Wednesday, December 23, 2009

என்னா...........................வலி. முடியலை

எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க... என்ன செய்வது வந்துடுச்சு.. நாமதானே அனுபவிக்கணும்... என்னாச்சுன்னு கேட்கறீங்களா... படிச்சுப் பாருங்க புரியும் உங்களுக்கே...

அக்டோபர் மாசத்தில ஆரம்பிச்சுதுங்க... பயங்கர ஜலதோஷம்... சென்னைத் செந்தமிழில் சொல்லணும் என்றால், சரியான ஜல்ப்பு பிடிச்சுகிச்சு நைனா.

நானும் மருத்துவர்கிட்ட போகாம நமக்கு தெரிஞ்ச மாத்திரை எல்லாம் உபயோகப் படுத்திப் பார்த்தேன். சில நண்பர்களுக்குடன் பேசும் போது, அண்ணே நல்ல பிராண்டி வாங்கி மிளகு போட்டு அடிச்சுப் பாருங்க சரியாகிடும் என்ற யோசனை வேறு சொன்னார்கள். நம்ம உடம்பு பத்தி நல்லாத் தெரியும் என்பதால் அதை முயற்சி செய்யவில்லை.

இப்படி ஒரு 15 நாள் ஓட்டிட்டேன். இதுக்கு மேலே போச்சுன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னுட்டு, இங்கு ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். அய்யா 15 நாளா ஜலதோஷம் பிடிச்சுக்கினு ரொம்ப படுத்துது. மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது, இருமல் வேற ஜாஸ்தியா இருக்குன்னு சொன்னேன்.

அதுக்கென்னங்க நிறுத்திடலாம் அப்படின்னு சொன்னாரு. (ஜலதோஷத்தை என்றுதான் அர்த்தம் பண்ணிக்கணும்... மூச்சு விடறத இல்ல).

நான் அவர்கிட்ட அய்யா நமக்கு பென்சிலின், சல்பர் டிரக்ஸ், கொனைய்ன் (அப்படித்தான் நான் படிச்சேன்... மருத்துவர்கள் மன்னிக்க தப்பா இருந்தால்) இதெல்லாம் நமக்கு அலர்ஜி. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொன்னேன். சரி அப்படின்னுட்டு மாத்திரை கொடுத்தாரு.

மாத்திரை எல்லாம் சாப்பாடு சாப்பிட்டபின் சாப்பிடுங்கன்னு சொன்னாரு. நானும் சரின்னு சொல்லிட்டு, மதிய உணவுக்கு பின் சாப்பிட்டேன். அதுல பாருங்க ஒரு மாத்திரை (பேர் தெரியலை) நமக்கு அலர்ஜியாடுச்சுப் போல் இருக்கு. இரண்டு மணி நேரத்தில் உதடு தடிச்சு போச்சு, கையில் நாலஞ்சு இடத்தில் ஒரு மச்சம் மாதிரி வந்திடுச்சு. அய்யய்யோ என்னாடா இது வம்பு அப்படின்னு திரும்பவும் டாக்டரிடம் ஓடினேன். அவர் பார்த்துட்டு அய்யய்யோ அப்படின்னுட்டு, அவர் கொடுத்த மாத்திரையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துட்டு, வேற மாத்திரை கொடுத்தாரு. மேலும் அலர்ஜி சரியாவதற்கு மாத்திரைக் கொடுத்தார்.

அவர் அலர்ஜிக்கும், ஜலதோஷத்துக்கும் கொடுத்த மாத்திரையில் அலர்ஜியும், ஜலதோஷமும் சரியாச்சு. ஆனால் வயத்து வலியில் கொண்டு விட்டுடுச்சு. எதைச் சாப்பிட்டாலும் உடனே வயத்து வலி, வயத்துல ஒரு எரிச்சல் தாங்க முடியல.

என்னடாது வம்பாப் போச்சேன்னு, திரும்பவும் டாக்டரிடம் போனேன். அவர் இது மாத்திரை நிறையச் சாப்பிட்டதால் அல்சர் ஆயிருக்கு. அத சரி பண்ண மாத்திரை கொடுக்கின்றேன் என்றுக் கொடுத்தார்.

அந்த மாத்திரைச் சாப்பிட்டா, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பயங்கர தலைவலி, தலைச் சுத்தல் தாங்க முடியல. கொடுமையடா சரவணா இதெல்லாம் நமக்குச் சரி வராது. இந்த வயத்து வலியை முதல்ல கட்டுப் படுத்தணும். அதுக்கு ஒரே வழி நம்ம சாப்பாட்டில் காரம் இல்லாமல், சாப்பிடுவது என்று முடிவு செய்து 10 நாளைக்கு வெறும் மோர் சாதம், ப்ரெட் இப்படி சாப்பிட்டு, ஊரில் இருந்து கொண்டுவந்த பாண்டாசிட் மாத்திரையைய்ப் போட்டு கிட்டு ஒரு மாதிரி இப்பத்தான் சரியாயிருக்கு.

தலைவலி போய் திருகு வலி வந்தமாதிரின்னு சொல்லுவாங்க கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா இப்பத்தான் அனுபவச்சேன்.

இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ் கூட சாட்டில் பேசும் போது அவரை கலாய்ச்சதுதான். நீங்களே படிச்சுப் பாருங்களேன்... தம்பி பயங்கர டென்ஷன் ஆயிட்டாரு...

நவாஸ் : அண்ணே எப்படி இருக்கீங்க

நான் : என் நிலைமை எப்படி இருக்குத் தெரியுமா
ஜலதோஷம் வந்து மூக்கு அடைச்சு கிச்சு
சரி என்று டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிட்டால்
அது அலர்ஜியா ஆயிடுச்சு
திரும்பவும் டாக்டரிடம் ஓடினா அவர் பயந்து போய்
அலர்ஜிக்கு மருந்து கொடுத்தா
அது வயத்து வலியில் கொண்டு விட்டுவிட்டது
சரின்னு இப்ப அதுக்கு மருந்து சாப்பிட்டா
அது தலைவலியில் கொண்டு விடுது

நவாஸ் : ஹா ஹா ஹா ஹா.

நான் : என்ன பண்றதுன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம், உண்மைங்க இது

நவாஸ் : நம்ம டாக்டர் தேவன்மாயம் கிட்டா போனீங்களா

நான் : அய்யா நான் இருப்பது நைஜிரியா, அவர் இருப்பது காரைக் குடி இந்தியாவில்

நவாஸ் : என்னண்ணா இது சின்னப்புள்ளைங்க உடம்பு மாதிரி ஆயிடுச்சு உங்களுக்கு. அப்போ கைமருந்துதான் சரிவரும் உங்களுக்கு

நான் : எல்லா மருந்துகளையும் கைல எடுத்து சாப்பிடுகின்றேன்

நவாஸ் : அதாவது நாட்டுமருந்து

நான் : எந்த நாட்டு மருந்து அப்படின்னு சொல்லுங்க

நவாஸ் : அண்ணாஆஆஅ, பாட்டிவைத்தியம்

நான் : எங்க பாட்டி எப்பவோ செத்துப் போயிட்டாங்களே

நவாஸ் : அய்யய்ய்யோஓஒ யாராவது வாங்களேன்

நான் : எதுக்கு. அன்ண்னனுக்கு வைத்தியம் பார்க்கவா

நவாஸ் : எங்க அண்ணனுக்கு மருந்து கொடுக்கத்தான்

நான் : அது சரி. தாங்க முடியலடா சாமின்னு அங்க கத்துவது இங்கு கேட்குது

நவாஸ் : ஹா ஹா ஹா ஹா. இப்போ எப்படி இருக்கு உடம்பு. தலைவலிக்கு கடைசியா மருந்து சாப்ட்டீங்களா

நான் : இல்ல சாப்பிடவில்லை. வயத்து வலிக்கு மட்டும் கொஞ்சமா மருந்து

நவாஸ் : அதுக்கு புதுசா வர வேற எது வலி இருக்குறமதிரி தெரியலை. அதான் எல்ல வலியும் வந்திடுச்சே


ஆனா பாருங்க அன்னிக்கு இப்படி பாதியிலேயே கட் பண்ணிட்டுப் போனவருத்தான் இன்னி வரைக்கு சாட் பக்கமே வரவில்லை. நான் எதாவது தப்பா பேசிட்டேனாங்க... அவருக்கு என் மேல் என்ன கோபம் அப்படின்னு யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.

Monday, December 21, 2009

நாட் குறிப்பு புத்தகம்.

எனக்கு ஒரு விபரீத ஆசை உண்டாச்சுங்க... என்ன அப்படின்னு கேட்கறீங்களா..

புது வருஷம் வந்துச்சுன்னா பலருக்கும் வரும் ஆசைதாங்க எனக்கும் வந்துச்சு...

ஆசையை அடக்க முடியலை..

நிறைய பேர்கிட்ட பார்ர்கும் போது, வழ வழன்னு கலர் கலரா, வித விதமான அளவுகளில் பார்க்கும் போது எனக்கு ஆசையா இருந்திடுச்சுங்க..

எப்படியாவது ஒரு நாட்குறிப்பு புத்தகம் (டைரி? / டயரி?) வாங்கி தினமும் எழுத ஆரம்பிக்கணும் அப்படின்னு...

ஒரு சுபயோக சுப தினத்தில் நானும் டைரி வாங்கலாம் அப்படின்னு நினைச்சுகிட்டு கடைக்குப் போனா, அங்க வித விதமா வச்சு இருந்தாங்க. வழ வழன்னு அட்டை போட்டு சூப்பரா வச்சு இருந்தாங்க. நாமதான் ரொம்ப சுறு சுறுப்பாச்சுங்களா, ஒவ்வொன்னா பாக்கும் போது, இத வாங்கலாம், அதவாங்கலாம் அப்படின்னு நினைச்சு எதையும் வாங்காம விலையை மாத்திரம் பார்த்துட்டு (விலையைக் கேட்டு டரியல் ஆகி !!) திரும்பியாச்சு.

மறு நாள் நம்ம மேனேஜர் கூப்பிட்டு, ராகவா இத வச்சுக்க அப்படின்னு ஒரு பெரிய டைரி ஒன்னு கொடுத்தாருங்க. அத பார்த்தவுடனே நமக்கு பெருமை பிடிபடல. வாங்கி மேலட்டையைத் தடவிப் பார்க்கிறது, ஒவ்வொரு பக்கமா திருப்பிப் பார்க்கின்றதும் அப்படி ஒரு சந்தோஷம். குழந்தையை அப்பா மிட்டாய் கடைக்கு அழைச்சுக்கிட்டு போன மாதிரி ஒரு சந்தோஷம். ஒரு வருஷம் கழிச்சு இதை படிச்சுப் பார்த்தா எவ்வளவு விசயம் எழுதியிருப்போம் அப்படின்னு ஒரு எண்ணம்.

பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சுயசரிதம் எழுதும் போது, இது மாதிரிதான் தங்களுடைய டைரியை வச்சு ரெபரன்ஸ் பார்த்து எழுதுவாங்க போல. நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!) வரும் போது இது ரொம்ப உபயோகப் படும், சுய சரிதம் எழுதுவது மாதிரி கனவு வேற. புது வருஷம் பிறக்கும் வரை இப்படி வித விதமா கனவு கண்டுகிட்டே இருந்தேன்.

புது வருஷமும் வந்தது.. கார்த்தால எழுந்தவுடனே பல் தேய்ச்சு, தங்க மணி கொடுத்த காப்பியைக் கூட குடிக்காமல், டைரியை எடுத்து வச்சுகிட்டு எழுத உட்கார்ந்தாச்சு.

என்ன எழுதுவது. சரி முதலில் நம்ம பேர், அட்ரஸ், பிறந்த தேதி, தங்கமணிகிட்ட மாட்டிகிட்ட தேதி, லொட்டு, லொடஸ்க்கு எல்லாம் கேட்டு இருக்காங்களே அதை நிரப்பலாம் என்று நினைத்து நிரப்பினேன்.

அதுல Pan நம்பர், டிரைவிங் லைசன்ஸ் நம்பர் எல்லாம் கேட்டு இருந்தாங்க. நம்ம கிட்டத்தான் இரண்டுமே கிடையாதே, இருந்தாலும் வெறுமையா விட முடியுமா, அதனால ஒரு கோடு போட்டு வச்சேன். இந்த வருஷம் முடிவதற்குள் இரண்டும் வாங்கிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு.

ஜனவரி 1 - எதாவது எழுத வேண்டுமே. சரி முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்றுப் புரியவில்லை. கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை. இங்க காப்பி ஆறிப் போகுது, அங்க உட்கார்ந்து காலங்கார்த்தால மோட்டுவளையை பார்த்து என்ன ஆகப் போகுதுன்னு தங்கமணி ஒரு சவுண்ட் விட்ட வுடனே, புது வருஷம் அதுவுமா டோஸ் வாங்க வேண்டாம் அப்படின்னு நினைச்சு, டைரி என்பதே அன்று நடந்த விஷயங்களை சாயங்காலம் இல்லாட்டி ராத்திரி உட்கார்ந்து எழுதணும் அப்படின்னுட்டு மூடி டிராயரில் பத்திரமா வச்சுட்டு வந்துட்டேன்.

அன்று புது வருஷம் என்பதால் நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். நான் சிலர் வீட்டுக்கு போனேன். எல்லாத்தையும் மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் ஞாபகமாக டைரியில் எழுத வேண்டும் என்று. சாயங்காலம் இவை எல்லாவற்றையும் ஞாபகமாக குறித்துக் கொண்டேன். ஒரு 10 லைன் எழுதியிருந்தேன். பார்த்த போதே எனக்கே ஒரு சந்தோஷம். முதல் நாள் இவ்வளவுதான் எழுதமுடியும் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அடுத்த நாள் சிலரைச் சந்தித்ததுப் பற்றி எழுதினேன். 4 லைனுக்கு மேல் போகவில்லை.

மூன்றாம் நாளும் இது மாதிரி 4 வரி எழுதினேன். அப்ப தங்கமணி தினமும் ராத்திர் என்னமோ எழுதறீங்களே என்ன அப்படின்னு கேட்டாங்க. ஒன்னுமில்ல நாட் குறிப்பு புத்தகம் எழுதறேன் அப்படின்னேன். நீங்க எழுத்தாளார எப்ப மாறீனீங்க அப்படின்னு கேட்டாங்க. நான் சொல்வது புரியவில்லை என்றால் என்ன பேசறேன்னு கேட்கணும். சும்மா இப்படி எல்லாம் கேள்விக் கேட்கபிடாது அப்படின்னு கேட்கணும் நினைச்சு, ஒன்னுமில்லம்மா டைரி எழுதறேன் அப்படின்னு சொன்னதுக்கு, தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) அப்படின்னு முகவாயில ஒரு இடி இடிச்சுட்டு போன்னாங்க.

அதுக்கு அப்புறம் பிப்ரவி 1 அன்றுதான் டைரி பற்றி நினைப்பு வந்தது. அடடா இத்தனை நாளும் எழுதாம போயிட்டோமேன்னு ஒரே வருத்தமா போயிடுச்சுங்க. என்ன செய்வது போனது போனதுதான். ஆனாலும் என்ன எழுதுவது என்றுத் தெரியவில்லை. சரி தினமும் என்ன செலவு செய்தோம் அப்படின்னு எழுதலாம் அப்படின்னு நினைக்கும் போதுதான்,இந்த வீட்டில் நான் செலவு எதுவும் செய்வது இல்லை என்ற ஞாபகம் வந்தது. அப்படி இப்படின்னு மூளையை (?) கசக்கி, அன்னிக்கு சந்தித்தவர்கள், அலுவலகத்தில் நடந்த விஷயங்கள், சிலருக்கு எழுதிய மெயில் எல்லாம் எழுதினேன்.

இப்படி அப்படின்னு தீடீரென நினைச்சு எழுதுவேன். அப்புறம் கொஞ்ச நாள் எழுத மாட்டேன். 3 மாசம் போச்சு. தங்கமணி, இந்த டைரியை வச்சுகிட்டு என்ன செய்யறீங்க. 3 மாசத்தில் அங்க அங்க எழுதியிருக்கீங்க அப்படின்னு கேட்டாங்க.

நானும் மத்தவங்க டைரியெல்லாம் படிப்பது ரொம்ப தப்புன்னு சொன்னதுக்கு, நான் உங்களில் பாதிதானே, அதனால படிச்சா தப்பு ஒன்னுமில்ல அப்படின்னு சொன்னாங்க. சொல்லிட்டு, எனக்கு வரவு செலவு கணக்கு எழுத நல்லதா ஒரு நோட்டு இல்ல. இதுல நீங்க ஒன்னும் எழுதுவதில்லையே எனக்கு கொடுங்க அப்படின்னு கேட்டாங்க. அப்பாடா இதுதான் சமயம் என்று, நானும் டயரியில் அதைத்தான் எழுதணும் என்று இருந்தேன். நீயே (நீங்களே?) சரியாச் சொல்லிட்டே. வச்சுக்கன்னு உடனே தூக்கிக் கொடுத்துட்டேன். அப்பாடா இந்த டைரி எழுதுவதில் இருந்து தப்பிச்சுட்டேன்.

அப்ப நினைச்சுகிட்டேன்.. இந்த டயரி எழுதுவது எவ்வளவு கஷ்டமான விசயம் என்று..

நீங்க என்ன நினைக்கிறீங்க

Tuesday, December 15, 2009

வலைப்பதிவர்கள் சந்திப்பு - 11-12-2009ரொம்ப நாளாச்சு. .. அபுஜாவில் பதிவர் சந்திப்பை நடத்தி...

ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பை நடத்தி விட மனது துடித்தது. உடனே தம்பி அணிமா (இன்னமும் பதிவர்தான்.. !!), நேசமித்ரன் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னபோது, தம்பி நேசன் கவிதை நடையில் பதில் தெரிவித்தார். அந்த கவிதை

ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.

பொருள் : அண்ணே வேலை ரொம்ப அதிகம். அதனால் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றேன். சந்திப்பு இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.

கடந்த மே மாதம் நடந்த மாதிரி மிகப் பெரிய, உலகம் காணத, இந்த படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற கோஷங்களுடன் நடந்த வலைப் பதிவர் மாநாட்டை இந்த வருடமும் நடத்திவிட வேண்டும் என தம்பி அணிமா ஆசைப் பட்டதால், அதை பற்றி முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு என முடிவு செய்யப் பட்டது.

பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால், இந்த வருடம் வலைப் பதிவர் அகில உலக மாநாட்டை நடத்துவது பற்றியும், உலக வங்கியில் கடன் வாங்க இயலுமா என்பதுப் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை 7 மணியளவில் இந்த சந்திப்பு என ஏகமனதாக ஏற்பாடுச் செய்யப் பட்டு, 7.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. (செயலாளர் தன்னுடைய பதிவியின் பந்தாவை காண்பித்துக் கொள்வதற்காக வந்தது லேட்... எப்போதும் போல்..)

பலவிதங்களில் பேசியும், எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.

அப்போது எடுத்தப் படங்கள் உங்கள் பார்வைக்காக..வலைப் பதிவர் சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்களை வரவேற்கும் நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.எங்கள் வலைப்பதிவு சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்கள் புகைப் படத்திற்கு கொடுத்த போஸ்..சங்க பொதுச் செயலாளருடன் உயர் திரு. மனோஜ்


சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்வெல்கம் டிரிங்ஸ் ???


தம்பி நேசமித்திரனுடன் தொலைப் பேசி உரையாடல்.. சங்க விஷயங்களைப் பற்றிப் பேசப் பட்டது.


சங்கத் தலைவர் ...


மோனோ ஆக்டிங் ??? (என்னோட பதவிக்கு யாரும் போட்டி போடமுடியாது.. )


சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க


பொறுப்பி :

1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த மனுஷனுக்கு ஏன் கேமிரா வாங்கி கொடுத்தீங்க என அவர்கள் மேல் யாரும் கோபப் பட்டு விடாதீர்கள். விதி... வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

2. அனைத்து கிளைச் சங்களுக்கும் சங்கப் பொருளாதார நிலைப் பற்றிய நிதி நிலை அறிக்கை தனி மடலில் அனுப்பப்பட்டுள்ளது.

3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

4. நிதி நிலைமை சீரான பிறகு, மாநாடு நடத்தப் படும் என்பதை மிகத் தாழ்மையுடன் அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.
Saturday, December 12, 2009

அப்பா

அன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது லேட்டாகிவிட்டது. அலுவலகம் இருந்தது வண்டலூரில். வீடு மடிப்பாக்கத்தில். மறுநாள் அனுப்ப வேண்டிய பர்ச்சேஸ் ஆர்டர்களையும், வந்த பில்கள் அனைத்தையும் செக் செய்து, கையெழுத்துப் போட்டு, அசிஸ்டெண்ட் பாலுவிடம் கொடுத்துவிட்டு கிளம்ப நேரம் ஆகிவிட்டது. மணியைப் பார்த்தல் 8. அய்யோ ரொம்ப நேரமாச்சே. அப்பா வேற தூங்காம காத்துகிட்டு இருப்பாரே. என்னச் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாறு. நீங்க எப்போதும் போல் 8 மணிக்கு படுத்துகுங்க அப்பா, நான் வர லேட்டாகும் அப்படின்னு சொன்னாலும், அலுவலகத்தில் இருந்து வந்து, என்னைப் பார்த்தப் பின்னாடித்தான் அவர் படுத்துக்கப் போகின்றார். 87 வயச்சாச்சு ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கின்றார் என புரியவில்லை என்று பலவாறக நினைத்தப் படி வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

வீடு வந்து சேர மணி 8.40 ஆகிவிட்டது. வீட்டுக்கு வந்தவுடன், ஷுவைக் கழட்டி வைத்துவிட்டு, நேராக அவரைப் போய்த்தான் பார்க்கவேண்டும். போனவுடனே மணியைப் பார்ப்பார். இந்த காலத்தில அப்படி என்னதான் வேலை செய்கின்றீர்களோ புரியவில்லை. 6 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு 7 மணிக்குள்ளாவது வீட்டுக்கு வரவேண்டாமா என்று சொல்லுவார்.

அன்று அதே மாதிரி, போனவுடனேயே, வாடா குழந்தை ரொம்ப லேட்டாயிடுச்சு இன்னிக்கு அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே, அப்பா பிபி மாத்திரை மத்யாணம் சாப்பிட்டீங்களா அப்படின்னு கேட்டதுக்கு சாப்பிட்டேன், இப்ப இந்த இரண்டு மாத்திரைத்தானே சாப்பிடணும் அப்படின்னு கேட்டார். பெயரைப் பார்த்து இதைத்தான் சாப்பிடணும் அப்படின்னு சொன்ன பிறகு, இன்னிக்கு சப்பாத்தி ஏ கிளாஸ். பர்ஸ்ட் கிளாஸ் டால். நானே நாலுச் சாப்பிட்டேன்னா பார்த்துக்கோ. போ.. போ.. மூஞ்சி கை,கால் அலம்பிட்டு சாப்பிடுன்னு வாஞ்சையாச் சொன்னார்.

மூஞ்சி கை, கால் அலம்பிட்டு வந்து மாத்திரைச் சாப்பிட்டீங்களா கேட்ட போது, நான் சாப்பிட்டாச்சு, போய் முதல்ல சாப்பிடு. மத்யானம் சாப்பிட்டது. நேரத்தோடு சாப்பிட பழகிக்கோ அப்படின்னு சொன்னார்.

எப்போதும் போல் ஈசிச்சேரில் உட்கார்ந்து, முன்னாடி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டுகிட்டு, சாப்பிட உட்கார்ந்தா, அப்பா ரூமில் இருந்து டமால்ன்னு ஸ்டூல் விழறச் சத்தம் கேட்டுச்சு. இத்தனைக்கும் அவர் ரூம் முன்னாடித்தான் உட்கார்ந்து இருக்கேன்.

என்னடான்னு பார்த்தா, கட்டிலில் உட்கார்ந்திருவர் அப்படியே ஜன்னலில் சாய்ஞ்சுகிட்டு இருக்கார், கண்கள் மேலே சொருகியிருக்கு. தன்க்கு முன்ண்ட்டை வச்சு இருந்த ஸ்டூலையும், வென்னீர் பாத்திரத்தையும் தட்டி விட்டு இருக்கார். புரை ஏறும் போது இப்படி ஆகும் என நினைச்சுகிட்டு,( முன்னாடி சில சமயம் அது மாதிரி ஆகியிருக்கு) தூக்கி முதுகுல தட்டி கொடுத்தா ... களக் என்று ஒரு சத்தம்... என் மேல் சாய்ந்தார்.. தலை சாய்ந்துவிட்டது... வாயில் இருந்து எச்சில் ஒழுகுகின்றது ...கூப்பிட்டா பதில் இல்லை....

சரி உடனே நங்கநல்லூர் ஹிந்து மிஷின் ஆசுபத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்குள், விரல்களைத் தொட்டால் ஜில் என்று ஆகிவிட்டது...

அப்பா ... போயிட்டார் .. நன்றாகத் தெரிந்துவிட்டது.. இருந்தும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துப் போய், காண்பித்த போது, அவர் நம்மை விட்டு போய்விட்டார் என மருத்துவர் தெரிவித்தார்.

இன்று அவருக்கு 4 வது திவசம்.... ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதை நினைக்க மனசு வேதனை..

அப்பா எவ்வளவு கத்துக் கொடுத்து இருப்பாய். பாடம் சந்தேகம் கேட்டால் நீயாக பதில் சொல்வதைவிட, நானே கத்துகிறமாதிரி அதை செய்வாயே...

சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வேறுபாடு சொல்லிக் கொடுத்தாயே...

இரண்டு வேஷ்டிகளுக்கு மேல் மூன்றாவது வேஷ்டி இருந்தால் அது லக்சரி என்று சொல்வது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் அதே மாதிரி வாழ்ந்து காட்டீனாயே...

உன்னை நினைத்து தூக்கம் போய்விட்டது..

கொஞ்சம் தூங்கட்டும்மா..

கடைசி வரை உன் மரியாதையை எவ்வளவு நல்லா காப்பாத்தி கொண்டு போனாய். யாருக்கும் பாரமா இருக்க கூடாது, சட்டென போயிடணும் அப்படின்னு சொன்னது மட்டுமல்லாமல், அப்படியே செய்து காட்டினாய்.

இன்றும் என்னால் மறக்க முடியாது, உன்னை பெசண்ட் நகர் எடுத்துச் செல்லும் போது வழியில் இருந்த அத்தனை டிராபிக் போலிஸூம் தொப்பியைக் கழட்டிவிட்டு சல்யூட் அடித்ததை..


பொறுப்பி :

என் அப்பாவை நினைத்து இன்று இரவு உறக்கமே வரவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த இடுகை.

Sunday, December 6, 2009

படங்கள் - எங்கள் வீட்டுத் தோட்டம்

எங்க வீட்டுத் தேட்டத்தை படம் எடுத்துப் போட்டு இருகேன்.

புகைப் படக் கருவி வாங்கிக் கொடுத்த வடலூரான் கலையரசனுக்கு இந்த படங்கள் சமர்ப்பணம்.கலர் கலரா குருவியைப் பார்த்தவுடன் கிளிகிட்டேன். தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன. இப்போதெல்லாம் வருவதேயில்லை. ஏன் என்றுத் தெரியவில்லை.


இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ள செம்பருத்திச் செடி.


வீட்டு வரவேற்பறையில் இருந்து எடுத்தப் படம்


வேர்கடலை செடி. இந்த படம் வருங்கால சந்ததியனருக்காக. தமிழ் நாடு முழுவதும் வருங்காலத்தில் கான்கிரீட் காடுகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


வளர்ந்துவரும் முளைக்கீரை..பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில் வச்சு வளர்க்கின்றேன். பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்புதினா - ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த்தில் இப்படி வளர்ந்திருக்கு.


பாகல் பூ


முதல் பாகல் பிஞ்சு


தோட்டம் வெளியில் இருந்து


சாமந்திபூவெண்டை பூ பூப்பதற்கு முன்


வெண்டைப் பூ


வெண்டைக்காய் - எங்கள் தோட்டத்தில் காய்த்த முதல் காய்எங்க தோட்டத்தில் பூத்த ரோஜா


இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்


இதுமாதிரி படங்கள் போடுவதற்கு உந்து சக்தியாக இருந்தது நண்பர் ஞானசேகரன் அவர்களின் கண்டதும் சுட்டதும் வலைப்பூ. அதற்காக அவருக்கு நன்றிகள் பல.

பொறுப்பி :

1. இந்த படங்களில் லைட்டிங் சரியில்லை, அது சரியில்லை என்று யாராவது திட்ட வேண்டுமானால் என்னை மட்டும் திட்டவும். புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க மாட்டார்.

2. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி, நானும் நண்பர் ஞானசேகரனைப் பார்த்து படம் போட்டு இருக்கேன். தயவு செய்து யாரும் அவரையும் என்னையும் எந்த விதத்திலும் கம்பேர் செஞ்சுடாதீங்க. அவர் மலை நான் மடு.

3. இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

Saturday, November 21, 2009

ஜஸ்ட் இக்னோர் இட்...அது ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. அங்கு அவன்... (எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..) ஒரு பர்ச்சேஸ் மேனேஜர். அவனுக்கு 15 வருடம் பல கம்பெனிகளில் வேலைப் பார்த்த அனுபவம் இருந்தாலும், பர்ச்சேஸ் என்பது அவனுக்குப் புதியது.

அந்த கம்பெனியில், அவனுக்கு உதவியாக, 6 பேர் இருந்தனர். அதில் 4 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள்.

அந்த கம்பெனியின் முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் சேர்ந்து காசுப் போட்டு, பரிசு வாங்க தீர்மானித்தனர்.

என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு.

சரி எக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து ஒருத்தர், வேறு சில டிபார்ட்மெண்டில் இருந்து சிலர் என நான்கு பேர் பரிசுப் பொருள் வாங்கச் செல்லலாம் என முடிவு செய்தனர்.

அவன் (அதாவது எக்ஸ்), வேலை கூடுதலாக இருந்ததால், தன்னுடைய உதவியாளர் ஒருவரை அவர்கள் கூட அனுப்பினான்.

அந்த உதவியாளர், கொஞ்சம் அல்டாப் பேர்வழி. இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் அவரை பரிசுப் பொருள் வாங்க அனுப்பினான். அவர்களும் ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து பரிசு பொருளை வாங்கி வந்தனர். வரும் போது, பரிசு கொடுப்பதற்கு ஏதுவாக பேக் செய்து, பொருள் என்னவென்று தெரியாத மாதிரி கொண்டு வந்தனர்.

கூட வேலைச் செய்த மற்றவர்களுக்கு என்ன பரிசுப் பொருள் என அறிய ஆவல். அதனால் அவர்கள் பரிசுப் பொருள் வாங்கப் போனவரை என்ன பரிசுப் பொருள் என்று கேட்கத் தொடங்கினர். அவரும், பிரமாதமான பரிசுப் பொருள், சூப்பரா இருக்கு, ரூ x,xxx/- ஆச்சு, என்றெல்லாம் சொல்லுகின்றாரேத் தவிர, என்ன பரிசுப் பொருள் என்றுச் சொல்லவேயில்லை. ஒருவர் வாய் திறந்தே கேட்டு விட்டார். அதற்கு அவர், பரிசுக் கொடுக்கும் போது முதளாலி திறந்து காண்பிப்பார் அப்ப பார்த்துக்கோங்க, அது சஸ்பென்ஸ் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

எக்ஸ் அப்போது கூட, அவரிடம் என்ன பரிசுப் பொருள் என்றுக் கேட்கவில்லை. அந்த உதவியாளரும் எக்ஸ் எதாவது கேட்பேரா என்று எதிர்ப் பார்த்தார். நேரம் கடந்தது. அதைப் பற்றி எக்ஸ் கவலைப் படவேயில்லை. அவர் தன் வேலையில் கண்ணும், கருத்துமாகவே இருந்தார்.

அந்த உதவியாளர், கொஞ்ச நேரம் கழித்து எக்ஸிடம் வந்தார்...

அவர் : சார் என்ன பரிசுப் பொருள் என்று நீங்கள் கேட்கவேயில்லையே ?

எக்ஸ் : என்ன அவசரம், நாளைக்கு கொடுக்கும் போது தெரிந்துவிடப் போகின்றது.

அவர் : எல்லோரும் கேட்டாங்க, ஆனால் நீங்க கேட்கவில்லையே?

எக்ஸ் : அதுதான் நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றதே? தெரியவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடப் போகின்றாதா என்ன?

அவர் : இல்ல சார் டிபார்ட்மெண்ட் சீஃப் நீங்க ஒன்னுமே கேட்கவேயில்லையே?

எக்ஸ் : ஆமாம் டிபார்ட்மெண்ட் சீஃப் நான் தான். இல்லை என்றுச் சொல்லவேயில்லையே? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.

அவர் : என்ன சார் நீங்க என்ன பரிசுப் பொருள் என்று கேட்கவே மாட்டேன் என்கின்றீர்களே?

எக்ஸ் : அதான் சொன்னேனே, நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றது. இப்ப என்ன அவசரம்.

அவர் : அது வந்து சார், சந்தன மரத்தில் செதுக்கிய அழகான சிற்பம் சார்.

எக்ஸ் : அப்படியா .. ரொம்ப சந்தோஷம்..

உதவியாளருக்கு முகம் தொங்கிப் போயிட்டது. என்னாடா இந்த மனுஷன் இப்படி இருக்கின்றாரே என்று. அந்த உதவியாளர் வேறு விஷயமாக வெளியே போன போது, மற்றொரு உதவியாளர் எக்ஸிடம் வந்து, சார், நாங்க எல்லாரும் கேட்ட போது, பதில் சொல்லாமல் எதோ எதோ சொன்னார்கள். நீங்க எப்படி சார் அவங்களையே சொல்ல வச்சீங்க அப்படின்னாங்க..

எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...

எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...

எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..

பொறுப்பி :
1. பாதி உண்மை, மீதி புனைவு

2. வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.

நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,

இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.

3. பொறுப்பி 2 கவிதை என்பதை இங்கு கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

4. கவிதை எழுத எனக்கு ரோல் மாடல் - அன்பு அண்ணன் தண்டோரா.

Tuesday, November 17, 2009

பத்துக்குப் பத்து.. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒரு சங்கிலித் தொடர் இடுகை, வலைப் பதிவுகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.தொடங்கியவர் திரு. மாதவராஜ் அவர்கள். இந்த சங்கிலித் தொடர் இடுகையைத் தொடர என்னை அழைத்து இருப்பவர் அன்புத் தம்பி “ஷஃபி” உங்களில் ஒருவன்.

இந்த பிடித்தது, பிடிக்காததுப் பற்றி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இன்று எது பிடிக்கின்றதோ அது நாளை பிடிக்காததாக மாறி விடுகின்றது. பிடிக்காதது பிடித்ததாக மாறி விடுகின்றது. மாறுதல் என்ற வார்த்தை ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் மாற்றத்துகுரியது.

இன்று நான் பிடித்தது, பிடிக்காதது, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று போடப்படுவது அனைத்தும் இன்றைய மன நிலையில் போடப்படுகின்றது.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்.


இந்த இடுகையைப் போடும் போது பின் வரும் விதி முறைகளையும் ஏற்படுத்தி வைத்து இருக்கின்றனர். அவை

  1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்..
  2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
  3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்

குறிப்புகள் :

  1. பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்
  2. கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம்


இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல் தலைவர்கள்

பிடித்த‌வ‌ர்க‌ள் : யாருமே இல்லை

பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இரண்டிற்கும் காரணம் ஒன்னுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.

2. எழுத்தாளர்கள் :

பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)

பிடிக்காதவர்கள் : யாருமே இல்லீங்க.. (சில சமயம் எழுதப்பட்ட கதைகளோ அல்லது அதன் கருவோ பிடிக்காமல் போகலாம் - அதனால் அது அவர்களைப் பிடிக்காது என்று சொல்லமுடியாது)


3. திரைப்பட பாடலாசிரியர்கள் :

பிடித்தவர்கள் : வைரமுத்து (இவரின் கற்பனை வளம் எனக்கு பிடித்தது), கவிஞர் வாலி... (என்னைக் கட்டிப் போடும் வரிகள்)

பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும் (வாலி, வைரமுத்து குத்து பாட்டு எழுதும் போதும் எரிச்சலாகத்தான் வ்ரும்...)

4. நகைச்சுவை நடிகர் :

பிடித்தவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசாமல், குட் காமெடியுடன் (குட் காமெடி, பேட் காமெடிக்கு ஐயா லதானந்த அவர்களின் இந்த இடுகையைப் பார்க்கவும்) நடிக்கும் போது அனைவரும்

பிடிக்காதவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசி நடிக்கும் அனைவரும். இந்த மாதிரி காட்சிகளைப் பார்க்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரிகின்றது.

5. நடிகர் :

பிடித்தவர்கள் : சரியாக நடிக்கும் போது - யாராக இருந்தாலும்..

பிடிக்காதவர்கள் : நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...

6. நடிகை :

பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.

பிடிக்காதவர்கள் : இன்று திரைத் துறையில் இருப்பவர் அனைவரும்

7.தொழில் அதிபர்க‌ள் :

பிடித்தவர்கள் : வேணு சீனிவாசன்... சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர். அங்கு வேலை பார்த்ததால் அவரைப் பற்றி நன்கு தெரியும்.

பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்


8. இயக்குனர் :

பிடித்தவர்கள் : இதில் குறிப்பிட்டு இவர்தான் என்று சொல்லத் தெரியவில்லை. படம் பிடிக்கும் போது, அவரைப் பிடிக்கின்றது.. உதாரணம் - பாரதிராஜா - முதல் மரியாதை படத்துக்காக அவரை ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதவர்கள் : ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.


9. பதிவுலகம் :

பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.


10. திரைப்படங்கள் :

பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி

பிடிக்காதது : எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்.


இந்த தொடர் இடுகையை தொடர யாரையும் நான் அழைக்கவில்லை.

காரணம் - கிட்ட தட்ட எல்லாரும் எழுதியாச்சு...

அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்.

Monday, November 16, 2009

என்ன தலைப்பு வைக்க..


வேளாச்சேரியில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் உள் சாலை.. ஆரம்பமே... குப்பை கூளத்துட்டம் ஆரம்பிகின்றது.மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரிக்கரை ஓரமாக கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள் - இது ஒரு சாம்பிள் தான்.. ஏரிக்கரை ஓரமாக சென்றீர்கள் என்றால் இது மாதிரித்தான் இருக்கும். அழகான ஏரி... இதன் அருமை தெரியாமல் இப்படி வீணடிக்கின்றார்களே என்ற வருத்தம்தான்.
சென்னையில் அண்ணா சாலையில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த படம் எதற்காக என்றுதானே கேட்கின்றீர்கள்.

செக்யூரிட்டி அறை அந்த கட்டடத்தை விட்டு வெளியே, மக்கள் நடக்கும் நடை பாதையின் மேல் அமைந்துள்ளது.

இந்த கட்டடம் நந்தனம் சிக்னலுக்கும், எஸ்.ஐ.இ.டி. சிக்கனலுக்கும் இடையில் கருமுத்து மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது.

கட்டடம் கட்டும் போதே இதை அரசு அதிகாரிகள் கவனிக்க மாட்டார்களா.. இத்தனைக்கும் இது மிக முக்கியமான, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் செல்லும் வழியில் இருக்கின்றது.

இதே போல், எத்தனைப் பேர் கவனித்து இருப்பீர்கள் எனத் தெரியாது... சென்னை VGP யின் வாயில், நடை பாதையின் மேல்தான் அமைந்து இருக்கு. எத்தனையோ ஆட்சிகள் வந்துப் போயிருக்கு, நானும் பல வருடங்களாக கவனித்து இருக்கின்றேன், இது வரை யாருமே, எந்த ஆட்சியாளருமே இதை பற்றி கேள்வி கேட்டதில்லை..

ஆண்டவருக்கே வெளிச்சம்.

Saturday, November 14, 2009

அகர வரிசை சங்கிலித் தொடர் இடுகை...


உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. சரி நமக்கும் இடுகை எழுத விஷயம் ஒன்னும் கிடையாதா, இதுதாண்டா சாக்கு அப்படின்னு, இந்த சங்கிலித் தொடர் இடுகையை கெட்டியா பிடிச்சுகிற வேண்டியதா இருக்குங்க.

சும்மா (நம்புங்க வலைப்பூ பெயர்ங்க..) அப்படின்னு சொல்லிகிட்டு, பொளந்து கட்டிகிட்டு இருக்கும் கவிதாயினி, தேனம்மை லஷ்மணன் அவர்கள், சுமார் 15 நாட்களுக்கு முன் இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்து இருந்தார்கள். இன்னிக்கு எழுதலாம், நாளைக்கு எழுதலாம் என்று நாட்களை கடத்தியாச்சுங்க. சோம்பேறித்தனம் என்று இல்லை... வேலை பளு கூடுதல்தாங்க காரணம். ஒரு வழியா இன்னிக்கு முடிவு பண்ணி இந்த தொடர் இடுகையை தொடர்கின்றேன்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்க ஆசைப் படுகின்றேன்... இந்த தொடர் இடுகைக்கு நான் யாரையும் அழைக்கப் போவதில்லை... காரணம் என்ன என்கின்றீர்களா.. எனக்குத் தெரிந்த எல்லோரும் எழுதிட்டாங்க... சிலர் கூப்பிட்டாலும் எழுத மாட்டாங்க. அதனால், மீ த லாஸ்ட்...

1. A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க...

2. B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்‌ஷே இல்ல

3. C- Cake or pie - பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..

4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி

5.E - Essential items you use everyday - மூளை அப்படின்னு சொல்லுணும் ஆசை.. ஆனால் இருப்பவங்கதான் அதைச் சொல்ல முடியும் அப்படிங்கிறதால, எதையெல்லாம் தினமும் உபயோகப் படுத்துகின்றேனோ, அது எல்லாம்.

6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...

7. G - Gummy bears or worms - இது சத்தியமா என்ன என்று புரியலை.. அதனால் Pass..

8. H - Hometown - எந்த ஊரைச் சொல்ல... படிச்சது கும்பகோணம்.

9. I - Indulgence - இது வேறாயா... அப்படி ஒன்னும் கிடையாது

10. J - January/Feruary - இரண்டுமே... தங்கமணி பிறந்த நாள் ஜனவரி.. என்னோடது பிப்ரவரி அதனாலத்தான்

11. K - Kids and their names - இளவரசு ஒருவர் மட்டும் தாங்க - அரவிந்த்

12. L - Life is incomplete with out - அன்பு

13. M - Marriage date - நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)

14. N - Numberof siblings - 2 அன்பான அக்காக்களும் 2 அன்பான அண்ணன்களும்

15. O - Oranges or Apples - எது கொடுத்தாலும் எனக்கு ஓகே

16. P - Phobias/ Fears - பயம் அப்படிங்கிறத பார்த்து பயம்

17. Q - Quotes for today - இரண்டு சொல்ல ஆசைப் படுகின்றேன்

ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.

BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS (இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது - ரொம்ப பிடித்தது)

18. R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்

19. S - Season - Four season

20. T- TAG 4 PEOPLE - யாருமில்லை (உண்மை என்ன என்றால் யாரும் கிடைக்கவில்லை...)

21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்

22. V - vegetables you dont like - சைவச் சாப்பாடுன்னு ஒன்னு கிடைச்சா போதும் அப்படின்னு இருக்கோம் .. இதுல பிடிச்சது, பிடிக்காது என்று எல்லாம் சொல்லமுடியுமா என்ன..

23. W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..

24. X - Xrays you had - அது நிறைய இருக்குங்க... வருஷா வருஷம் எடுப்பது என்றில்லாமல், அவ்வப்போது முதுகு, மார்பு, கழுத்து என்று நிறைய இருக்கு..

25. Y - Your Favourite Food - சைவ உணவு வகைகள்

26. Z - Zodiac Sign - மகரம் / Acquarian


அன்பிற்கு உரியவர்கள் - நான் அன்பு செலுத்துபவர்கள், என் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும்

ஆசைக்குரியவர் - அன்பு மனைவியும், ஆசை மகனும்

இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்

ஈதலில் சிறந்தது - பசித்தவருக்கு உணவும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

உலகத்தில் பயப்படுவது - கூட இருந்தே குழி பறிக்கும் ஆசாமிகள்

ஊமை கண்ட கனவு - அது அவரைத்தாங்க கேட்கணும்

எப்போதும் உடன் இருப்பது - உயிர் (இப்போதைக்கு...) பின்னர் - நாம் செய்த நல்ல காரியங்கள், தான தர்மங்கள்

ஏன் இந்தப் பதிவு - கூப்பிட்டு இருக்காங்க - ஏமாத்தக்கூடாது என்ற நல்ல எண்ணம் தாங்க

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - நல்ல விஷயங்கள்.. பெரியோர்களின் வாழ்த்துகள்

ஒரு ரகசியம் - ரகசியம் .. பரம ரகசியம்.. இரண்டாவது ஆளுக்கு தெரிஞ்சா அது ரகசியமே இல்லை

ஓசையில் பிடித்தது - குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..

ஒளவை மொழி ஒன்று - ஆறுவது சினம்..


பொறுப்பி :-

இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் ஐம்பது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் 50 வரை போட்டாச்சு...

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...
நண்பர் இளைய பல்லவன்(ர்), பட்டய கணக்கர், காஞ்சித்தலைவன் அவர்கள் ஒரு தொடர் இடுகைக்கு அழைத்துள்ளார், நம்மளையும் நம்பி இந்த உலகம் தொடர் இடுகைக்கு அழைப்பதால், அதை மறுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த தொடர் இடுகை..

எல்லா கேள்விகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகின்றேன். இந்த பதிவை தங்கமணி அவர்களும் படிப்பதால், உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னைப் பற்றி முக்கியமாக சொல்ல ஒன்றுமே இல்லீங்க. 44 வயசு. 1992 ல் திருமணம். அரவிந்த் என்று ஒரே ஒரு மகன். இந்தியாவில், ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, லக்னோ, சென்னை என்று பல ஊர்களில் வேலை. வெளி நாட்டில் சைனா, கத்தார், தற்போது நைஜிரியாவில் கணக்குப் பிரிவு, மேலாளர் மற்றும் அட்மின் பிரிவின் உதவி மேலாளராகவும் இருக்கின்றேன். (சிறு குறிப்பு என்று கேட்டதால் இவ்வளவுதாங்க..)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. அக்காவின் தலை தீபாவளிக்கு அவர்கள் வாங்கி வந்த வெடிகள் மறக்க முடியாத தீபாவளிதாங்க. அப்போது கிருஷ்ணர் வெடி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து, அப்போது அது வெடித்துவிட்டது. நல்ல வேலையாக கையில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் அப்பா அடிச்ச அடியில் முதுகு பழுத்துவிட்டது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

நைஜிரியாவின் தலைநகர் அபுஜாவில்தாங்க.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இங்கு இந்தியர்கள் தங்களுக்குள் வீட்டிலேயே கொண்டாடும் தீபாவளிதாங்க. வெடி வெடிக்க இயலாது. கெய்சர் சுடு தண்ணி குளியல், சாமி கும்பிடுதல், புதுத் துணி போட்டுகிட்டு அலுவலகத்திற்கு போயாச்சு.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

ஜூலை மாசம் இந்தியா போயிருந்த போது, குளோபசில் புதுத்துணிகள் வாங்கி வந்ததுதாங்க. என்ன ஒரு கஷ்டம், சைஸ் 34 என்று கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தால் ரொம்ப லூஸ் ஆகியிருக்கு. நான் இளைச்சு போயிட்டேனா, இல்ல சைஸ் 34 போட்டு பெரிய சைஸ் கொடுத்துட்டாங்களான்னு பார்க்கணும்.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

மிக்சரும், செவன் கேக், குளோப்ஜாமூன் எல்லாம் வீட்டில் செய்தார்கள்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

பலருக்கும் தொலைப் பேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அலுவலகம் போயாச்சுங்க. மாலை நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு பல நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்கள் கூட உணவு உண்டு சந்தோஷமாக பொழுது கழிந்தது. தொலைக் காட்சி என்றால் இங்கு ஜெயா டிவி, TBO, ஏசியா நெட், கைரளி என நான்கு டிவித்தான் தெரியும். சில ஹிந்தி சேனல்கள் உண்டு. அவ்வளவாக புரியாததால் பார்ப்பதில்லை. அலுவலகம் இருந்ததால் எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

விசேஷங்கள் அன்று உதவி என்று எதுவும் செய்வதில்லீங்க. எப்போது எல்லாம் முடிகின்றதோ, அப்போது உதவி செய்வேன். பல தனிப்பட்ட காரணங்களினால் எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருக்கின்றேன்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அண்ணன் வானம்பாடி அவர்கள் - இவரின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. அஷ்டாவதானி என்று இவரைச் சொல்லலாம். நான் அடிக்கும் கும்மிகளை சந்தோஷமாக ஏற்றுக் கொள்பவர் என்பது ஒரு காரணம்.

தம்பி நேசமித்ரன் - கவிதையின் புது பரிமாணத்தை எனக்கு உணர்த்தியவர். ஒரு சீரியசான இடுகையில் கும்மி அடிச்ச போதும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர். மேலும் பழக இனிமையானவர்.

சும்மா - பேருதான் சும்மா. வலைப்பூவில், தேனம்மை லஷ்மணன் அவர்களின் கவிதைகள் தேனில் தோய்த்து, சக்கரை பாகில் வடித்திருப்பார். காதலையும், பூக்களையும் இணைத்து கவிதையாக வடித்திருப்பார். அருமையான கவிதைகள்.

ராகவன் - வலைப்பதிவில் சமீபகாலமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். அழகான கவிதைகள். நெஞ்சைத் தொடுக் கவிதைகள். இவரின் இன்றைய பிள்ளைக்கலி கவிதை நெஞ்சைத் தொடுகின்றது. இவரையும் இந்த தொடர் இடுகை எழுத அழைக்கின்றேன். எங்க இருவருக்கும் பெயர் பொருத்தம் மட்டும் தாங்க. அண்ணன் கவிஞர். கவி மழைப் பொழிகின்றார். இவரின் மற்றொரு கவிதை குரல் குடித்தனம். படித்துப் பாருங்க அவரின் பெருமை புரிய வைக்கின்ற மற்றொரு கவிதை.

இன்னும் சிலரை அழைக்க ஆசையாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் நாமே எல்லோரையும் அழைத்து விட்டால், மற்றவர்களுக்கும் ஆள் கிடைக்க வேண்டுமே என்ற காரணத்தினால், இதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.