அண்ணன்
வானம்பாடிகள் கேரக்டர் பற்றி எழுதும் போது, எனக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் பற்றி சொல்ல வேண்டியிருக்கு.. பொய்யும், துரோகமும் சேர்ந்து மனிதனை அழித்த விதம்...
அவர் பெயர் எக்ஸ்... (அவரும் இதைப் படிச்சுகிட்டு இருப்பார் ... அதனால் தான்...)
ரொம்ப நல்லவர், அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் அப்படின்னு ரொம்ப ஆசைப் படுவார், வேலை தெரியாவிட்டாலும் கத்துகிட்டு செய்யணும் ஆசைப் படுவார்... ஒரே ஒரு கஷ்டம்... ரொம்ப பொய் சொல்லுவார். பொய் சொல்வதில் எனக்குத் தெரிந்த வரையில் அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது.
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்... கிட்ட தட்ட ரூ. 30,000/- வாங்கினாலும், சம்பளம் வாங்கிய மறுநாள் மதிய சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. எந்த விதமான கெட்ட பழக்கங்களும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. பல நண்பர்களிடம் விசாரித்த வரையில் எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மனைவியையும் பிரிந்து வாழ்கின்றார். எங்கய்யா வாங்கின சம்பளம் என்றால் எல்லாம் செலவழிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லுவார். ரொம்ப தோண்டி, துருவி கேட்ட பின், கடன் அட்டை, ஏசி கடனில் வாங்கியது என்று ஏகப்பட்ட கடன் வச்சு இருப்பார். ஏசி வாங்கி இருக்கார் ஆனால் வீட்டில் ஏசி கிடையாது.
ஆபிசுக்குள் உட்கார்காந்துகிட்டே, பாங்கில் இருந்து வரும் ஆட்களுக்கு அவர் ஆபிசில் இல்லை என்று பியூனை விட்டு சொல்லச் சொல்லுவார்..
பாங்க் ஆட்களும் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் ஆபிசில் ரிசப்ஷனில் உட்கார்ந்து முயற்சித்த நாட்கள் உண்டு. பாத்ரூம் கூட போகாமல் தன் இடத்திலேயே உட்கார்ந்துப்பார்.
பணத்திற்காக சொல்லும் பொய்கள்...
குழந்தைகள் படிப்பிற்காக பணம் கட்ட வேண்டும்
மாமியாருக்கு உடம்பு சரியில்லை
மனைவிக்கு உடம்பு சரியில்லை
அவருக்கே உடம்பு சரியில்லை
எல்லாவற்றையும் விட கொடுமையானது... குழந்தைக்கு ஆக்சிடெண்ட் என்றும், கை முறிந்துவிட்டது என்றும் சொல்லி பணம் கடன் வாங்கியதுதான். உண்மையில் குழந்தைக்கு ஒன்றுமே ஆகவில்லை.
அவர் மனைவியும் பொருத்துப் பொருத்து பார்த்து, விவாகரத்து வாங்கிட்டுப் போயிட்டார்.
அவர் வேலை செய்த கம்பெனி பங்குதாரர்களுக்குள் தகராறு வந்து மூடிவிட்டார்கள். அவருக்கு மேலதிகாரியாக வேலைப் பார்த்தவருக்கு, இவருடைய தில்லுமுல்லுகள், பொய் அனைத்தும் தெரியும். தெரிந்து இருந்தும், இவருக்கு ஒரு இடத்தில் மாசம் ரூ. 25,000/- கிடைக்கும் படி வேலை வாங்கிக் கொடுத்தார்.
இந்த இடத்தில் அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க முடியாமல், அவர்களுக்கு எதிராக வேலை செய்து, அவர்களும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
பொய் சொல்லி, சொல்லி வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்.
இப்போது இவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்றாலும், இவ்வளவு பொய் சொல்கிறவருக்கு எப்படி உதவுவது. வாழ்க்கையில் குறைந்த பட்சம் ஒருவரிடமாவது உண்மை பேச வேண்டும். வாயைத் திறந்தாலே பொய் என்றால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த நண்பர்(?) தான்.
இந்த இடுகை, சமீபத்தில் அந்த நண்பர்(?) அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு எதிராக செயல் பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டார் எனக் கேள்விப் பட்டதினால் வந்த இடுகை. கோர்வையாக எழுத வரவில்லை. அவர் வேலை செய்த நிறுவனம் பற்றியும், அங்கு இவரை எப்படி மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்பதும் எனக்கு நன்குத் தெரியும். அவர்களே இவரை வேலையை விட்டு தூக்குகின்றார்கள் என்றால், இவரின் பொய் & துரோகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, முதலாளி ரொம்ப நல்லவர், கம்பெனியில் திருடியவனைக் கூட மன்னிச்சு விட்டுவிடுவார்... ஆனால் துரோகத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை என்றார்.
பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.