Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...




நண்பர் இளைய பல்லவன்(ர்), பட்டய கணக்கர், காஞ்சித்தலைவன் அவர்கள் ஒரு தொடர் இடுகைக்கு அழைத்துள்ளார், நம்மளையும் நம்பி இந்த உலகம் தொடர் இடுகைக்கு அழைப்பதால், அதை மறுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த தொடர் இடுகை..

எல்லா கேள்விகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகின்றேன். இந்த பதிவை தங்கமணி அவர்களும் படிப்பதால், உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னைப் பற்றி முக்கியமாக சொல்ல ஒன்றுமே இல்லீங்க. 44 வயசு. 1992 ல் திருமணம். அரவிந்த் என்று ஒரே ஒரு மகன். இந்தியாவில், ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, லக்னோ, சென்னை என்று பல ஊர்களில் வேலை. வெளி நாட்டில் சைனா, கத்தார், தற்போது நைஜிரியாவில் கணக்குப் பிரிவு, மேலாளர் மற்றும் அட்மின் பிரிவின் உதவி மேலாளராகவும் இருக்கின்றேன். (சிறு குறிப்பு என்று கேட்டதால் இவ்வளவுதாங்க..)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. அக்காவின் தலை தீபாவளிக்கு அவர்கள் வாங்கி வந்த வெடிகள் மறக்க முடியாத தீபாவளிதாங்க. அப்போது கிருஷ்ணர் வெடி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து, அப்போது அது வெடித்துவிட்டது. நல்ல வேலையாக கையில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் அப்பா அடிச்ச அடியில் முதுகு பழுத்துவிட்டது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

நைஜிரியாவின் தலைநகர் அபுஜாவில்தாங்க.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இங்கு இந்தியர்கள் தங்களுக்குள் வீட்டிலேயே கொண்டாடும் தீபாவளிதாங்க. வெடி வெடிக்க இயலாது. கெய்சர் சுடு தண்ணி குளியல், சாமி கும்பிடுதல், புதுத் துணி போட்டுகிட்டு அலுவலகத்திற்கு போயாச்சு.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

ஜூலை மாசம் இந்தியா போயிருந்த போது, குளோபசில் புதுத்துணிகள் வாங்கி வந்ததுதாங்க. என்ன ஒரு கஷ்டம், சைஸ் 34 என்று கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தால் ரொம்ப லூஸ் ஆகியிருக்கு. நான் இளைச்சு போயிட்டேனா, இல்ல சைஸ் 34 போட்டு பெரிய சைஸ் கொடுத்துட்டாங்களான்னு பார்க்கணும்.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

மிக்சரும், செவன் கேக், குளோப்ஜாமூன் எல்லாம் வீட்டில் செய்தார்கள்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

பலருக்கும் தொலைப் பேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அலுவலகம் போயாச்சுங்க. மாலை நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு பல நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்கள் கூட உணவு உண்டு சந்தோஷமாக பொழுது கழிந்தது. தொலைக் காட்சி என்றால் இங்கு ஜெயா டிவி, TBO, ஏசியா நெட், கைரளி என நான்கு டிவித்தான் தெரியும். சில ஹிந்தி சேனல்கள் உண்டு. அவ்வளவாக புரியாததால் பார்ப்பதில்லை. அலுவலகம் இருந்ததால் எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

விசேஷங்கள் அன்று உதவி என்று எதுவும் செய்வதில்லீங்க. எப்போது எல்லாம் முடிகின்றதோ, அப்போது உதவி செய்வேன். பல தனிப்பட்ட காரணங்களினால் எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருக்கின்றேன்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அண்ணன் வானம்பாடி அவர்கள் - இவரின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. அஷ்டாவதானி என்று இவரைச் சொல்லலாம். நான் அடிக்கும் கும்மிகளை சந்தோஷமாக ஏற்றுக் கொள்பவர் என்பது ஒரு காரணம்.

தம்பி நேசமித்ரன் - கவிதையின் புது பரிமாணத்தை எனக்கு உணர்த்தியவர். ஒரு சீரியசான இடுகையில் கும்மி அடிச்ச போதும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர். மேலும் பழக இனிமையானவர்.

சும்மா - பேருதான் சும்மா. வலைப்பூவில், தேனம்மை லஷ்மணன் அவர்களின் கவிதைகள் தேனில் தோய்த்து, சக்கரை பாகில் வடித்திருப்பார். காதலையும், பூக்களையும் இணைத்து கவிதையாக வடித்திருப்பார். அருமையான கவிதைகள்.

ராகவன் - வலைப்பதிவில் சமீபகாலமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். அழகான கவிதைகள். நெஞ்சைத் தொடுக் கவிதைகள். இவரின் இன்றைய பிள்ளைக்கலி கவிதை நெஞ்சைத் தொடுகின்றது. இவரையும் இந்த தொடர் இடுகை எழுத அழைக்கின்றேன். எங்க இருவருக்கும் பெயர் பொருத்தம் மட்டும் தாங்க. அண்ணன் கவிஞர். கவி மழைப் பொழிகின்றார். இவரின் மற்றொரு கவிதை குரல் குடித்தனம். படித்துப் பாருங்க அவரின் பெருமை புரிய வைக்கின்ற மற்றொரு கவிதை.

இன்னும் சிலரை அழைக்க ஆசையாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் நாமே எல்லோரையும் அழைத்து விட்டால், மற்றவர்களுக்கும் ஆள் கிடைக்க வேண்டுமே என்ற காரணத்தினால், இதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.

Tuesday, October 27, 2009

படங்கள்


நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சில படங்கள்..



இந்தப் பாலத்தை படம் பிடித்த காரணம்... REBUILT 1937 - 72 வருட பழமையான பாலம்...



தண்ணீரும், அருவிகளும் என்றுமே அழகு. இந்த சிறு அருவியைப் பார்க்கும் போது ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவுக்கு வந்தார். அருவி என அழகான சொல் இருக்க நீர்வீழ்ச்சி என பலரும் சொல்லுகின்றனர் என்பார். Waterfalls என்பதை தமிழ் படுத்திவிட்டனர் என்றும் சொல்லுவார்.



குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் வழி. நன்றாக பராமரித்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றிய இடம்.



குன்னூரில் ஒரு தேயிலைத் தோட்டம்... (தோட்டம் என்பது சரியா?)


என்ன கோபமோ தெரியவில்லை... முகத்தை காட்ட மறுக்கின்றார்.


பொதிகை மலைத் தென்றலில் தவழ்ந்து வரும்... என்ற பாட்டு ஞாபகத்து வரவில்லை?



தாயன்புக்கு ஈடு இணை உண்டோ?



குன்னூர் செல்லும் வழியில் சும்மா கிளிக்கியது. இயற்கை என்றுமே அதிசயம்தான்.



கோவை - பொள்ளாச்சி சாலை. சாலையின் அகலம் குறைவாக இருந்தாலும் நன்றாக பராமரிக்கப் பட்டு இருக்கின்றது.




தென்னந்தோப்பு... அழகு .. கோவை - பொள்ளாச்சி சாலையில் எடுக்கப்பட்டது.


மேலும் படங்கள் ... உண்டு என நினைக்கின்றேன்....

Sunday, October 25, 2009

பாசப் பறவைகள் பாகம் - 7 (Final)

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு ஜூலை 6, 2009.

ஜூலை 6, 2009, குன்னூரில் இருந்து காலை 9 மணியளவில் கிளம்பி, திருச்சிக்கு ஈரோடு வழியாகத்தான் செல்வதாக இருந்தேன். எப்போதும் போல் வடகரை வேலன் அண்ணாச்சியை தொடர்பு கொண்டு வழியைக் கேட்டுக் கொண்டு பின் போகலாம் என்று, அவரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் திருப்பூர் வழியாக போங்க. ரோடு நல்லா இருக்கும். அப்படியே திருப்பூர் பதிவர்களையும் சந்திக்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். வடகரை வேலன் அண்ணாச்சிக்கு நன்றி. சொன்னதோடு மட்டுமல்லாமல், பரிசல் காரன், வெயிலான் இருவரது தொலைப்பேசி எண்களையும் கொடுத்து அவர்களுக்கும் என் வருகையைப் பற்றி தகவலும் தெரிவித்தார்.

ஓவர் டு தெ டெலிகான் வித் பரிசல் அண்ட் வெயிலான்.

அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களிடம் தொலைப்பேசி எண் கிடைத்ததும், முதலில் அழைத்தது நண்பர் பரிசல் காரன் அவர்களைத்தான். அவர் அவசியம் வாங்க, பார்க்கலாம் என்றுச் சொன்னார்.

அடுத்து நண்பர் வெயிலான் அவர்களை அழைத்தேன். அண்ணே, திருப்பூர் அருகில் வந்தவுடன் அழையுங்கள். வழிச் சொல்லுகின்றேன் என்றுச் சொன்னார்.

சென்னையில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பர்ச்சேஸ் மேனேஜராக வேலை செய்த போது, பல தடவை திருப்பூர் சென்று இருக்கின்றேன். அப்போதெல்லாம், கோவையில் தங்குவேன். அங்கிருந்து கம்பெனி பி.ஆர்.ஓ நான் போக வேண்டிய இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று திரும்பி கொண்டுவந்து விடுவார். அதனால் வழிப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை.

திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. டையிங், வாஷிங், பிரிண்டிங், எம்பிராடய்ரி எல்லாம் சென்னையை விட மலிவாக கிடைக்கும். சென்னையில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரை நாடுவதற்கு காரணம் இதுதான் என நினைக்கின்றேன். மேலும் தெரிந்தவர்கள் விவரமாக தெரிவிக்கவும்.

மதியம் 12 மணியளவில் திருப்பூரை நெருங்கியபின், நண்பர் வெயிலானை அழைத்தேன். அண்ணே எங்க இருக்கீங்க என்று கேட்டார். எப்போதும் போல் நான் வரும் வழியை சொல்லி அவரைக் குழப்பினேன். பின்னர் ரயில் நிலையம் செல்லும் வழி என்றுப் போட்டு இருக்கு அப்படின்னு சொன்னேன். அண்ணே நேரா வாங்க, உங்க வண்டி நம்பர் என்ன வென்றுச் சொல்லுங்க என்றுச் சொன்னார். நம்ப வண்டி நம்பரையும், கலரையும் சொன்னேன். ரயில் நிலையம் அருகில் வரும்போது, நண்பர் வெயிலான் தொலை பேசியில் அழைத்து அண்ணே உங்க வண்டியைப் பார்த்துட்டேன், அப்படியே ஓரம் கட்டுங்க என்றுச் சொன்னார்.

அவரும் அவருடைய நண்பர் தேவராஜனும் எங்களை அழைக்க வந்திருந்தனர்.

பின்னர் மதியச் சாப்பாட்டுக்கு எங்கு போவது என்று பலரை கூப்பிட்டு கேட்டு, அரோமா ஹோட்டலுக்கும் கூப்பிட்டுக் கொண்டு சென்றார்.

அங்கு சென்ற பின் நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், இராமன் குட்டி மூவரும் வந்தனர்.

பரிசல் அவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருப்பதால், எங்களை உணவருந்த ஆரம்பிக்குமாறும், பின்னர் அவர் வந்து சேர்ந்துக் கொள்வதாகவும் சொன்னார்.

நாங்க சாப்பிட்டு முடிச்ச பின்பும் பரிசல் அவர்கள் வர தாமதமானது. அன்று ஒரு ஷிப்பிங் இருப்பதால், குவாலிட்டி செக்கிங் போய் கொண்டு இருப்பதாகவும், அதனால் தான் தாமதம் என்றும் சொன்னார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.

அங்கிருந்து கிளம்பும் போது பரிசல் அவர்களும் நிறைய நேரம் அளவாவ முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தொலைப்பேசியில் உரையாடும் போதும் அவருக்கும் அந்த வருத்தம் இருந்ததை உணர முடிந்தது.


வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.

பின்னர் அங்கு அரோமா ஹோட்டல் வாசலில் கிட்டதட்ட 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, திருப்பூரில் சில டி-சர்ட் வாங்க வேண்டும் என்றுச் சொன்னேன்.

பரிசல் அவர்கள் வருவதற்கு முன் நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம். பின்னர் ஒரு வழியாக பரிசல் அவர்கள் கம்பெனியில் எதோ சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக வந்துச் சேர்ந்தார்.
நண்பர் வெயிலானும், தேவராஜன் அவர்களும் கூடவே வந்து இருந்து, எல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அரவிந்திற்கு ஒரு சட்டை வாங்கி பிரசண்ட் செய்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு, மிகச் சிறிய நேரம் என்றாலும், மிக அழகாக அமைந்தது.

மிக்க நன்றி திருப்பூர் நண்பர்களே.

சில படங்கள் தங்கள் பார்வைக்காக.


நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், பரிசல்காரன், வெயிலான், நான், இராமன் குட்டி (இவர் இன்னும் ப்ளாக் ஆரம்பிக்க வில்லை).



மேலுல்ல வரிசையில் பரிசல்காரன் அருகில் அமர்ந்திருப்பவர், வெயிலான் அவர்களின் நண்பர் தேவராஜன்.

பின் திருப்பூரில் இருந்து சுமார் 4.30 மணியளவில் கிளம்பி, கரூர் வழியாக திருச்சியை அடைந்த போது, இரவு மணி 8.30. கரூர் திருச்சி சாலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ் நாட்டில் நான் பயணப்பட்ட இடங்களிலே, இதுதான் மிக மட்டமான சாலையாக இருந்தது.

பல பதிவர்களையும் சந்திக்க ஆசைத்தான். முக்கியமாக அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுடன் தொலைப் பேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அடுத்த முறை இந்தியா செல்லும் போது சந்திக்க வேண்டும். அதிஷா, லக்கிலுக் இவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். அதுவும் என்னுடைய பல தனிப்பட்ட வேலைகளால் தடைப்பட்டுவிட்டது.

இந்திய பயணத்தில் வலைப்பதிவர்கள் பலரையும் பல இடங்களில் சந்தித்து, அவர்களுடன் அளவாவியது, அவர்கள் காண்பித்த கள்ளமில்லா அன்பு என்னை மிகவும் நெகிழவைத்தது என்னவோ நிஜம்.

இந்தியவில் இருந்து திரும்பிய பின், நைஜிரியாவின் பிரபல, பேமஸ், சூப்பர் பதிவர், என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா தம்பியுடன் சந்திப்பு மிக கோலாகலமாக நடந்தது. இந்தியப் பிரயாணம் பற்றி தம்பி விஜாரித்தார். எல்லாம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்ததுப் பற்றி சந்தோஷப்பட்டார். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது.

அன்பு காண்பித்த பதிவர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும் பல.

இதுவரை இந்த தொடர் இடுகையைப் படித்து, பின்னூட்டமிட்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்

இராகவன், நைஜிரியா.

Saturday, October 10, 2009

படங்கள்

இந்த தடவை இந்தியா வந்திருந்த போது, இரண்டு நாட்கள் குன்னூரில் தங்கியிருந்தேன். அப்போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு.

நாங்களும் படம் காட்டுவோமில்ல..


ரோஜாவில் இரண்டு கலர் ரோஜா... ரொம்ப பிடித்து எடுத்தப் படம்..
பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை மறந்தேனோ ....



குன்னூர் சிம்ஸ் பூங்காவினில் இருக்கும் பூ.. அதன் இதழ்களின் கவர்ச்சியில் மயங்கி எடுத்தப் படம்.



சிம்ஸ் பூங்கா வாசலில் சோளம் விற்றுக் கொண்டு இருந்த நண்பர்.. ராஜ பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் வியாபாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, மக்கள் எவ்வளவோ செலவு செய்வார்கள், ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் தான் அதிகமாக பேரம் பேசுகின்றனர் என்றார். அவர் விற்கும் சோளம், ஹை ப்ரீட் வகையைச் சேர்ந்தது என்றும், ஒரு வாரத்தில் அனைத்தும் விற்றுவிட வேண்டும் என்றும், அப்படி விற்காமல் போனால் அது அனைத்தும் நஷ்டம் என்றும் கூறினார். அவரிடம் பேரம் சொல்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கின்றது.



சிம்ஸ் பூங்கா ஒரு கண்ணோட்டம் - அறிவிப்புப் பலகை.



சிம்ஸ் பூங்கா வாயில் இருக்கும் அழகாகச் செதுக்கப் பட்ட புல்வெளி.



சிம்ஸ் பூங்காவினில் இருந்த பூ - பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



சிம்ஸ் பூங்காவில் தான் இந்தப் பூவையும் படம் பிடித்தேன்... பெயர் தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருந்த குன்னூர் கிளப்.



குன்னூர் கிளப்பின் மற்றொருத் தோற்றம்.



பூக்களின் ராஜா - ரோஜா



இந்த ரோசாவின் கலர் - என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை



குன்னூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த தோட்டத்தில் எடுக்கப் பட்ட படம் - பூவின் பெயர் தெரியவில்லை - தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.




குன்னூர் செல்லும் வழியில் உள்ள பாலம். அதன் அழகு பிடித்து இருந்ததால் எடுத்தப் படம்.

இந்தப் படங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன். மேலும் படம் போடலாங்க.

Friday, September 25, 2009

பாசப் பறவைகள் பாகம் - 6

ஜூலை 2 & 3 கோவைப் பதிவர்கள் சந்திப்பு.

ஜூலை 2 ஆம் தேதி காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, கோவையை நோக்கிப் பயணம் ஆரம்பம். எனது ஊர்தியின் ஓட்டுனரைப் பார்த்து கேட்டேன்..

நான் : தம்பி, கோயமுத்தூர் வழி தெரியுமான்னு கேட்டேன்.

ஓட்டுனர் : நல்லாத் தெரியும் சார். என்னா இப்படி கேட்டுட்டீங்க. நான் மதுரைக்காரன் சார்... எல்லா வழியும் நல்லாத் தெரியும்.

இப்படி சொல்லி தம்பி மதுரையை ஒரு இரண்டு சுத்து வந்தார். நானும் ரொம்ப சாதுவாக, தம்பி மீனாட்சி அம்மன் கோயிலை இப்படி எல்லம் சுத்தக்கூடாது... கோயில் உள்ள போய், நடந்துதான் சுத்தணும் அப்படின்னு சொன்னேன். தம்பி படு ஷார்ப். சார் கோச்சுகாதீங்க, அப்படின்னு சொல்லிட்டு, ஒரு ஓரமா வண்டியை நிறுத்திபிட்டு, அங்கன யார் கிட்டயோ, அண்ணே, கோயமுத்தூர் வழி எதுண்ணேன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார். திடீரென லவுட் ஸ்பீக்கரில், டொயோட்டா இன்னோவா 4511 வண்டியை எடுங்க அப்படின்னு. ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சு திரும்பவும் அதே மாதிரி ஒரு லவுட் ஸ்பீக்கரில் ஒரு குரல். நமக்கு சொந்த வண்டியா இருந்தாவண்டி நம்பர் ஞாபகம் இருக்கும். இதுவோ வாடகை வண்டி. ஓட்டுனர் மட்டும் எனக்கு நம்பகமான, 10 வருடங்களுக்கு மேல் பழக்கமான ஓட்டுனர். அவருக்கும் வண்டி நம்பர் ஞாபகம் இல்லை போலிருக்கு. அடுத்து வந்த லவுட் ஸ்பீக்கரில் வந்த குரல், யோவ் வெள்ளச் சட்ட, 4511 பக்கத்துல நிக்கற, வண்டி எடுகங்ய்யா.. ஒருத்தன் இங்க கத்திகிட்டு இருக்கிறது காதுல விழல.. அதுல பாருங்க அன்னிக்கு நானும் வெள்ளைச் சட்டை, ஓட்டுனரும் வெள்ளைச் சட்டை போட்டுகிட்டு இருந்தோம்.

சரி அப்படி, இப்படின்னு வண்டிய எடுத்து, வழி விசாரிச்சுகிட்டு, கிளம்பியாச்சு. சிலர் பொள்ளாச்சி வழி என்றும், சிலர் கொடை ரோடு, ஓட்டன் சத்திரம் வழி என்றும் சொன்னார்கள். இந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம் என்று, நண்பர் வால்பையனுக்கு தொலைப்பேசி அழைத்து அவரிடம் வழி கேட்க, அவரும் ஒரு வழி சொன்னார். அவரிடமே வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் அவர்கள் தொலைப்பேசி நம்பர் இரண்டையும் வாங்கிக் கொண்டேன்.

பிறகு ஆரம்பிச்சது, அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களுக்கு... தொந்திரவு...

அண்ணே, கொடை ரோடு வந்தாச்சு.. இப்ப எந்த ரூட்ல வரணும். அண்ணே ஓட்டன் சத்திரம் வந்தாச்சு இப்ப எந்த ரூட்ல வரணும், வழில வரும் ஊர் பேர் எல்லாம் சொல்லி வழி கேட்டாச்சு. அவரும் வழி சொல்லி, சொல்லி சோர்ந்துப் போயிட்டார். கடைசியில் அண்ணே அலங்கார் கிராண்டேயில் ரூம் போட்டு இருக்கு இப்ப சூலூர் வந்தாச்சு எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டோம். ராமநாதபுரம் சிக்னலில் வலதுபுறம் என்று சொன்னார். நம்ம ஓட்டுனர் அதை எல்லாம் விட்டு விட்டு நேரா ரயில்வே ஸ்டேஷன் கிட்ட வந்துட்டார். அண்ணனை திரும்பவும் கூப்பிட்டு அண்ணே ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு, இப்ப எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டேன். அண்ணன், அய்யய்யோ ஏன் ஸ்டேஷனுக்கு வந்தீங்க.. சரி சரி பரவாயில்லை அப்படியே நேரா போங்க, ஒரு மேம்பாலம் வரும். அதுக்கு கீழால போயி ஒரு யூ டர்ன் எடுத்துகிட்டு நேரா போனா சிட்டி டவர் வரும். அதற்கு எதிர்த்தாற் போல் அலங்கார் கிராண்டே இருக்கு என்றார். ஒருவழியா அலங்கார் கிராண்ட் டே வந்து, வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன், சுரேஷ் குமார் அண்ணன், செல்வேந்திரன் அண்ணன் நால்வருக்கும் நாங்க தங்கியிருந்த ரூம் விவரத்தை சொன்னோம். அண்ணன்கள் நாலவரும் மாலை வருவதாக வாக்களித்தப் படி, முதலில்,வேலன் அண்ணாச்சி செல்வேந்திரன் அண்ணன் கூட வந்தார். பின்னர் சஞ்சய் அண்ணன் வந்தார். கடைசியாக சுரேஷ்குமார் அண்ணன் வந்தார்.

பின்னர் நால்வரும் பேச ஆரம்பித்தோம். வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களின் வியாபர நுணுக்கங்களைப் பற்றியும், அவரது தொழில் பற்றியும் பேச்சு போய்க்கொண்டு இருந்தது. அண்ணன் செல்வேந்திரன் அவரது வேலைப் பற்றியும், அது சம்பந்தமாகவும் உரையாடிக்கொண்டு இருந்தோம்.

அண்ணன் செல்வேந்திரன் அவர்கள் கஸ்டமர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைப் பற்றி சொன்னார். ஒரு கஸ்டமர் நமது நல்ல சர்வீசை யாராவது இருவரிடம் தான் நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார். ஆனால் அதே கஸ்டமர் நமது மோசமான சர்வீசைப் பற்றி 50 பேரிடம் புகார் தெரிவிப்பார். அதனால் எந்த மாதிரியான கஸ்டமாராக இருந்தாலும் அவரை மதித்து, நல்ல சர்வீஸ் வழங்க வேண்டும். முடியாது என்பதைக்கூட நளினமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அருமையான கருத்து. நன்றி செல்வேந்திரன்.

செல்வேந்திரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால், அவரால் எங்களுடன் அதிக நேரம் அமர்ந்து பேச இயலாமல் போய்விட்டது.

சஞ்சய் அண்ணன் அவர்கள் கூட பேச ஆரம்பித்தால், நமக்கெல்லாம் சிரித்து சிரித்து வயறு புண்ணாகிவிடும். அப்படி ஒரு பேச்சுத்திறன்.

தம்பி சுரேஷ் குமார்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லுவார். அருமையான தம்பி. என்னைப் பார்க்க வந்துவிட்டு, அவர் பேசிக் கொண்டு இருந்தது என்னவோ, கேமிராவைப் பற்றியும், அதனுடைய டெக்னிகள் டீடெயில் பற்றியும். என்னிடம் கேமிரா பற்றி பேசுவது என்பது, குருடனை ராஜபார்வை பார் என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது.

பின்னர் நாங்க அனைவரும் இரவு உணவுக்காக அங்கே இருந்த உணவகத்திற்குப் போனோம். கவனிப்பு முதலில் சரியாக நடக்கவில்லை. எப்போதும் போல், அவர்களிடம் சற்று கோபமும், கனிவும் கலந்து பேசி, சரி செய்ய வைத்தோம். உணவுத்தரம் நன்றாக இருந்தது.

மிக முக்கியமாக நான் உணவுத் தரத்திற்கு எனக்கு உள்ள அளவு கோல், அடுத்த நாள் என் வயிற்றையோ, உடல் நலத்தையோ பாதிக்காத உணவு நல்ல தரமான உணவு என்பதுதான்.

ஜுலை 3, 2009.

காலை நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பொள்ளாச்சி போய் வந்தோம். இன்று அரவிந்தனின் பிறந்த நாள். காலையிலேயே நண்பர்கள் பலரும் தொலைப் பேசியில் பேசி அரவிந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மதியம் ஒரு நண்பரை பார்ப்பதற்கு சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். அண்ணன் வால்பையன் அவர்கள் ஈரோட்டில் இருந்து எங்களைப் பார்ப்பதற்காக வந்து கொண்டு இருக்கின்றேன் என்று தொலைப் பேசியில் கூறினார். அண்ணன் சுரேஷும் மாலை 6 மணிக்கு வருவதாகக் கூறினார்.

அண்ணன் வால் பையன் சரியாக 6 மணிக்கு வந்தார். அவருடன் நிறையப் பேசிக் கொண்டு இருந்த போது, அரவிந்திற்கு பர்த்டே கேக் வாங்கிக் கொண்டு அண்ணன் சுரேஷ்குமார் வந்தார்.

சுரேஷ் குமாரும், வால்பையன் அறிமுகம் முடிந்த பின், நெடு நேரம், தனிப்பட்ட முறையில் உறையாடிக் கொண்டு இருந்தோம்.

பின்னர், சுரேஷ் குமார் அவர்கள் வாங்கி வந்து இருந்த கேக்கை வெட்டி, அரவிந்தனின் பிறந்த நாள் அமர்க்களமாகக் கொண்டாடப் பட்டது.

இரவு 8 மணியளவில் நெடுநாள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வருவதாகச் சொல்லியிருந்ததால், வால்பையன் அவர்களுடன் உணவருந்த செல்ல இயலவில்லை. சாரி வால் பையன் அண்ணே.


புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு



வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன்


சஞ்சய் அண்ணனும், நானும்.


வடகரை வேலன் அண்ணாச்சி


அரவிந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்க்காக சுரேஷ் குமார் அண்ணன் வாங்கிவந்த கேக்


அண்ணன் சுரேஷ்குமார், அண்ணன் வால்ஸ் & me


பிரபல பதிவர் அண்ணன் வால் பையனுடன்..


ஜூலை 4 அன்று அங்கிருந்து கிளம்பி குன்னூர் போய்விட்டு ஜூலை 6 ம் தேதி அன்று திருப்பூரில் பதிவர்களுடன் லஞ்ச் ஆன் மீட்டிங்.... இது பற்றி விவரமாம அடுத்தப் இடுகையில்..



அது வரை ... தொடரும்

படங்கள் உதவி - அண்ணன் சுரேஷ் குமார்...
என்னோட காமிராவில் படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை. அதனால் படங்கள் கொடுத்து உதவிய அண்ணன் சுரேஷ் குமாருக்கு நன்றிகள் பல.

Wednesday, September 16, 2009

பாசப் பறவைகள் பாகம் - 5

ஜூன் 28, 2009

சென்னைப் பதிவர் சந்திப்பு - மாலை 6.00 மணி.

பதிவர் சந்திப்பிற்கான நேரம் மாலை 5.30 மணி தி.நகர் நடேசன் பூங்கா என்று சொல்லியிருந்தார்கள். நான் அங்கு போகும் போதே மணி 6.00 ஆகிவிட்டது. (எப்போதுதான் சொன்ன நேரத்திற்கு போவோம்ன்னு கேட்கீறங்களா... அதுவும் சரிதான்..).

அங்கு பல பதிவர்களை ஒரு சேர சந்தித்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். எனக்கு ஐயா டோண்டு ராகவன் மற்றும் தண்டோரா இருவருக்கும் மத்தியில் அமர இடம் கிடைத்தது.

அங்கு சந்தித்த பதிவர்கள்

டோண்டு ராகவன், வண்ணத்துப்பூச்சியார், தண்டோரா, கேபிள் சங்கர், நர்சிம், லக்கிலுக், அதிஷா, பைத்தியக்காரன், இணைய நண்பர்களுக்காக ஸ்ரீ, வெண்பூ, இலக்கியா குடந்தை அன்புமணி, பினாத்தல் சுரேஷ், மருத்துவர் ப்ரூனோ, ஜாக்கி சேகர், அக்கினி பார்வை, ஆசிஃப் மீரான்.

என் நினைவில் இருந்து இந்த இடுகையை எழுதுவதால், சிலரது பேர் விட்டுப் போயிருக்கலாம். அவர்கள் மன்னிக்கவும்.

பதிவர் சந்திப்புக்கு முன்பே தண்டோரா அறிமுகமாகியிருந்ததால், ஐயா டோண்டு ராகவன் அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். நெடு நாள் பழகியவர் போல் ரொம்ப நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தார். நான் சென்றபிறகும் பல பதிவர்கள் வந்ததால், எல்லோரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

அண்ணன் ஆசிப் மீரான் அவர்களை, துபையில் சந்தித்து இருக்க வேண்டியது, இங்கு அவரை சந்தித்து சந்தோஷமாக இருந்தது. பல பதிவர்களும் பல விசயங்களைப் பற்றி பேசினார்கள். நான் பதிவர் சந்திப்புக்கு புதியவன் என்பதால் மௌனமாக இருந்தேன்.

சந்திப்பு முடிந்ததும், தேனீர் அருந்த சென்ற போது, மருத்துவர் புருனோ அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. மிக அழகாக, நேர்த்தியாக பேசுகின்றார். தன்னுடைய கருத்துகளில் அவருக்கு உள்ள ஆழ்ந்த அறிவு என்னை மலைக்க வைத்தது. எந்த விசயத்தைய்ம் மேலோட்டமாக பார்க்காமல் ஆழ்ந்து அறிந்து அதைப் புரிந்து கொள்ளும் அவரது பண்புக்கு தலை வணங்குகிறேன். சில நிமிடங்கள் பேசினாலும், அறிவுப் பூர்வமான நண்பருடன் பேசியது பிடித்து இருந்தது.

அதன் பின் ஐயா டோண்டு ராகவன், தண்டோரா, கோபிளார் மற்றும் நண்பர்கள் சிலருடன் சிற்றுண்டி அருந்த சென்றோம். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

அங்குதான் திரைப்படத்துறையில் தண்டோரா, கேபிளார் அவர்களின் ஆழ்ந்த அறிவு புரிந்தது. சில படங்களின் காட்சிகளை அவர்கள் விவரித்த அழகு, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எல்லாம் படம் பார்ப்பதே வேஸ்ட். உதாரணத்துக்கு ஒன்று, கற்பகம் திரைப்படத்தில், மன்னவனே அழலாமா.. பாட்டு எடுத்த விதம், அந்த கேமிரா கோணம், எடிட்டிங் பற்றி எல்லாம் இருவரும் பேசிய பேச்சு இன்றும் மறக்கவில்லை.

ஐயா ராகவன் அவர்கள் எந்த விசயத்தைப் பற்றி பேசினாலும், அவரது அனுபவம் புரிந்தது. அது அரசியல், குடும்பம், வேலை, செக்ஸ் ஜோக் எதுவாக இருந்தலும் ஐயா ராகவன் அவர்கள் ராகவன் தான். அற்புதமான மனிதர். அதன் பிறகு தனிப்பட்ட முறையில் சந்தித்தப் போதும், தொலைப் பேசியில் உரையாடிய போதும், அவரின் மிக உயர்ந்த பண்பு புரிந்தது.

ஜூன் 30, 2009 & ஜுலை 1, 2009 - மதுரை பதிவர் சந்திப்பு

ஜுன் 30, 2009 - காலை 7.00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, வழியில் சில கோயில்களில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, மதுரையை பார்க் ப்ளாசா ஹோட்டலை அடையும் போது மணி 3.00. அங்கிருந்து நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு தொலைப் பேசியில் உரையாடிய போது, அண்ணே உங்களை சரியாக 6.00 மணிக்கு வந்துச் சந்திக்கின்றேன் என்றார்.

சரியாக மாலை 6.00 மணிக்கு நண்பர் ஸ்ரீதர் அவர்கள் கூட எங்களை வந்துப்பார்த்தார். கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக எங்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும். கல்லூரிக்குப் போய்விட்டு, பின் எங்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பின் மறு நாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்னறனர்.

ஜுலை 1, 2009 - மாலை 6.30 மணியளவில், கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர், தேனி சுந்தர், சீனா ஐயா, தருமி ஐயா ஐவரும் ரூமுக்கு வந்திருந்தனர். மதுரைக்காரவுகளே பாசக்காரவுகத்தான். சும்மா சொல்லக்கூடாது, அவங்க பேச்சு, சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியவில்லை. அதிலும் தங்ஸ்க்கு மதுரை (சோழவந்தான்) சொந்த ஊர் என்ற தெரிந்தபின், காண்பித்த பாசம் இருக்கின்றதே, அளவிட இயலாதது. பின்னர் அனைவரும் இரவு விருந்துக்காக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே, roof top Garden க்குச் சென்ன்று உணவு அருந்தினோம்.

மதுரை பார்க் ப்ளாசா ஹோட்டல் பற்றி இந்த இடத்தில் அவசியம் சொல்லியாக வேண்டும். உணவு நன்றாக இருந்தது. பரிமாறப் பட்டதும், அதை செய்தவிதமும் மிக அழகு.

படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.

இந்தச் சந்திப்புக்கு அவசியம் வருகின்றேன் என்று மருத்துவர் தேவா அவர்கள் சொல்லியிருந்தார். ஆனால் தவிர்க்க இயலாத வேலை வந்துவிட்டதால் வர இயலவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். புரிந்து கொள்கின்றேன் மருத்துவரே... அடுத்த முறை இந்தியா வரும் போது அவசியம் சந்திக்கலாம்.










ஜூலை 2, 2009 ...

காலை நாங்கள் அனைவரும் கோவைச் சொல்ல கிளம்பிக் கொண்டு இருந்தோம். நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் வேகமாக வந்து அண்ணே இந்தாங்க என்று ஒரு பார்சல் கொடுத்தார். என்னங்க இது என்றால், இல்லை அண்ணே, இது தாமரை இலை அல்வா என்று நேற்று சொன்னீங்களே, அதுதான் வாங்கி கொடுத்து இருக்கின்றேன். இப்ப அவசரமாக கல்லூரி போக வேண்டும். பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பிவிட்டார்.

மதுரையில் இருந்து கிளம்பி, தம்பி வால்பையனை அழைத்து, வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் இருவரது தொலைப் பேசி நம்பர்களையும் வாங்கி, தொலைபேசியில் கொடுத்த தொல்லைகள் பற்றியும், அவர்களது பாச மழையில் நனைந்தது பற்றியும் அடுத்த பாகத்தில்...

தொடரும்....

டிஸ்கி : இந்த தொடர் எழுதுவது பெரும்பாலும் என்னுடைய ஞாபகசக்தியில் இருந்துதான். அதனால் சிலருடைய பெயர்கள் (அ) செய்திகள் விடுபட்டு இருக்கலாம். நண்பர்கள் தெரிவித்தால் அதை இதனுடன் சேர்த்துக் கொள்ளுகின்றேன்.


Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - விடைத் தெரியாத கேள்விகள்..





ஆந்திரமுதல்வர் திரு. ராஜசேகர ரெட்டி (1949 - 2009)


ஆந்திர முதல்வர் திரு. ராஜசேகர ரெட்டி அவர்கள் இப்போது நம்மிடம் இருந்து மறைந்து விட்டார். அருமையான முதலமைச்சர் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.

ஆந்திர முதலவர் அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டரைப் பற்றிய தகவல்கள் அறிய DGCA website - ல் பார்த்தப் போது கிடைத்த தகவலகள்.

ஆந்திர முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்ள இங்கே சொடுக்கி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ற இடத்தில் APG என்று இட்டுப் பாருங்கள் . http://dgca.nic.in/caris/cofaop/cofaregn1.ASP


அதில் இருந்து மிக முக்கியமான தகவல்கள் :

ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டது 10-11-1998
Model : Bell 430
C of A (Certificate of Airworthiness) Number : 2390
C of A (Certificate of Airworthiness) valid upto : 04-07-2007.

இதைத் தவிர ஆந்திர அரசு கடந்தாண்டு முதலமைச்சருக்காக கிட்டதட்ட ஒரு இத்தாலிய ஹெலிகாப்டர் வாங்கி இருக்கின்றனர். (Augusta AW 139 மாடல்). இதை வாங்கியதற்குச் சொல்லப்பட்ட காரணம் - Bell 430 பறப்பதற்கு ஏற்றதல்ல என்பதுதான்.

கடந்த நவம்பர் முதல் முதலமைச்சர் அவர்கள் புதிய ஹெலிகாப்டரைத்தான் உபயோகப் படுத்திக் கொண்டு இருந்தார்.

எனக்கு தேன்றிய கேள்விகள் இதுதான்...

  • பறப்பதற்கு லாயக்கற்ற ஒரு ஹெலிகாப்டரில் ஒரு மாநில முதல்வருக்கு எப்படி ஏற்பாடு செய்தார்கள்?
  • அதிகாரிகளுக்கு அந்த ஹெலிகாப்டர் சரியாக இருக்கின்றதா எனத் தெரியாதா?
  • மோசமான வானிலையில் அந்த ஹெலிகாப்டர் பறப்பது சிரமம் என்பது அவங்களுக்குத் தெரியாதா?
  • புது ஹெலிக்காப்டர் இருக்கையில் ஏன் பழைய ஹெலிக்காப்டரில் முதல்வர் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்கள்?
  • யார் செய்த தவறு ஒரு மாநில முதல்வரின் உயிரையும், மேலும் 4 பேர் உயிரையும் வாங்கியது?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. யார் பதில் சொல்லப் போகின்றார்கள்?