அது ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. அங்கு அவன்... (எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..) ஒரு பர்ச்சேஸ் மேனேஜர். அவனுக்கு 15 வருடம் பல கம்பெனிகளில் வேலைப் பார்த்த அனுபவம் இருந்தாலும், பர்ச்சேஸ் என்பது அவனுக்குப் புதியது.
அந்த கம்பெனியில், அவனுக்கு உதவியாக, 6 பேர் இருந்தனர். அதில் 4 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள்.
அந்த கம்பெனியின் முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் சேர்ந்து காசுப் போட்டு, பரிசு வாங்க தீர்மானித்தனர்.
என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு.
சரி எக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து ஒருத்தர், வேறு சில டிபார்ட்மெண்டில் இருந்து சிலர் என நான்கு பேர் பரிசுப் பொருள் வாங்கச் செல்லலாம் என முடிவு செய்தனர்.
அவன் (அதாவது எக்ஸ்), வேலை கூடுதலாக இருந்ததால், தன்னுடைய உதவியாளர் ஒருவரை அவர்கள் கூட அனுப்பினான்.
அந்த உதவியாளர், கொஞ்சம் அல்டாப் பேர்வழி. இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் அவரை பரிசுப் பொருள் வாங்க அனுப்பினான். அவர்களும் ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து பரிசு பொருளை வாங்கி வந்தனர். வரும் போது, பரிசு கொடுப்பதற்கு ஏதுவாக பேக் செய்து, பொருள் என்னவென்று தெரியாத மாதிரி கொண்டு வந்தனர்.
கூட வேலைச் செய்த மற்றவர்களுக்கு என்ன பரிசுப் பொருள் என அறிய ஆவல். அதனால் அவர்கள் பரிசுப் பொருள் வாங்கப் போனவரை என்ன பரிசுப் பொருள் என்று கேட்கத் தொடங்கினர். அவரும், பிரமாதமான பரிசுப் பொருள், சூப்பரா இருக்கு, ரூ x,xxx/- ஆச்சு, என்றெல்லாம் சொல்லுகின்றாரேத் தவிர, என்ன பரிசுப் பொருள் என்றுச் சொல்லவேயில்லை. ஒருவர் வாய் திறந்தே கேட்டு விட்டார். அதற்கு அவர், பரிசுக் கொடுக்கும் போது முதளாலி திறந்து காண்பிப்பார் அப்ப பார்த்துக்கோங்க, அது சஸ்பென்ஸ் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தார்.
எக்ஸ் அப்போது கூட, அவரிடம் என்ன பரிசுப் பொருள் என்றுக் கேட்கவில்லை. அந்த உதவியாளரும் எக்ஸ் எதாவது கேட்பேரா என்று எதிர்ப் பார்த்தார். நேரம் கடந்தது. அதைப் பற்றி எக்ஸ் கவலைப் படவேயில்லை. அவர் தன் வேலையில் கண்ணும், கருத்துமாகவே இருந்தார்.
அந்த உதவியாளர், கொஞ்ச நேரம் கழித்து எக்ஸிடம் வந்தார்...
அவர் : சார் என்ன பரிசுப் பொருள் என்று நீங்கள் கேட்கவேயில்லையே ?
எக்ஸ் : என்ன அவசரம், நாளைக்கு கொடுக்கும் போது தெரிந்துவிடப் போகின்றது.
அவர் : எல்லோரும் கேட்டாங்க, ஆனால் நீங்க கேட்கவில்லையே?
எக்ஸ் : அதுதான் நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றதே? தெரியவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடப் போகின்றாதா என்ன?
அவர் : இல்ல சார் டிபார்ட்மெண்ட் சீஃப் நீங்க ஒன்னுமே கேட்கவேயில்லையே?
எக்ஸ் : ஆமாம் டிபார்ட்மெண்ட் சீஃப் நான் தான். இல்லை என்றுச் சொல்லவேயில்லையே? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
அவர் : என்ன சார் நீங்க என்ன பரிசுப் பொருள் என்று கேட்கவே மாட்டேன் என்கின்றீர்களே?
எக்ஸ் : அதான் சொன்னேனே, நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றது. இப்ப என்ன அவசரம்.
அவர் : அது வந்து சார், சந்தன மரத்தில் செதுக்கிய அழகான சிற்பம் சார்.
எக்ஸ் : அப்படியா .. ரொம்ப சந்தோஷம்..
உதவியாளருக்கு முகம் தொங்கிப் போயிட்டது. என்னாடா இந்த மனுஷன் இப்படி இருக்கின்றாரே என்று. அந்த உதவியாளர் வேறு விஷயமாக வெளியே போன போது, மற்றொரு உதவியாளர் எக்ஸிடம் வந்து, சார், நாங்க எல்லாரும் கேட்ட போது, பதில் சொல்லாமல் எதோ எதோ சொன்னார்கள். நீங்க எப்படி சார் அவங்களையே சொல்ல வச்சீங்க அப்படின்னாங்க..
எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...
எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..
பொறுப்பி :
1. பாதி உண்மை, மீதி புனைவு
2. வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.
நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,
இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.
3. பொறுப்பி 2 கவிதை என்பதை இங்கு கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
4. கவிதை எழுத எனக்கு ரோல் மாடல் - அன்பு அண்ணன் தண்டோரா.