும் காலத்தில், ஒருதடவை ஆசிரியர் பெரிய சைஸ் நோட் புக் வாங்கி வரச் சொன்னார்..
நானும் என் தந்தையிடம் வந்து, அப்பா டீச்சர் நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், வாங்கி கொடுங்கள் என்றேன்.
அவரும் சிறிய நோட்டை வாங்கி கொடுத்தார்.. நான் இது இல்லையப்பா நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், காம்போசிஷன் எழுதுவதற்கு எனச்சொன்னபோது அவர்.. 

அவங்க நோட் புக் Neat - அதாவது சுத்தமாக இருக்க வேண்டும் எனச்சொல்லுகின்றார்கள், நீதான் அதை தப்பாக புரிந்து கொண்டு விட்டாய்....!! 

அதுக்கபுறம் அழுது அடம்பிடித்து, பெரியச நோட் புக் வாங்கியது பற்றி இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகின்றது. 
___________________________________________________________________
நான் என் அப்பாவிடம் : அப்பா எனக்கு அந்த சோப்பு வாங்கிதாங்கப்பா.. அதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும் அப்படின்னு விளம்பரம் பண்றாங்க..

அப்பா :  அதெல்லாம் சரிடா.. அது அழகுக்கு தான் அழகு சேர்க்கும்.. உனக்கில்லை.. அதனால் அது வேண்டாம்..  இந்த சோப்பே உனக்கு போறும்.
____________________________________________________________________

எங்கோ படித்தது..

திரு. கி.வா.ஜ அவர்கள் சிலேடையில் வல்லவர். ஒருமுறை அவர் நண்பர் வீட்டுக்கு போயிருந்த போது, பாலும், பழமும் கொடுத்துள்ளார்கள். அவர் சிலேடையாக, இங்கு எனக்கு பழம் பால் கிடைத்தது என குறிப்பிடாராம். 
(பழம் பால் - பழைய பால் என்கிற அர்த்தமும் வரும்)
____________________________________________________________________

கி.வா.ஜ அவர்கள் புத்தகம் ஒன்றில் படித்தது

தமிழாரிசியர், ஆங்கிலப் புலமை இல்லாதவர் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்.  அப்போது மாணவர்களைப் பார்த்து அண்டருலகம் என்றால் என்ன வென்று தெரியுமா எனக் கேட்கின்றார்.

ஒரு மாணவர் எழுத்து, அண்டருலகம் என்றால், பாதள உலகம் என்கின்றார். 

ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை.. அண்டருலகம் என்றால், தேவர் உலகம் அது மேலே தானே இருக்கும், இவன் ஏன் பாதாள உலகம் என்று சொல்கின்றான். அண்டவர் என்றால் தேவர் என்ற அர்த்தம் அல்லவா என்று கேட்க, அப்போதுதான் அந்த மாணவர்,  under என்ற ஆங்கில வார்த்தையை இதனுடன் இணைத்து விட்டார் எனப் புரிந்ததாம். 
____________________________________________________________________
திரு கி.வா.ஜ. புத்தகத்தில் படித்த மற்றொரு விஷயம்.

படிப்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் இது..

அந்த மாணவர், முனைவர் பட்டம் பெறுவதற்க்காக ஒரு பேராசியரிடம், சேருகின்றார். அதிலும் தமிழ் முனைவர் பட்டம். பேராசியர், அவரிடம் நூலகத்தில் போய் அழற்படுகாதை எடுத்து வா என்று சொல்லியுள்ளார்.  அந்த மாணவரும், நூலகத்திற்கு சென்று அழற்படுகாதையை தேடு தேடு என்று தேடிவிட்டு, பேராசியரிடம் வந்து, ஐயா, நூலகத்தில் அழற்படுகாதை என்ற நூல் இல்லை என்கின்றார்.  பேராசியர், உடனே, அழற்படுகாதை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பகுதி, நான் தங்களை அதைத்தானே எடுத்து வரச் சொன்னேன், நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா என்று கூறினாராம். 
-----------------------------------------------------------------------------------------------

எப்படி இருந்தது என்று ஒரு பின்னூட்டமும், உங்கள் பொன்னான வாக்குகளை, தமிழிஷிலும், தமிழ்மணத்திலும் போடும்படி மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.Sunday, January 4, 2009

மழைக்காலம் சாயங்காலம் - சாயும் காலம்
நண்பர் கிருஷ்ணன் இப்போது தொலைபேசியில் பேசினாலும், ராகவா உன்னை தினமும் காலையில் நினைத்துக் கொள்வேன் என்பார்.

காரணம் தெரிய வேண்டுமா..

இதைப் படித்து பாருங்கள்..

நானும் நண்பர் கிருஷ்ணனும் ஓசூரில் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தோம். நண்பர் கிருஷ்ணன்,  General Manager க்கு Executive Secretary.  நான் ஒரு ஜுனியர் கிளார்க்.  அப்போது அவரிடம் TVS Suzuki MotorCycle இருந்தது. எனக்கு வண்டி ஓட்ட பழகிக் கொடுத்ததும் அவர்தான்.

இருவர் வீடும் அடுத்து அடுத்து என்பதால்,  நாங்கள் இருவரும் அலுவலகம் சேர்ந்து சென்றுவிட்டு, திரும்புவோம்.

ஒரு நாள் அவருக்கு வேலை பளு அதிகமாக இருந்ததால், ராகவா வண்டிய ஓட்டு, நான் பின்னாடி உட்கார்ந்து கொண்டு வருகின்றேன் எனச்சொன்னார். 

நான் வண்டி ஓட்டிய போது மழைக்காலம். அதனால், சாயங்காலம், 6 மணிக்கே, வெளிச்சம் குறைவாக இருந்தது.  நாங்கள் வரும் வழியில் ஒரு பாரஸ்ட் செக் போஸ்ட் உண்டு.  நான் சற்று தொலைவில் இருந்து பார்த்த போது, செக் போஸ்ட் கிராஸ் பார் இல்லை.  அது மூடிய நிலையில் இல்லை, திறந்த நிலையில் உள்ளதா எனப்பார்த்தேன் அதுவும் இல்லை. சரி எதோ ஒரு லாரி இடித்து விட்டு போய்விட்டது (சாத்ரணமாக நடக்கும் நிகழ்ச்சி) என நினைத்து அருகில் வந்த போதுதான் கவனித்தேன்.. அது 45 டிகிரி சாய்மானத்தில் உள்ளது என்பதை..

கிருஷ்ணா குனிஞ்சுக்கோ என சொல்லிவிட்டு, நான் குனிந்துவிட்டேன்.. அவரால் உடனே குனிய முடியவில்லை.. அவர் முகவாயில் அடிபட்டு இரண்டு பேரும் கீழே கிடந்தோம்..

எங்கள் நிறுவன உத்தரவுப்டி, நாங்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தப்பித்தோம், ஏனெனில் நான் கீழே விழுந்த போது, தலைகீழாக விழுந்தேன்.. ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த வைஸர் தெரித்து விழுந்தது..

நண்பருக்கு, முகவாயில் 6 தையல் போடப்பட்டது. நண்பர் தினமும் காலையில் முகச்சவரம் செய்யும்போது, சற்று கவனமாக செய்ய வேண்டியுள்ளதால், என்னை அப்படி சொல்லி கொண்டு இருக்கின்றார்.

 • நண்பர்களே.. ஹெல்மெட் அவசியம் தேவை.. 
 • அன்று நான் ஹெல்மெட் அணியாமல் சென்று இருந்தால், நிச்சயமாக இந்த பதிவு எழுதவோ பின்னூட்டம் போடவோ இன்று நான் இருந்திருக்க மாட்டேன்.  
 • அனுபவத்தில் சொல்கின்றேன்.. ஹெல்மெட் அணியுங்கள்.

காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

 • IT IS LAW OR NOT, PLEASE WEAR HELMET - WITH ISI STANDARD


Friday, January 2, 2009

தங்கமணிகளே உஷார் - தங்கம் + money
நம் நாட்டில் நாம் வாங்கும் தங்கத்திற்கு கொடுக்கும் விலைக்கும், தோஹா, கத்தாரில் கொடுக்கும் விலைக்கும் எவ்வளவு வித்யாசம் என்று பாருங்கள். 

அதனால் எனக்கு பல சந்தேகங்கள் உண்டாகி உள்ளன.  அதைக் கடைசியில் கொடுத்துள்ளேன்.

இந்த கால்குலேஷன் போடுவதற்கு கீழ் கண்ட காரணிகளை எடுத்துள்ளேன். 
 1. தங்கத்தின் விலை - 28, ஏப்ரல் 2008 விலை
 2. வாங்கிய தங்கத்தின் அளவு - 40 கிராம்
 3. வாங்கிய பொருள் - தங்கச் சங்கிலி
 4. ஒரு கத்தாரி ரியால் - ரூபாய். 11.25 (அன்றைய அதிகபட்ச விலை)
 5. தங்கத்தின் சேதாரம் - இந்தியாவில் கணக்கிடப்படுவது - 16% - 18%
 6. தங்கத்தின் தரம் - 22 காரட்.

முதலில் தங்கத்தை தோஹா, கத்தாரில் வாங்கியது -

மொத்த தங்கம் - 40 கிராம்
விலை - 100 ரியால் ஒரு கிராமுக்கு
செய்கூலி - 7 ரியால் ஒரு கிராமுக்கு
மொத்தம் கொடுத்தது - 40 கிராம் x (107 ரியால்) = 4,280 ரியால்
இந்திய விலையில் -  (4,280 ரியால் x ரூ.11.25) = ரூ. 48,150/-


இப்போது சென்னையில் உள்ள நிலவரத்தைப் பார்ப்போம்

மொத்த தங்கம் - 40 கிராம்
சேதாரம் - 16% - 6.40 கிராம்
மொத்த எடை - 46.40 கிராம்
தங்கத்தின் விலை - ரூ 1,155 ஒரு கிராமுக்கு
நகையின் விலை - (46.40 கி x 1,155) = ரூ. 53,592.00
செய்கூலி - ரூ. 75 ஒரு கிராமுக்கு = (46.40 கி x 75)  = ரூ. 3,480.00
மொத்த விலை கொடுத்தது = ரூ. 57,072.00 
இதற்கு சேல்ஸ் டாக்ஸ் - 1% (பில் வாங்கினால்) = ரூ. 571.00
மொத்த விலை - ரூ. 57,643.00

கத்தாரில் வாங்குவதற்கும், சென்னையில் வாங்குவதற்கும் உள்ள விலை வித்தியாசம் - ரூ.  9,493.00

கூகுளில் தங்கத்தின் தரத்தை பற்றி கூறியுள்ளது இதுதான் 

The difference between the different types of gold is in the purity of the gold. The karat weight of gold is measured by a golds purity, with 24 karat gold being pure gold. Therefore, 22 karat gold would have a purity of 22/24 or 91.7 percent, 18 karat gold would have a purity of 18/24 or 75 percent, 14 karat gold would have a purity of 14/24 or 50 percent and 10 karat gold would have a purity of 10/24 or 41.6 percent.

நண்பர்களே என்னுடைய சந்தேகங்கள் இவைகள் தான்

 1. இரண்டு இடங்களிலுமே ஒரே தங்கம் தான் வாங்கப்பட்டது.  ஆனால் கத்தாரில் சேதாரம் போடப்படவில்லை. ஆனால், சென்னையில் மட்டும் ஏன் சேதாரம் போடப்படுகின்றது. தரத்திற்கு இரண்டு கடைகளும் கியாரண்டி.
 2. 24 காரட் தங்கம் என்பது 99.99% சுத்த தங்கம். 22 காரட் தங்கம் என்பது 91.7% சுத்த தங்கம்.  இரண்டிற்கும் உள்ள வித்யாசம் 8.1% இருக்கும் போது, 16% சேதாரம் போடப்படுவது ஏன்? சர்வ சாதாரணமாக நாம் 7.9% சேதாரம் அதிகமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோமா..
 3. செய்கூலி இல்லை / சாதா கற்களுக்கு விலை இல்லை என்பதெல்லாம் சும்மா விளம்பரத்திற்கு மட்டும் தானா? 
 4. நம்மை மிக அழகாக ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்களா? 
 5. நமக்கு ஏன் தங்கம் வாங்கும் போது, பில் போட்டு வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லையே ஏன்?

நண்பர்களே.. இதெல்லாம் என்னுடைய அனுபவ அறிவு மட்டும்தான்... ஏப்ரல் 2008 -ல் இரண்டு இடங்களிலும் தங்கச் சங்கிலி வாங்கியதால் தான் எனக்கு இது புரிந்தது.  நீங்களும் சற்று யோசித்து பார்த்து பின்னூட்டம் இடுங்களேன்..
புத்தக கண்காட்சியும், கடனட்டையும்புத்தக கண்காட்சி என்றாலே எனக்கு ரொம்ப கொண்ட்டாடம்.  

இந்த முறை புத்தக கண்காட்சியை யாரவது பதிவில் படம் போடும் போது பார்த்து ஏக்க பெரு மூச்சு மட்டும் விடமுடியும்

தங்கமணிக்கு ரொம்ப கோபமான நேரம்.  புத்தக கண்காட்சிக்காக என்னுடைய பட்ஜெட் ரூ. 2000 முதல் ரூ. 2500 வரை.   புத்தகம் வாங்கிட்டு வந்திட்டா அப்புறம் வீட்ல ஒருவேலை செய்யாமல் புத்தகத்தை படித்துக் கொண்டே இருந்தால் கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க.

இப்போ நான் சொல்ல வந்த விஷயம் வேறு.  புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கும் காரணங்கள்.

1. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
2. சில பழைய புத்தகங்கள் அங்கு தேடி பார்த்து வாங்க இயலும்
3. 10% க்ழிவு கிடைக்கும்.

புத்தக கண்காட்சியில், எந்த கடையில் புத்தகம் வாங்கினாலும், 10% கழிவு உண்டு. நான் போன தடவை, ஒரு கடையில் ரூ. 700 க்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு (பதிப்பகத்தார் பெயர் வேண்டாம் என்பதால் சொல்லவில்லை) என்னுடைய கடனட்டையை கொடுத்த போது, கடன் அட்டை கொடுத்தால், கழிவு கிடையாது என்று சொன்னார்கள்.

நான் கடனட்டை உபயோகப்படுத்தினால், கழிவு கிடையாது எங்குமே விளம்பரம் செய்யப்படவில்லை, பின் ஏன் கொடுக்க மாட்டீர்கள் எனக் கேட்டதற்கு, அந்த கடையில் இருந்தவர்கள், சற்று கோபமாகவே, சார் இஷ்டமிருந்தா வாங்குங்க, இப்படியெல்லாம் எங்களை தொந்திரவு பண்ணாதீங்க, நீங்க வாங்கவில்லை என்றால் எங்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை என்று கூறினார்.

எனக்கு வந்த கோபத்திற்கு நேராக, அங்கு புத்தக கண்காட்சியின் அலுவலகத்திற்கு சென்று, ஐயா, கடனட்டை மூலம் புத்தகம் வாங்கினால்,  கழிவு கிடையாதா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கடனட்டை மூலமாக புத்தகம் வாங்கினாலும் 10% கழிவு உண்டு எனச்சொன்னார்கள்.  நான் பதிப்பகத்து பெயரைச்சொல்லி, இவர்கள் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகின்றார்கள்.

அவர் அந்த பதிப்பகத்தை சேர்ந்தவரை உடனே ஒலிப்பெருக்கியில் அழைத்து, ஏன் கொடுக்க மாட்டேன் என்று கேட்டதற்கு, எங்கள் முதலாளி கடனட்டைகளுக்கு கழிவு இல்லை என்று சொல்லியுள்ளார் எனக் கூறினார்.  உடனே அங்கிருந்த அதிகாரி பதிப்பக உரிமையாளரை கைபேசியில் அழைத்து இது பற்றி விசாரித்தார். அவர் அப்படியில்ல்லாம் ஒன்றும் இல்லை, கழிவு கொடுக்கலாம் என்று கூறினார். பின் அவர்களிடம் சென்று, கழிவுடன் புத்தகங்களை வாங்கி வந்தேன்.

இப்போது இதை நினைக்கும் போது சற்று வேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது.

நான் வாங்கிய மொத்த புத்தகங்களின் மதிப்பு ரூ. 700/- 
அதற்கு கிடைக்ககூடிய கழிவு ரூ. 70/-

பதிப்பகத்தாரின் கஷ்டங்கள் பல. புத்தகங்களை பதிப்பகத்தில் இருந்து கொண்டு வருவது, அதை கண்காட்சியில் பத்திரமாக பாதுகாப்பது என்று பலவிதமான கஷ்டங்கள். நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா.. 

நான் செய்தது தவறா?

நண்பர்களே... எனக்கு இது மிகவும் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.. உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன், நான் செய்தது சரியா/ தவறா என்று...