Saturday, February 28, 2009

அறிவிழியே ... வா தம்பி வா... திரும்ப வா...


தம்பி ராஜ்குமார் (அறிவிழி) தீடிரென எழுதுவதை நிறுத்திவிட்டார்.

ஒரு அறிவிப்பு... இனிமேல் எழுதப் போவதில்லை. காரணம் கூறப்பட்ட பதிவைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

கூறப்பட்ட காரணமும் ”(தொடர்ந்து எழுத விருப்பம் இல்லாததால் விடைபெறுகிறேன்.............)” சரியில்லை. எனக்கு ஏற்புடையதாக இல்லை.

பதிவை நிறுத்தி 8 நாள் கழித்து ஏன் இந்த பதிவை இடுகின்றீர்கள் என நீங்கள் கேட்க நினைக்கலாம்.

நான் அவர் எப்படியும் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்ததால், அதற்காக எந்த பதிவையும் இடாமல் இருந்தேன்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது..

நான் பார்த்தவரை, தம்பி ராஜ்குமாரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். விசயங்களை அவர் அலசிய விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்த போதும், கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கத்தவறியதில்லை.

அவரின் பதிவு எனக்கு பிடித்து இருந்தது. உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகின்றேன்.

அவருக்கு என்று ஒரு வாசகர் வட்டம் உண்டு. அவர் கருத்தில் உடன் படாதவர்கள் கூட அவரின் பதிவைப் படிக்காமல் இருக்க மாட்டார்கள். (இல்லை என்றால் 1100 ஹிட்ஸ் ஒரு நாளைக்கு கிடைக்காது )
-----------------------------------------------------------------
நண்பர் முரு போட்ட பின்னூட்டம்
-------- ---- -------- ---------------
1) அறிவிழி எடுத்துக்கொண்ட தலைப்புகள் எல்லாம் காரசாரமான விவாத்தத்திற்க்கு உட்பட்டது. ஆனால் எல்லா நியாமான கேள்விகளுக்கும், கடைசிவரை பதிலளித்தார். நான் அவரின் கருத்துகளுக்கு ஒத்துப்போகாமல், எதிர்த்து கேள்விகேட்க ஆரம்பித்து, அவர் பதிலளிக்கும் முறையால் அவரின்பால் ஈர்க்கப்பட்டவன்.
2) அறிவிழியின் வித்யாசமான எழுத்து நடை மற்றும் எழுத்துபிழை இல்லாத பதிவுகள்.
3) அரசியலை தாண்டி பலவிசயங்களில் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
4) நாளொன்றுக்கு 1100 ஹிட்ஸ் பெற்றும் தன்னடக்கமாக இருப்பது...என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.அறிவிழி மீண்டும் பதிவிட வரவேண்டும் என்பது எனது விருப்பமும் கூட.
---------------------------------------------------
அவர் ஏன் விலகக்கூடாது என்று பின்னூட்டம் இடுங்களேன்.

நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள் - உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின், உங்கள் கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டுகிறேன். எனது பதிவில் கடின வார்த்தைகளுக்கு இடமில்லை. கடின வார்த்தைகளுடன் வரும் எந்த ஒரு பின்னூட்டதையும் நான் வெளியேற்றுவேன் என்பதையும் தங்களுக்கு பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tuesday, February 24, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!


என்னைக் கவர்ந்தவர்கள் பற்றி நண்பர் ”தமிழ்துளி” திரு. தேவா அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார். அவரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பதிவு.

என்னைக்கவர்ந்தவர்கள் பலர் இருப்பினும், இந்த இரு இருவரும் மிகக்கவர்ந்தவர்கள் என்பதை விட, என் உள்ளத்தில் மிக உன்னதமான இடம் இந்த இருவருக்கும் உள்ளது...
Dr. Santha


அடையாறில் (சென்னை) புற்று நோய் கழக மருத்துவ மனையை நிறுவியவர் டாக்டர் சாந்தா அவர்கள். 50 ஆண்டுகளுக்கு மேலாக புற்று நோய் சிகிச்சையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

புற்று நோய் ஒழிப்பில் அவருடைய சேவையை பாராட்ட எனக்கு வயது இல்லை அதனால் அவரை வணங்குகின்றேன்.

பொதுச்சேவை என்றால் என்ன என்று இவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னலமில்லாத பொதுச் சேவை...

அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.

அடையார் புற்று நோய் கழகத்தின் ஒரு தோற்றம்...


எம்.எஸ். சுப்புலஷ்மி...

கர்னாடக சங்கீதத்தின் ஒரு அத்தாரிட்டி

அந்த காந்தர்வ குரல்...

குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா... மூதறிஞ்சர் அவர்களின் பாடலுக்கு தன் தேனினும் இனிய குரலால் உயிர் கொடுத்தவர்.

இன்று கேட்டாலும் மனதில் ஒரு நிம்மதி, ஒரு இனம் புரியாத அமைதி.

அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள், மீரா பஜன்கள் இவர் பாடியதை இன்றும் மறக்க முடியுமா...

திருமதி. எம். எஸ் அவர்களும் பிலிப்பைன்சின் உயரிய விருதான ரமேன் மகசேசே பெற்றுள்ளார்.

சிலருக்கு விருது பெற்றால் அவர்களுக்கு அழகு...

ஆனால் இவர்களுக்கு விருது கொடுத்ததனால் அந்த விருதுக்கு அழகு.இந்த தொடர் பதிவுக்கு இரண்டு நபர்களை அழைக்க வேண்டும் என்று நண்பர் அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

யாரவது இரண்டு பேர் மாட்ட மாட்டாங்களா என்ன...

முதல்ல ஒரு புதுப்பதிவர்... ரசனைக்காரி - 9 நாள்ள 13 பதிவு போட்டவர். (24.02.09 நைஜிரியா நேரம் 9 மணிப்படி உள்ள கணக்கு). இவரின் பள்ளிகள் அனுபவப்பாடம் .. படித்து பாருங்க ... சூப்பர்.

அடுத்து மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய நண்பர் கண்ணாடி ஜீவன் அவர்களையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கின்றேன்.

Sunday, February 22, 2009

பொது அறிவிப்பு

அன்பார்ந்த எனதருமை நண்பர்களே, தம்பிகளே, தங்கைகளே, அண்ணன்மார்களே, அக்காமார்களே.....

அலுவலக ஆணி காரணமாகவும், நெட் பிரச்சினை காரணமாகவும், உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதும், புதுப்பதிவு இடுவதும் கடினமாகி உள்ளது.

அதனால் தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்.

எப்போதெல்லாம் சமயம் கிடைக்கின்றதோ, நெட் வருகின்றதோ அப்போதெல்லாம் என்னுடைய பின்னூட்டம் இடப்படும்.

மருத்துவர் தேவா அவர்களே தங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நெட் சரியான பின்னர், அதை எழுதுகின்றேன்.

அனைவருக்கும் நன்றி.

Tuesday, February 17, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்


வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பற்றி ஒரு பதிவு போடுவதற்காக தங்கைகள் "சாரல்" பூர்ணிமா அவர்களும், "Will To live" ரம்யா அவர்களும் அழைத்து இருக்கின்றார்கள்.

என்ன பதிவது, எப்படி பதிவது என்று ஒரே மண்ட குடைச்சல்...

அப்படி இருக்கும் போது, பூர்ணிமா அவர்கள் பதிவில் நண்பர் முத்துசாமி அவர்களின் பின்னூட்டம்,

/Muthusamy said... If u would like to get to know more old Tamil words, read any of the Sangam literature books. By this way you can get countless words..! //

சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட திரிகூடராசப்ப கவிராயரின் திருக்குற்றால குறவஞ்சி (இங்கே கிளிக்கினால் நீங்களும் பதிவிரக்கம் செய்யலாம்) பதிவிரக்கம் செய்து படித்து பார்த்தேன்...

பள்ளியில் படித்த குறவஞ்சி பாட்டான... குறத்தி மலைவளம் கூறுதல்..

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்...

ஆகா இரண்டு வார்த்தைகள் கிடைத்தன... (நம்ம சொந்த காரங்க பத்தி கிடைச்சுது)

வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை
என்ன அழகாக கொடுத்துள்ளார்.
ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி..

இதில் மூன்றாவது பாட்டாக வருவது இன்னும் அழகானது...

தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்காலும் வழுகும்.

இதில் தேனருவி - அருவி - இந்த வார்த்தை கிட்டதட்ட வழக்கொழுந்துவிட்டதாகவே நினைக்கின்றேன்.
இப்போது அனைவரும் உபயோகப் படுத்துவது நீர்வீழ்ச்சி.
இந்த பதிவை எழுதும் போது, ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவு வருகின்றது... WATERFALLS தமிழ் படுத்தியதன் விளைவுதான் இது என்பார்.


இப்போது எனக்கு தெரிந்த சில சொற்க்கள் -

அம்மி, குழவி - அம்மி கருங்கல்லால் செய்யப்பட்டது - தட்டையாக இருக்கும் அம்மி... அதன் மேல் அரைப்பதற்கு உதவுவது குழவி எனப்படும். இது உருண்டையாக இருக்கும். இதுவும் கருங்கல்லாதான் செய்யப்பட்டு இருக்கும். (டிஸ்கி - யாரவது அம்மியில் அரைக்கிறேன் என்று தங்கள் கையை நசுக்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

மேலும் குழவி என்னும் சொல் - குழந்தையும் குறிப்பிடுவார்கள்.


கல்லுரல் - இதை ஊற வைத்த பொருட்கள் அரைக்கவும், மிளகாய் பொடி போன்றவற்றை இடிக்கவும் பயன் படுத்துவார்கள். இது கிரைண்டர் மாதிரி - கருங்கல்லால் செய்யப் பட்டு இருக்கும் - நடுவில் ஒரு குழி இருக்கும், மேலும் ஒர் உருண்டை கல் இருக்கும் அந்த குழியில் பொருந்துமாறு இருக்கும் - இதற்கும் குழவி என்றுதான் பெயர் - சிலர் இதை ஆட்டுக்கல் என்றும் அழைப்பர். இடிக்கும் போது உலக்கையை பயன் படுத்துவார்கள். உலக்கை இரும்பினால் செய்யப்பட்டது ம் உண்டு, மரத்தினால் செய்ய்யப் பட்டதும் உண்டு. மரத்தினால் செய்தது, உரலில் நெல் குத்தும் போது உபயோகப் படுத்தப்படுவது.

அழுக்காறு - பொறாமை
அநாமாதேயம் - முகமறியாத, அடையாளம் தெரியாத, அடையாளம் காட்டாத
ஒற்று - உளவு
ஒற்றர் - உளவு பார்ப்பவர்
ஒறுத்தல் - மன்னிக்காமல் தண்டித்தல்
(இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்)

ஓதுதல் - படித்தல் (ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்)
பொல்லாங்கு - புறம் கூறுதல். (பொல்லாங்கு ஒருவரையும் சொல்ல வேண்டாம்)

அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்... (3 நபர்களை மாட்டிவிடணுமா.. சரி..)

நான் மூன்று பேரை இந்த வழக்கொழிந்த சொற்கள் பதிவை தொடருவதற்கு அழைக்க வேண்டும் இல்லையா... (நண்பர்கள் அதனால் முன் அனுமதி பெறாமல் அழைத்துவிட்டேன்... கோபப் படாமல்.. இந்த தொடர்பதிவை தொடருங்கள்)

கடல்புறா - திரு. சாய்ராபாலு - கவிதைகளால் நம்மை கட்டி போடுகின்றார்.

பூபதி - சக பதிவாளர் என்பதை விட - நமது கணக்கு பிரிவை சார்ந்தவர் என்பதால். தற்போது ஆஸ்திரிலேயாவில் உள்ள என்னை மாதிரியான புலம் பெயர்ந்த நண்பி.

இலக்கியா அன்புமணி (குடந்தை பாசம்) .. காதலில் கரை கண்டவர் என்பதாலும்...

Friday, February 13, 2009

பிப்ரவரி 13, 2003

ஒவ்வொருவருக்கும் சில நாட்களை மறக்க முடியாததாக ஆகிவிடும்.

என்னால் மறக்க முடியாத நாள்..... பிப்ரவரி 13, 2003.

அன்று உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவர்கள் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க தந்தையுடன் சென்று, ஈமச்சடங்குகள் முடியும் வரை இருந்து விட்டு, வீட்டிற்கு வரும் போது காலை 11.00 ஆகிவிட்டது.

அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகளை முடிக்க வேண்டியிருந்ததால், சாப்பிட்டு விட்டு, அலுவலகம் கிளம்பினேன். அப்போது நேரம் மதியம் 12.15 ஆகி இருந்தது.

நான் குடியிருந்தது மடிப்பாக்கம். அலுவலகம் இருந்தது நீலாங்கரை. வீட்டில் இருந்து, அலுவலகம் செல்ல, குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை உபயோகப்பது வழக்கம். அந்த சாலை அப்போதுதான் போடப்பட்டு கொண்டு இருந்ததாலும், வாகனப் போக்குவரத்து மிக குறைவாக இருக்கும் என்பதாலும் அந்த வழியை உபயோகப் படுத்துவேன். பாலாஜி டெண்டல் காலேஜ் முதல் துரைப்பாக்கம் வரை எந்த விதமான தடங்கல்களும் இல்லாமல் வேகமாக செல்ல முடியும். டவுன் பஸ் எதுவும் அந்த வழியில் செல்வதும் கிடையாது.

அன்று அலுவலகத்திற்கு செல்லும் போது, துரைப்பாக்கத்திற்கு 1 கி.மீ. முன் ஒருவர் லிப்ட் கேட்டார். பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் மாதிரி இருந்தார். அவர் முதுகில் ஒரு பை. வலது கையை பின்புறம் வைத்துக் கொண்டு, இடது கையால் தம்ஸ் அப் மாதிரி காண்பித்து லிப்ட் கேட்டார். நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். அதிலும் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பரிதாபப்பட்டு கொடுப்பேன்.

அன்றும் அது போல பரிதாப்பட்டு, வண்டியை நிறுத்திய உடன், மிகப் பெரிய கத்தியை எடுத்து காண்பித்து, கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை, அந்த காலத்தில் அரசர்கள் வைத்து இருப்பார்களே அது மாதிரி பெரிய கத்தி, வண்டியை கொடுடா, வண்டியை கொடுடா என்று மிரட்ட ஆரம்பித்தான். கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி விடுவேன் என்றும் மிரட்டினான்.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.

அதனால் அவனிடம், உனக்கு பணம் எதாவது வேண்டுமா, சொல்லு என்று சொல்லிக் கொண்டே, சைட் ஸ்டாண்டை போட்டுவிட்டு வண்டியை ஆஃப் செய்துவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன். அவனும் துரத்த ஆரம்பித்தான். அன்று இருந்த களைப்பில் வேறு வழியில்லாமல் வண்டி சாவியை தூக்கிப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன்.

அதன் பிறகு, துரைப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தது, பின்னர் அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் நோ டிரேசிங் சர்டிபிகேட் வாங்கி, வண்டிக்கான இன்சூரண்ஸ் தொகையை பெற்றேன்.

அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...


Tuesday, February 3, 2009

தேவையா இந்த பொழப்பு... வேண்டாம் நிறுத்துங்க!

நண்பர் அறிவிழி எவ்வளவு கஷ்டப்பட்டு பல நல்ல பதிவுகளை எழுதுகின்றார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரின் பதிவுகள் எல்லாமே அரசியல், சமூகம் பற்றிய முக்கியமான நல்ல பல கருத்துக்களுடன் இருப்பதும் நாம் அறிந்ததுதான்.

அவருடைய படைப்புகளை சிலர் வெட்கம், மானம், சூடு சுரணையின்றி திருடுகின்றனர்.ஒருவரது பதிவுகளை அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது, அவருக்குத் தெரியாமல் தங்களது பதிவுகளில் வெளியிட்டுக் கொள்வது மிகப் பெரிய திருட்டுத்தனம் - அயோக்கியத்தனமதானே.

தம்பி ராஜ்குமாரின்(அறிவிழி) பதிவுகளைத் திருடி வெளியிடும் இவர்கள் யாரும் அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இவருடைய சில பதிவுகளும் அதை திருடியவர்களின் பதிவுகளும் பின் வரும் சுட்டிகளில் கொடுத்துள்ளேன். நீங்களே பாருங்களேன்..

ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா?

நண்பர் அறிவிழி அவர்கள் எழுதியதை படிக்க இங்கு சுட்டவும்

திருடி எழுதிய பதிவை படிக்க இங்கு சுட்டவும்.

ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா? (இவர் கொஞ்சம் நல்லவர்.. நன்றி அறிவிழி என்று போட்டுள்ளார்..)

நண்பர் அறிவிழி அவர்கள் எழுதியதை படிக்க இங்கு சுட்டவும்

திருடி எழுதிய பதிவை படிக்க இங்கு சுட்டவும்.

சத்யம் ராசு நல்லவரா? கெட்டவரா? 420யா? இல்லை வள்ளலா?

அமெரிக்க பொருளாதார நெருக்கடி-இந்திய மென்பொருள் வல்லுனர்கள் தெருவில் நிற்கப் போகின்றனர்...


அறிவிழி அவர்களின் பதிவு பார்க்க..

அதனின் நகல் அறிவிழி அறியாமல் போடப்பட்ட பதிவு...

Sun Tv - Padikathavan - சன்டிவியின் "வெற்றிப்படம் படிக்காதவன்"! சன்டிவியின் தந்திரங்கள்

அறிவிழி அவர்களின் பதிவு பார்க்க..

அதனின் நகல் அறிவிழி அறியாமல் போடப்பட்ட பதிவு...

ஓவ்வொரு பதிவும் போட தம்பி ராஜ்குமார் (அறிவிழி) உழைக்கும் உழைப்பு எனக்குதான் நன்கு தெரியும்.

இது போல நோகாமல் நொங்கு திங்கறவங்கள என்னச் சொல்லுவது..

நண்பர் அறிவிழியின் மிக சமீபித்திய கட்டுரையான

கம்ப்யூட்டர்மலர் இதழால் திருடி வெளியிடப்பட்ட எனது பதிவு!

வெளியிடப்பட்ட வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு..

// நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் நேரத்தை செலவிட்டு, சிரத்தை எடுத்து நாம் எழுதும் பதிவுகள் - இது போல நமக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக நமது வலைப்பூவின் பெயரைக் கூட குறிப்பிடாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுவது வேதனையாகத் தானே இருக்கும், அப்படி செய்வது தவறுதானே? புரிந்தவர்கள் விளக்குங்கள்..................//

ஒரு தனிமனிதனின், சொத்துக்களை, பணத்தை திருடுவது மட்டும் திருட்டல்ல.. அவரின் உழைப்பை சுரண்டுவதும் ஒரு வகையானத் திருட்டுதான். திருட்டு விசிடி / டிவிடி விற்பது எவ்வளவு தப்போ அந்த அளவுக்கு தப்பு இந்த கருத்து திருட்டும்.

உங்கள் பதிவில் நீங்கள் நண்பர் அறிவிழி அவர்களின் கட்டுரைகளை இடவேண்டும், உங்கள் பதிவுக்கு ஹிட்ஸும் வேண்டும் என்று நினைத்தால், நண்பர் அறிவிழி அவர்களுக்கு ஒரு இ-மெயில் PIDHATRAL@GMAIL.COM என்ற முகவரிக்கு அனுப்பினீர்கள் என்றால் அவரும் மனமுவந்து அளிக்கப் போகின்றார்.

பிறர் உழைப்பை சுரண்டுபவர்களே, இத்துடன் உங்கள் திருட்டுத்தனத்தை விட்டுவிடுங்கள்.

ஒரு மனிதன் கக்கியதை எடுத்து உண்ண வேண்டாம்.

Monday, February 2, 2009

சேமிப்பின் அவசியம்

காரணம் தெரியவில்லை. இன்று காலையில் இருந்து மறைந்த தந்தையின் நினைவுகள். அவர் மறைந்து வருடங்கள் 3 முடிந்தாலும், பல சமயங்களில் அவரின் இழப்பு மறக்க இயலவில்லை. அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விசயம் “சேமிப்பு”. இன்று முழுவதும் அவரின் அறிவுரைகளை நினைத்து கொண்டு இருக்கும் போது, இதை ஏன் ஒரு பதிவாக நாம் போடக்கூடாது என்று தோன்றியது. போட்டுவிட்டேன்.

நாம் ஏன் சேமிக்க வேண்டும். நல்லாதானே சம்ம்பாதிக்கின்றோம். பதவி விலகும் போது, பி.எஃப்., கிராஜுவிட்டி எல்லாம் இருக்குமே போதாதா என நினைக்கக் கூடாது.

சேமிப்பு என்பது சிறு வயது முதல் வரவேண்டும். படிக்கும் காலத்திலேயே என் தந்தை மாதா மாதம் ரூ. 10 கொடுத்து, என் பெயரிலேயே, அஞ்சல் அலுவலகத்தில் ரெகரிங் டெபாசிட் போட வேண்டும், அதுவும் நானே போய் போட்டுவிட்டு வரவேண்டும் எனவும் சொல்லுவார்.

என் தந்தை கற்று கொடுத்தது.. எவ்வளவு சம்பளம் என்பது முக்கியமல்ல.. எவ்வளவு குறைந்த சம்பள்மாக இருந்தாலும், அதிலும் சேமிக்க பழக வேண்டும் என்பார். அவரும் அந்த மாதிரி வாழ்ந்தும் காட்டினார்.

சேமிப்பு என்பது எந்த அளவுக்கு எனக்கு உதவியது என்பதற்கான உதாரணம் இது..
நான் அப்போது ஒரு இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தேன். சம்பளம் மாதம் ரூ. 600 தான். மாதா மாதம் 50 ரெக்கரிங் டெபாசிட் போட்டுகிட்டு வருவேன்.

1988 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 28 ராத்திரி நிறுவனம் திடீரென lockout பண்ணிவிட்டார்கள். மறுநாள் சம்பளம் வரும் நினைச்சுகிட்டு இருந்தபோது இப்படி ஆகிப்போச்சு. என்ன செய்வது கையிருப்பு வெறும் 20 ரூபாய்தான். அங்கதாங்க நான் போட்ட ரெகரிங் டெபாசிட் உபயோகப்பட்டுச்சுங்க. மார்ச் மாதம் 2 ஆம் தேதியோட என்னோட ரெகரிங் டெபாசிட் முடிவடைஞ்சுதுங்க.. 640 ரூபாய் கைல கிடைச்சுதுங்க.. அந்த பணம் அந்த சமயத்தில் ஒரு பொக்கிஷம் கிடைத்த மாதிரி இருந்ததுங்க..

சேமிப்பைப் பற்றி இதில் நான் கற்ற அறிவு, எந்த பள்ளியில் படித்தாலும் கிடைக்காது.. அனுபவம் நல்ல ஆசான்..

ஒரு காசு பேணின் இரு காசு தேறும் (என்னங்க பழமை இது சரியா எனச்சொல்லுங்களேன்)