Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Monday, April 6, 2009

நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை











நட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். பல சமயங்களில் நட்பு மிக உதவியாக இருக்கின்றது. நான் நைஜிரியா வரக் காரணமாயிருந்ததே நட்புதான். அவர் சீனாவைச் சேர்ந்தவர். நைஜிரியா மட்டுமல்ல, எனக்கு இதுவரை கிடைத்த வேலைகள் அனைத்திற்க்கும் , இன்றைய நல்வாழ்விற்கும் காரணம் எனக்கு கிடைத்த நட்புகள்தான்.

நட்பில் நான் உயர்ந்ததாக கருதுவது, கர்ணன், துரியோதனன் நட்பை. கர்ணன் துரியோதனுடன் கொண்ட நட்பை செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லலாம். ஆனால், துரியோதனன் அப்படி அல்ல.

கர்ணனுக்கும் துரியோததுனக்கும் இடையேலான நட்பை ஒரு சிறு சம்பவம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. துரியோதனன் மனைவி பானுமதியுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார் கர்ணன். அப்போது அங்கு வந்த கணவனைக் கண்ட பானுமதி விளையாட்டினை பாதியில் நிறுத்தி விட்டு எழும் போது அவர்களது மடியில் கட்டியிருந்த முத்து மாலையை பிடித்து இழுத்து கர்ணன் நிறுத்தப் பார்த்த போது முத்துக்கள் நிலத்தில் சிதறி உருண்டோடின. அதனைக் கண்ட துரியோதனன் நண்பன் மேல் எவ்விதச் சநதேகமும் இன்றி "எடுக்கவோ கோக்கவோ" என்றானர்.
தன்னுடைய மனைவியை மாற்றான் ஒருவன் தொட்டு விட்டானே, என்று கோபம் கொள்ளாமலும், அவளை சந்தேகப்படவும் இல்லை துரியோதன் . மாற்றாக சிரித்த முகத்தோடு அவர் கூறிய வார்த்தை, "எடுக்கவோ கோக்கவோ". நட்பை பெரிதாக மதித்ததால் தான் “எடுக்கவோ, கோட்கவோ” என்று கூறினார்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு இன்றும் போற்றப் படவேண்டிய நட்பு. மனதை நெகிழ வைக்கும் நட்பு. முன் பின் காணாமல் கொண்ட உயிர் நட்பு. நண்பர் உயிர்விட்ட போது அவரோடு தாமும் உயிர் விட்ட ஓர் உன்னதமான நட்பு.

தங்களது கோட்பாடுகளால் வேறு பட்டு இருந்தாலும், நட்பில் என்னை நெகிழ வைத்தவர்கள் , மூதறிஞர் ராஜாஜிஅவர்களும், தந்தை பெரியார் அவர்களும்.

நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான். ஆனால் நல்ல நட்பில், தவறு / தப்பு செய்யும் போது இடித்துரைக்க தவறக் கூடாது.

இதற்காகத்தான் அய்யன் வள்ளுவர் நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல் என்ற 4 அதிகாரங்களில் 40 குறள்கள் எழுதினார் போலிருக்கு .

அதில் இரண்டு குறள்கள் மிகப் பிடித்தது, மறக்க முடியாதது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு.


தூறல் அவர்கள் இடுகையில் நட்பு பற்றிய ஒரு ஹைக்கூ படித்தேன். அதை முழுவதுமாகப் படிக்க இங்கே அமுக்கவும். அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.

விஜி அவர்களின் அருமையான நட்பு கவிதை படிக்க இங்கே அமுக்கவும்.

அதில் மிகவும் பிடித்த வரிகள்..

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...


முஜிமைந்தன் அவர்கள் நட்பு கவிதையைப் படிக்க இங்கே அமுக்கவும்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

புரிந்துக கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு.

சிறு வயதில் படித்தது..

எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்.

கடைசியாக எங்கோ படித்தது.. வலைப்பூவில்தான் படித்தது.. யாரென்று தெரியவில்லை... இருந்தாலும் ஞாபகத்தில் இருந்து அந்த வரிகளை அப்படியே கொடுத்துள்ளேன்.

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

வலைப்பூவிற்கு வந்தபின் கிடைத்த நட்புகள் ஏராளாம். அதிலும் பலர் நட்புக்கு மேல் போய், கூடப் பிறந்த சகோதரன் போலேவே “ அண்ணே” என்று கூப்பிட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

மிக மிக மதிக்கத்தக்க அந்த நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்திய வணக்கங்கள். அந்த நட்புக்கும், நண்பர்களுக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.

என்றென்றும் அன்புடன்
உங்கள் இராகவன்.